தேடுதல்

இலக்ஸம்பர்க் மக்கள் மத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் இலக்ஸம்பர்க் மக்கள் மத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ்  (AFP or licensors)

இலக்ஸம்பர்க்கில் கத்தோலிக்கத் தலத்திருஅவை

இலக்ஸம்பர்க் நாட்டில், 2.586 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வாழும் 6,54,098 மக்களில் 2,71,000 பேர் கத்தோலிக்கர்கள். அதாவது 41.43 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்கள்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இலக்ஸம்பர்க்

இலக்ஸம்பர்க் மேற்கு ஐரோப்பாவில் உள்ள, முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு சிறிய நாடு ஆகும். ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகள் இதன் அண்டை நாடுகளாக உள்ளன. 2,586 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு கொண்ட இந்த நாட்டில் ஆறு இலட்சத்து ஐம்பத்து நான்காயிரம் மக்கள் வாழ்கின்றனர். இலக்ஸம்பர்கில், அரசியல் சட்ட அமைப்புக்குட்பட்ட முடியாட்சியுடன் நாடாளுமன்ற மக்களாட்சி செயல்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, ஐக்கிய நாடுகள் போன்ற அமைப்புகளின் நிறுவன உறுப்பினராக இலக்ஸம்பர்க் பங்கு வகித்திருக்கிறது. இதன் மூலம் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ ஒத்துழைப்புக்கான இலக்ஸம்பர்க்கின் புரிந்துணர்வு அறிந்துகொள்ளப்படுகின்றது. நாட்டின் மிகப்பெரிய நகரமும் தலைநகரமுமான இலக்ஸம்பர்க் நகரம், ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் தலைமை இடமாக விளங்குகிறது. பிரெஞ்சு மற்றும் இலக்ஸம்பர்கிய மொழியே அன்றாட வாழ்வில் அதிகமாகப் பயன்பட்டாலும், ஜெர்மன் மொழியும் அலுவலக மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இலக்ஸம்பர்க்கில் கத்தோலிக்க திருஅவை

சமய சார்பற்ற நாடாக இருந்த போதிலும், இலக்ஸம்பர்கில் உரோமைக் கத்தோலிக்கர்கள் மிகுந்த அளவில் உள்ளனர். 2.586 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வாழும் 6,54,098 மக்களில் 2,71,000 பேர் கத்தோலிக்கர்கள்.  அதாவது 41.43 விழுக்காட்டினர். மொத்தம் 275 பங்குத்தளங்கள், 985 தலத்திருஅவை மேய்ப்புப்பணி நிலையங்களும் இங்கு உள்ளன. இலக்ஸம்பர்க் தலத்திருஅவையில் மூன்று ஆயர்கள், 121 மறைமாவட்ட அருள்பணியாளர்கள், 49 துறவற அருள்பணியாளர்கள், 20 நிரந்தர திருத்தொண்டர்கள், 13 ஆண் துறவறத்தார், 225 பெண் துறவறத்தார், 12 அருள்பணித்துவ மாணவர்கள் உள்ளனர். இலக்ஸம்பர்க் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் இயேசு சபை அருள்பணியாளரான கர்தினால் Jean-Claude Hollerich ஆவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 September 2024, 14:36