இலக்ஸம்பர்க் கிராண்டுகாலே அரசு மாளிகையில் திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
கிராண்ட்டூகாலே அரச மாளிகையானது இலக்ஸம்பர்க் அரசின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் நடக்கும் இடமாகவும் நகரத்தின் இதயம் போன்றும் அமைந்துள்ளது. 1572 ஆம் ஆண்டு ஆடம் ராபர்ட்டி என்பவரால் வடிவமைக்கப்பட்டு கட்ட தொடங்கப்பட்டு 1795ஆம் ஆண்டு வரை பணிகள் நடைபெற்றன. 1817 ஆம் ஆண்டில் நடைபெற்ற வியன்னா காங்கிரசைத் தொடர்ந்து லக்ஸம்பர்க் அரசின் மாளிகையாக மாற்றப்பட்டு அரசர் முதலாம் குலியெல்மோ இம்மாளிகையில் தங்கி பணியாற்றினார். 1890 ஆம் ஆண்டில், அரசராக இருந்த அரசர் அடோல்பஸ் என்பவர், அரச மாளிகையைப் புதுப்பித்து அரசு அலுவலகம் மற்றும் தங்குமிடமாக மாற்றினார். அரசர் அடோல்பஸ் ஆட்சியின் கீழ், அரசமாளிகையானது முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு, பெல்ஜிய கட்டிடக் கலைஞர் கெடியன் போர்டியாவ், லக்சம்பர்க் கட்டிடக் கலைஞர் சார்லஸ் அரெண்ட் ஆகியோரால் ஒரு புதிய பிரிவும் கட்டப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இசைக்கச்சேரிகள் நடக்கும் அரங்கமாகவும், உணவகமாகவும் பயன்படுத்தப்பட்டது. அங்கிருந்த பெரும்பாலான பொருள்கள், கலை சேகரிப்புகள் மற்றும் நகைகள் சூறையாடப்பட்டன. 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று இலக்ஸம்பர்க் நாட்டை மீண்டும் கைப்பற்றி நாட்டை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தார் அரசி கர்லோத்தா. 1991 மற்றும் 1996 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் முந்தைய பெருமையை மீட்டெடுக்கும் பெரிய மறுசீரமைப்பு பணிகளுக்கு அரச மாளிகையானது உட்பட்டது.
இலக்ஸம்பர்க் அரசமாளிகையை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை மாளிகையின் நுழைவுவாயிலில் அரசர் ஹென்றி ஆல்பர்ட் கபிரியேல், அரசி Maria Teresa Mestre வரவேற்றனர். மாளிகையில் உள்ளே உள்ள அறையில் தனது வருகையைப் பதிவு செய்யும் விதமாக அரசுப் புத்தகத்தில் கையொப்பமிட்டார். அதன்பின் அரசர் மற்றும் அவரது குடும்பத்தார் திருத்தந்தையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதைத் தொடர்ந்து பரிசுப்பொருள்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அரசர் ஹென்றி, அரசி மரியா ஆகியோரை தனியாக சந்தித்து சிலமணித்துளிகள் உரையாடிய திருத்தந்தை அவர்கள் அதன்பின் பிரதமருடனும் தனியாக உரையாடினார்.
பரிசுப்பொருள்கள் பரிமாற்றம்
லக்ஸம்பர்க் அரசருக்கு தனது திருத்தூதுப்பயணத்திற்கான நினைவுப் பதக்கம் ஒன்றை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். பதக்கத்தின் ஒருபுறத்தில் லக்சம்பர்க்கின் பாதுகாவலியான அன்னை மரியாவின் திருஉருவம், அதற்கு பின் லக்ஸம்பர்க் நோத்ரே டேம் பேராலயம் மற்றும் புரூக்செல்சில் உள்ள கொகெல்பர்க் திரு இருதய ஆலயமும் பொறிக்கப்பட்டுள்ளது. நோத்ரே டேம் ஞானத்தின் இருப்பிடமான அன்னை மரியின் பேராலயத்தில் தான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலக்ஸம்பர்க் அரசு அதிகாரிகள் மற்றும் தலைவர்களை சந்திக்கின்றார். புருக்சேல்ஸ் இல் உள்ள கொகெல்பர்க் திருஇருதய ஆலயத்தில் அங்குள்ள தலத்திருஅவை தலைவர்கள் மற்றும் பணியாளர்களைச் சந்திக்கின்றார்.
பதக்கத்தின் மேல் புறம் தூய ஆவியின் உருவமான புறாவும் கீழ்ப்புறம், இருபக்கத்தில் இருந்து வரக்கூடிய கரங்களானதும் பொறிக்கப்பட்டுள்ளன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தும், வரவேற்றல், செயல்படுதல், ஆதரவளித்தல், விருந்தோம்புதல் போன்றவற்றை வலியுறுத்தும் வகையில் இக்கரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பதக்கத்தைச் சுற்றி கீழே இலக்ஸம்பர்க் மற்றும் பெல்ஜியம் திருத்தூதுப்பயணம் என்றும், 26 செப்டம்பர் 2024 என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்