தேடுதல்

பாப்புவா நியூ கினி இளையோருடன் திருத்தந்தை

கிம்பே மறைமாவட்ட ஆயர் ஜான் போஸ்கோ அவுராம் அவர்கள், திருத்தந்தையை வரவேற்றபோது, பாப்புவா நியூ கினி நாட்டின் இளையோர் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துரைத்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலகின் கடைசி எல்லைவரைச் சென்று விசுவாசிகளைச் சந்திக்க வேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆவல், கனவு இந்த பாப்புவா நியூ கினி நாட்டு திருப்பயணத்தில் நிறைவேறியுள்ளது எனலாம். ஆசியா மற்றும் ஓசியானியாவிற்கான இந்த திருப்பயணத்தில்  முதலில் இந்தோனேசியாவைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒசியானியாப் பகுதியைச் சேர்ந்த பாப்புவா நியூ கினியில் இத்திங்களன்று காலையில் அந்நாட்டு இளையோரைச் சந்தித்ததுடன் அந்நாட்டிற்கான தன் திருப்பயணத்தை நிறைவுச் செய்தார்.

முதலில் Sir John Guise விளையாட்டரங்கில் இடம்பெற்ற இளையோருடன் ஆன சந்திப்பு குறித்து நோக்குவோம். ஏறக்குறைய 20 ஆயிரம் இளையோர் திருத்தந்தையைக் காணவும் அவர் உரைக்குச் செவிமடுக்கவும் காத்திருக்க, அவர்களிடையே ஒரு சிறு திறந்த காரில் வலம் வந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உள்ளூர் நேரம் திங்கள் காலை 9 மணி 45 நிமிடங்களுக்கு, இந்திய நேரம் காலை 5 மணி 15 நிமிடங்களுக்கு இளையோருடன் ஆன சந்திப்பைத் துவக்கிய திருத்தந்தைக்கு முதலில் இளையோர் ஒன்றிணைந்து நடனம் ஒன்றை ஆடி வரவேற்பு அளித்தனர். முதலில் கிம்பே மறைமாவட்ட ஆயர் ஜான் போஸ்கோ அவுராம் அவர்கள், திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். அடுத்த மாதம் 52 வயதாகும் ஆயர் போஸ்கோ அவுராம் அவர்கள், 2003ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கிம்பே மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயராவார். 2019ஆம் ஆண்டில் திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட ஆயர் போஸ்கோ அவுராம் அவர்கள், தன் வரவேற்புரையை ஆங்கிலத்தில் வழங்கினார். அவர், பாப்புவா நியூ கினி நாட்டின் இளையோர் எதிர்கொள்ளும் சவால்களான, குடும்பம் மற்றும் சமுதாயத்தில் கிறிஸ்தவ விழுமியங்களைக் கடைபிடிப்பது, தங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கென மிகக்குறைந்த வாய்ப்புகளையே பெறுவது, சமூகம், அரசு மற்றும் திருஅவையாலும் கூட நிறைவு செய்யப்படாத எதிர்பார்ப்புகளால் எழும் விரக்தி  ஆகியவற்றையும் எடுத்துரைத்தார்.

இளையோர் குழுவால் சில கருத்துக்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இளையோர் குழு ஒன்று திருத்தந்தையின் உருவம் பொறித்த மேல் சட்டைகளை அணிந்துவந்து, கல்வி, கலாச்சாரம், வருங்காலம், சுற்றுச்சூழல் என்ற தலைப்புக்களில் ஓரிரு வரிகளில் கருத்துக்களை வழங்கி சிறு நடனம் மற்றும் இசை மூலம் காட்சிப்படுத்தினர். பொழுதுபோக்கு, சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பத்தால், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தில், கத்தோலிக்க நம்பிக்கை மற்றும் விழுமியங்களுக்கு சான்று பகிர்வதில் உள்ள சவால்களைப பற்றியும், உடைந்த மற்றும் பிரிந்த குடும்பங்களால் நம்பிக்கை இழந்து தவறான போதை பழக்கங்களுக்கு  அடிமையாகி சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலை பற்றியும், குடும்பங்களில் இளையோர் மீதான வன்முறைகளால் ஏற்படும் பேரழிவின் விளைவுகளான தங்களின் நேசிக்கப்படாத மற்றும் மதிக்கப்படாத உணர்வினால் தற்கொலை மற்றும் வீட்டை விட்டு வெளியேறுதல் போன்ற செயல் பற்றியும், இயற்கை  வளங்கள் நிறைந்திருந்த போதிலும் பாப்புவா நியூ கினி  நாட்டின் வறுமை நிலை பற்றியும், பல இளைஞர்கள் தங்களின் பள்ளிக் கல்வியை இடையிலேயே நிறுத்திவிட்டு போதைப் பொருள் கடத்தல், களவு செய்தல் மற்றும் யாசித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது பற்றியும் அந்நிகழ்ச்சியில் இளையோர் எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து ஓர் இளையோரின் சான்று பகர்தல், பாடகர் குழுவின் பாடல், இரு இளையோரின் சான்று பகர்தல் என்பவை தொடர்ந்து இடம்பெற, திருத்தந்தையும் தன் உரையை வழங்கினார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 September 2024, 14:41