தேடுதல்

இந்நாள் அரசுத்தலைவர், மற்றும் முன்னாள் பிரதமருடன் சந்திப்பு

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் அரசியல், சமூக அதிகாரிகளையும், அரசியல் தூதுவர்களையும் சந்தித்து உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்குப்பின் பாராளுமன்ற இல்லத்தில் சிங்கப்பூர் அரசுத்தலைவர் தர்மன் சண்முகரத்னம் அவர்களைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். தமிழ்ப்பெற்றோருக்கு சிங்கப்பூரில் 1957ஆம் ஆண்டு பிறந்த அரசுத்தலைவர் சண்முகரத்னம், ஹாவேர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற பொருளாதார நிபுணர் ஆவார். இவர் நிதி அமைச்சராகவும், துணைப்பிரதமராகவும், பிரதமராகவும் பதவி வகித்து, பின் 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் 70 விழுக்காட்டிற்கும் மேல் வாக்குகள் பெற்று அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசுத்தலைவருடன் ஆன சந்திப்பைத் தொடர்ந்து பாராளுமன்ற இல்லத்தில் பிரதமர் Wong Shyun Tsai அவர்களையும் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை.

இச்சந்திப்புகளை நிறைவுச்செய்து பாராளுமன்ற இல்லத்திலிருந்து ஏறக்குறைய 11 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் நோக்கிப் பயணமானார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த பல்கலைக்கழகத்தின் கலாச்சார மையத்தில் தான் அரசியல், சமூக அதிகாரிகளையும், அரசியல் தூதுவர்களையும் சந்தித்து, சிங்கப்பூர் நாட்டிற்கான தன் முதல் உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அதற்கு முன்னர் அரசுத்தலைவரின் வரவேற்புரை இடம்பெற்றது.

புகழ்வாய்ந்த தேசிய பல்கலைக்கழகத்தில் அரசியல் தலைவர்கள், சமூகப்பிரதிநிதிகள், அரசியல் தூதுவர்களைச் சந்தித்து உரை வழங்கியபின், அங்கிருந்து ஏறக்குறைய 31 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள புனித பிரான்சிஸ் சேவியர் தியான இல்லம் நோக்கி பயணமானார் திருத்தந்தை. அங்குதான் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் Lee Hsien Loong அவர்களுடன் திருத்தந்தையின் சந்திப்பு ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது. முன்னாள் பிரதமர் Lee Hsien Loong அவர்கள், அந்நாட்டின் முதல் பிரதமர் Lee Kuan Yew அவர்களின் மகனாவார். முன்னாள் பிரதமருடன், புனித பிரான்சிஸ் தியான மையத்திலேயே சந்திப்பை நிறைவுச் செய்து, அம்மையத்திலேயே மதிய உணவருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2024, 15:23