நாம் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய தேவை உள்ளது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உயிர்ப்பு என்பது நமது சொந்த முயற்சியாலோ அல்லது ஒரு நாள்காட்டியிலோ நிகழ்வதில்லை. ஆனால் கடவுள் தன் ஒரே மகனையே அளிக்கும் அளவிற்கு இந்த உலகின்மீது அன்புகூர்ந்ததால், உயிர்ப்பு என்பது இயேசுவுக்கு நிகழ்ந்தது (யோவா 3:16) என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
செப்டம்பர் 19, வியாழன் இன்று, பல்வேறு அமைப்புகளையும் சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் Pope Pasqua Together 2025 Initiative என்ற குழுவினரைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
எதிலும் முதலடி எடுத்துவைக்க வேண்டும் என்ற கடவுளின் முன்முயற்சியை நாம் எப்போதும் மறந்துவிடக்கூடாது என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, நமது சொந்த கருத்துக்கள், திட்டங்கள் ஆகிய வட்டத்திற்குள் நம்மை நாமே அடைந்துகொள்ள வேண்டாம் என்றும் அவர்களிடம் அறிவுறுத்தினார்.
உயிர்ப்பு என்பது கிறிஸ்துவுக்குச் சொந்தமானது, மேலும் நாம் பின்பற்ற வேண்டிய வழியை நமக்குக் காண்பிக்கும் ஒருவராக அவரை நாம் அனுமதித்து, அவருடைய சீடர்களாக எப்போதும் இருக்க வேண்டிய அருளைக் கேட்பது நல்லது என்று அறிவுறுத்தினார் திருத்தந்தை.
மனிதர்களைப் போல சிந்திக்காமல், கடவுளைப் போல சிந்திக்க வேண்டும் (காண். மாற்கு 8:33) என்று கூறி தன்னைப் பின்பற்றும்படி பேதுருவுக்கு இயேசு விடுத்த அழைப்பை நாம் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
நாம் சிந்திக்கவும், பகிர்ந்து கொள்ளவும், ஒன்றிணைந்து திட்டமிடவும், இயேசுவை நம் கண் முன்கொண்டு, அவருடைய அழைப்புக்கு நன்றியுடனும், ஒற்றுமையுடனும், அவருடைய சாட்சிகளாக ஆவதற்கு ஆர்வமாகவும், உலகம் நம்புவதற்கும் முயற்சி செய்வோம் (காண்க. யோவா 17:21) என்றும் விண்ணப்பித்தார் திருத்தந்தை.
நாம் ஒன்றிணைந்து நடக்க தேவை உள்ளது. அவ்வாறு செய்வதற்கு, எருசலேம் என்னும் புனித நகரத்திலிருந்து தொடங்கி உலகம் முழுவதும் உயிர்த்தெழுதலின் செய்தியை அறிவித்த திருத்தூதர்களைப் போல நாமும் செய்தால் அது நமக்கு உதவும் என்று வழிகாட்டினார் திருத்தந்தை.
இந்நாளில் நாமும் அமைதியின் இளவரசராம் இயேசுவிடம் திரும்புவோம். அந்த அமைதியை நமக்கும் அருளுமாறு அவரிடம் இறைவேண்டல் செய்வோம் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்