தேடுதல்

திருநிலை அவையினருடன் உரையாடும் திருத்தந்தை திருநிலை அவையினருடன் உரையாடும் திருத்தந்தை   (ANSA)

உடன்பிறந்த உறவு என்பது சமத்துவத்தை ஏற்படுத்துகிறது!

உடன்பிறந்த உறவுடன் வாழ்வது என்றால், ஒருவரையொருவர் வரவேற்பது, ஒருவரையொருவர் வேற்றுமையில் சமமாக அங்கீகரிப்பது என்பது பொருள் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

செப்டம்பர் 4, புதன்கிழமை இன்று, இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள தூய மரியன்னைப் பேராலயத்தில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர், அருள்பணித்துவ மாணவர்கள் மற்றும் பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர்களுக்குத்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய அருளுரை.

அன்பு நிறைந்த சகோதரர் சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் எனது மாலைநேர வணக்கங்கள்.

நம்பிக்கை, உடன்பிறந்த உறவு, பரிவிரக்கம் ஆகிய மூன்றும் எனது இந்தத் திருத்தூதுப் பயணத்திற்காகத் தேர்ந்துகொள்ளப்பட்ட விருதுவாக்கு என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மூன்று நற்பண்புகளும், ஒரு திருஅவையாக, உங்களின் ஒன்றிணைந்த பயணத்தையும், இனரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் வேறுபட்ட உங்களின் குணாதிசயங்களையும் நன்றாக வெளிப்படுத்துகின்றன. ஆகவே, இந்த மூன்றின் அடிப்படையில் எனது சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

நம்பிக்கை

தாவரங்கள் மற்றும் வனவிலங்குகள், எரிசக்தி ஆதாரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பலவற்றின் அடிப்படையில் இந்தோனேசியா பல இயற்கை வளங்களைக் கொண்டுள்ள ஒரு பெரிய நாடு. மேலோட்டமாகப் பார்த்தால், அத்தகைய பெரும் வளங்கள் தற்பெருமை அல்லது ஆணவத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் திறந்த மனதுடனும் இதயத்துடனும் இவற்றைக் கருதும்போது, ​​திருவிவிலியம் நமக்குக் கற்பிப்பதுபோன்று (காண்க. தொநூ 1; சீராக் 42:15; 43:33) இந்த இயற்கை வளங்கள் கடவுளை, பேரண்ட வெளியிலும், நம் வாழ்விலும், இருப்பதை நினைவூட்டுவதாக இருக்கும்.

உண்மையில் கடவுள்தான் இவற்றையெல்லாம் நமக்குக் கொடுக்கின்றார். இந்த இயற்கை வளங்கள் என்பது இந்தோனேசிய மக்களுக்கு கடவுள் வழங்கிய அற்புதமானதொரு கொடை. இது கடவுளின் முடிவற்ற அன்பின் அடையாளம்.  இவற்றை குழந்தைகளின் தாழ்ச்சிநிறை கண்கள் கொண்டு பார்ப்பது நம் கடவுளை நம்புவதற்கும், நம்மை எளியவர்களாகவும் அன்புக்குரியவர்களாகவும் அடையாளம் காண்பதற்கும் (காண்க திபா 8), நன்றியுணர்வு மற்றும் பொறுப்புணர்வுகளை வளர்ப்பதற்கும் உதவுகிறது.

உடன்பிறந்த உறவு

உடன்பிறந்த உறவுடன் வாழ்வது என்றால், ஒருவரையொருவர் வரவேற்பது, ஒருவரையொருவர் வேற்றுமையில் சமமாக அங்கீகரிப்பது என்பது பொருள். இதுவும் இந்தோனேசிய தலத்திருஅவைக்கு மிகவும் பிரியமான ஒரு மதிப்பு மற்றும் கலாச்சார, இன, சமூக மற்றும் மத நிலையில் எதிர்கொள்ளும் பல்வேறு உள் மற்றும் வெளிப்புற உண்மைகளை நீங்கள் வெளிப்படுத்தும் வெளிப்படைத்தன்மையின் வழியாக வெளிப்படுத்தப்படுகிறது.  குறிப்பாக, உங்கள் தலத்திருஅவை அனைவரின் பங்களிப்பையும் மதிக்கிறது மற்றும் ஒவ்வொரு அமைப்பிலும் தாராளமாக உதவி வழங்குகிறது

இது முக்கியமானது, ஏனென்றால் நற்செய்தியை அறிவிப்பது என்பது, நமது நம்பிக்கையை திணிப்பதோ அல்லது மற்றவர்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்படுவதோ அல்ல, மாறாக, கிறிஸ்துவைச் சந்திக்கும் மகிழ்ச்சியை (காண். 1 பேதுரு 3:15-17) எப்போதும் மிகுந்த மரியாதையுடன் பகிர்ந்துகொள்வதை அர்த்தப்படுத்துகிறது.

பரிவிரக்கம்

பரிவிரக்கம் என்பது ஏழைச் சகோதரர் சகோதரிகளுக்குத் தர்மம் செய்வதில் இல்லை என்பதை நாம் அறிவோம். காரணம், அவர்களுக்குத் தர்மம் செய்வது என்பது, நமது சொந்த பாதுகாப்பு மற்றும் வெற்றியின் உயரத்திலிருந்து அவர்களைக் கீழே பார்க்கிறோம். மாறாக, பரிவிரக்கம் என்பது நம்மை ஒருவரையொருவர் நெருக்கமாக இழுத்து, கீழ்நிலையில் இருப்பவர்களைத் தொடுவதற்குத் தடையாய் இருப்பவை அனைத்தையும் அகற்றி, அவர்களை உயர்த்தி, அவர்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது.

உலகைத் தொடர்ந்து நடத்துவது சுயநலத்தின் கணக்கீடுகள் அல்ல, இது பொதுவாக படைப்பை அழித்து சமூகங்களை பிளவுபடுத்துகிறது, ஆனால் பரிவிரக்கம் என்பது,  மற்றவர்களுக்குப் பிறரன்புப் பணியாற்றுவதாகும். பரிவிரக்கம் வாழ்க்கையின் உண்மையான பார்வையை மறைக்காது.  மாறாக, அன்பின் ஒளியில் விடயங்களைச் சிறப்பாகப் பார்க்க வைக்கிறது.

இந்தப் பேராலயத்தில் இருக்கும் அன்னை மரியா பரிவிரக்கத்தின் சிறந்ததோர் அடையாளமாகத் திகழ்கிறார்.  தங்கள் மகிழ்ச்சி மற்றும் துயரங்கள், உழைப்பு மற்றும் நம்பிக்கைகளுடன் இறைத்தந்தையின் இல்லத்திற்குள் நுழையும் அவரின் மக்களை கவனித்துப் பாதுகாத்துக்கொள்கிறார்.

இறைநம்பிக்கையில் வலுவாகவும், உடன்பிறந்த உறவில் அனைவருக்கும் திறந்த இதயமுடனும், பரிவிரக்கத்தில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பதன் வழியாகவும் உங்கள் பணியைத் தொடர நான் உங்களை ஊக்குவிக்கிறேன். ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் பல நல்ல காரியங்களுக்காக நான் உங்களை ஆசீர்வதிக்கின்றேன். நன்றி கூறுகின்றேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 September 2024, 14:27