தேடுதல்

இலக்ஸம்பர்க் நோக்கிய திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம்

செப்டம்பர் 26 வியாழன் காலை லக்ஸம்பர்க்கில் உள்ள மன்னர் வழி வந்த அரசர், பிரதமர் ஆகியோரைச் சந்தித்து உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் உயர்மட்ட அதிகாரிகளுக்கு தனது முதல் உரையினை வழங்கினார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

வழக்கமாக எந்த ஒரு நாட்டிற்கு திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளும் முன்னும், அன்னை மரியாவிடம் தனது பயணத்தை ஒப்படைத்து செபிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்முறையும் உரோமில் உள்ள மேரி மேஜர் பெருங்கோவில் சென்றார்.

பெல்ஜியம், இலக்ஸம்பர்க் நோக்கிய தனது 46ஆவது திருத்தூதுப்பயணம் நல்லமுறையில் நடைபெற அன்னை மரியின் அருள் வேண்டி செப்டம்பர் 25 புதன்கிழமை மாலை உரோமில் உள்ள மேரிமேஜர் பெருங்கோவில் சென்று, அங்குள்ள அன்னை மரியின் திருப்படத்தின் முன் சிறிது நேரம் செபித்து, தனது 46 ஆவது திருத்தூதுப் பயணத்தை அன்னை மரியாவிற்கு அர்ப்பணித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 26 வியாழக்கிழமை தனது 46 ஆவது திருத்தூதுப் பயணத்தைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் இருந்து விமான நிலையத்தை நோக்கிச் செல்வதற்கு முன்பு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் ஆலய வளைவுகளில் உள்ள தூண்களிலும் தெருக்களிலும் வாழும் வீடற்ற ஏழை எளியோர்கள், ஆண்கள், பெண்கள் என ஏறக்குறைய 10 பேரை சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்தார். அவர்களுடன் திருப்பீடத்தின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான கர்தினால் Konrad Krajewski அவர்கள் உடன் இருந்தார். அவர்கள் அனைவரும் திருத்தந்தையின் 46ஆவது திருத்தூப்பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்து அவரை வழியனுப்பி வைத்தனர்.  

உரோம் உள்ளூர் நேரம் காலை 7.40 மணியளவில் அதாவது இந்திய இலங்கை நேறம் காலை 11. 40 மணியளவில் வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 29 கிமீ காரில் பயணம் செய்து 8.05 மணியளவில் உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையம் வந்தடைந்தார். காலை உணவை விமானத்திலேயே எடுத்துக்கொண்ட திருத்தந்தை அவர்கள், 1,170 கி.மீ தூரத்தை 1 மணி நேரம் 55 நிமிடங்கள்  விமானித்தில் பயணித்து இலக்ஸம்பர்க் Findel பன்னாட்டு விமான நிலையத்தை உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு வந்தடைந்தார். விமானத்தில் பத்திரிக்கையாளர்கள் கர்தினால்கள், ஆயர்கள், செய்தித்தொடர்பாளர்கள் என ஏறக்குறைய 60 பேரை உடன் அழைத்துச்சென்றார் திருத்தந்தை. இப்பயணத்தின்போது தான் கடக்க இருக்கும் நாடுகளான இத்தாலி, ஆஸ்திரியா, ஜெர்மனி, பெல்ஜியம், இலக்ஸம்பர்க் ஆகியா நாடுகளின் அரசுத்தலைவருக்கு தனது பயணம் குறித்த தந்திச்செய்தியினையும் அனுப்பியுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 September 2024, 14:22