தேடுதல்

பெல்ஜியம் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு திருத்தந்தையின் உரை

மனித வாழ்க்கைக்கும் சிந்தனைக்கும் புதிய ஆற்றல் அளிக்கும் மூலங்களாகவும், சமூகத்தின் சவால்களை எதிர்கொள்வதற்கான மூலாதாரங்களாகவும் பல்கலைக்கழகங்கள்

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

பெல்ஜியம் நாட்டின் Leuven கத்தோலிக்க பல்கலைக்கழக பேராசியர்களுக்கு திருத்தந்தை அந்நாட்டில் வழங்கிய உரையின் சுருக்கம்:

உங்களிடையே இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு பல்கலைக்கழகத்தின் முதல் பணி ஒருங்கிணைந்த உருவாக்கத்தை வழங்குவதாகும், இதனால் மாணவர்கள் நிகழ்காலத்தை  புரிந்துகொள்வதற்கும், எதிர்காலத்திற்கான திட்டமிடலுக்கும் தேவையான கருவிகளைப் பெறமுடியும்.

மனித வாழ்க்கைக்கும் சிந்தனைக்கும் புதிய ஆற்றல்  அளிக்கும் மூலங்களாகவும், சமூகத்தின் சவால்களை எதிர்கொள்வதற்கான மூலாதாரங்களாகவும் பல்கலைக்கழகங்கள்  செயல்படுகின்றன.   பல்கலைக் கழகங்கள் பண்பாட்டையும் சிந்தனைகளையும் உருவாக்குபவையாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக மனித முன்னேற்றத்தின் சேவையில் உண்மையைத் தேடும் பேரார்வத்தை ஊக்குவிப்பதாகவும் உள்ளன. சிறப்பாக  உங்களைப் போன்ற கத்தோலிக்க பல்கலைக்கழகங்கள், எப்போதும் புதிய சூழ்நிலைகளுக்கும் கருத்துக்களுக்கும் திறந்த மனம் கொண்ட, திருஅவையின் வாழும் பாரம்பரியத்தின், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினுடைய நற்செய்தியின்   புளித்த மாவு, உப்பு மற்றும் ஒளியாக ஒரு  தீர்க்கமான பங்களிப்பை வழங்க அழைக்கப்பட்டுள்ளன.

அறிவின் எல்லைகளை விரிவுபடுத்துங்கள்! கருத்தாக்கங்களையும் கோட்பாடுகளையும் பெருக்குவதற்குப் பதிலாக, வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கும் வாழ்வினைப் பற்றி  பேசுவதற்குமான முக்கியமான இடங்களாக பல்கலைக்கழகங்களை உருவாக்குங்கள்.

நாம் இந்நாட்களில்,  வரையறுக்கப்பட்ட எல்லைகளுடன் ஒரு தெளிவற்ற சூழ்நிலையை எதிர்கொள்கிறோம். ஒருபுறம், உண்மையைத் தேட மறுக்கும் ஒரு கலாச்சாரத்தில் நாம் மூழ்கியிருக்கிறோம். அதாவது,  தேடும் ஆர்வத்தை இழந்துவிட்டோம். மறுபுறம், பல்கலைக்கழக சூழல்களிலும் பிற இடங்களிலும் உண்மை பற்றிய கேள்வி எழும்போது, நாம் பெரும்பாலும் ஒரு பகுத்தறிவு அணுகுமுறைக்குள் விழுந்து விடுகிறோம். அதாவது,  பரிசோதனைகள் வழி அளவிடக்கூடிய  விடயங்களை மட்டுமே உண்மை என்று கருதும் நிலைக்குத்  தள்ளப்படுகிறோம். இந்த இரண்டு நிகழ்வுகளிலும், எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

முதல் வகை வரம்பைப் பொறுத்தவரை, ஒரு வகையான அறிவுசார் சோர்வை நாம் காண்கிறோம். இரண்டாவது வகையான வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்கு திரும்பினால், இன்று நாம் மீண்டும் ஒரு தொழில்நுட்ப கலாச்சாரத்தால் கட்டுப்படுத்தப்பட்ட அதேவேளை ஆன்மாவை ஒதுக்கிவைக்கும்  பகுத்தறிவாதத்திற்குள் விழும் ஆபத்தைக் கொண்டிருக்கிறோம்.

அதாவது மனிதர்கள் வெறும் பொருளாகக் கருதப்படும்போது, கண்ணுக்குத் தெரிவதை மட்டுமே நம்பி யதார்த்தமான உண்மைகள்  கட்டுப்படுத்தப்படும்போது, கணித மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அறிவியல் மட்டுமே பகுத்தறிவு என ஏற்றுக்கொள்ளும்போது,  நமது வியப்புணர்வையும், வியப்படையும் திறனையும் இழக்கிறோம். இதையெல்லாம் தாண்டி நம் கண்களை மேல் நோக்கி எழுப்பி, நம்மைக் குறித்த கேள்விகளை நாம் எழுப்ப வேண்டும். நாம் யார்? நம் இலக்கு என்ன? நம் வாழ்வின் பொருள் என்ன? என்ற கேள்விகள் எழுப்பப்படவேண்டும்.

அன்பான பேராசிரியர்களே, அறிவின் மந்தநிலை அல்லது ஆன்மாவற்ற  பகுத்தறிவில் விழுவதற்குப் பதிலாக,  ஆண்டவரே, எங்கள் எல்லைகளை விரிவுபடுத்தும், இன்றைய சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலைத் தாரும் என்று  இறைவனிடம் இறைஞ்சுவோம்.

நீங்கள் உங்கள்  எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளீர்கள், துன்புறுவோரை வரவேற்க,கல்வி கற்க  உங்கள் கரங்களைத் திறந்துள்ளீர்கள். மேலும் உலகில் நல்ல "புளித்த மாவு" என மூழ்கி, மனிதகுலத்தின் பொது நன்மைக்கு பங்களிக்கும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்கும்  பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனவே உங்கள் எல்லைகளை மேலும்  விரிவுபடுத்துங்கள்! உண்மையைத்  தேடுபவர்களாக  இருங்கள், உங்கள் உற்சாகம் குறைய அனுமதிக்காதீர்கள், இல்லையெனில் நீங்கள் அறிவின் மந்த நிலைக்கு அடிபணிந்துவிடுவீர்கள். இன்றைய  உலகின் பெரும் சவால்களை எதிர்கொள்ள   முயலும்போது, பலவீனமானவர்களிடத்தில்   இரக்கம் மற்றும் கவனம் செலுத்தும் கலாச்சாரத்தை உருவாக்குவதில் கதாநாயகர்களாக இருங்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 September 2024, 14:58