தேடுதல்

 துறவு சபையினரைச் சந்திக்கும் திருத்தந்தை துறவு சபையினரைச் சந்திக்கும் திருத்தந்தை   (VATICAN MEDIA Divisione Foto)

உங்கள் துறவு சபையின் தனிவரத்தை ஒளிரச் செய்யுங்கள்!

உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு சாட்சியமளிப்பதற்கும் திருஅவையில் மேற்கொள்ளப்படும் கடவுளின் பணிக்கு ஒத்துழைப்பதற்கும் எப்போதும் புதிய வழிகளைக் கண்டறிய இயேசு மற்றும் மரியாளின் தூய்மைமிகு இதயங்கள் உங்களைத் தூண்டட்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடவுளுடைய திருவுளத்தை கவனமாகக் கேட்டறியவும், கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவும் தான் அழைப்புவிடுப்பதாகக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 19 வியாழன் இன்று, இயேசு மரி திருஇதயதங்களின் துறவு சபையினரையும், இறை இரக்க மீட்பர் சபையினரையும் (Congregation of the Sacred Hearts of Jesus and Mary and to the Sisters of the Divine Savio) அவர்தம் பொதுப் பேரவைகளை முன்னிட்டு திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.

சீடர்களைப் போலவே, அவர்களும் இயேசுவின் குரலைக் கேட்கவும், அவரைப் பற்றிய சிந்தனையை ஆழப்படுத்தவும், அவரில் மனுவுருவெடுத்த கடவுளின் அன்பை வாழவும், அறிவிக்கவும், குறிப்பாக மிகவும் தேவையில் இருப்போருக்குப் பணியாற்றுவதன் வழியாகவும், நற்கருணை மற்றும் பரிகார இறைவேண்டல் வழியாகவும் அழைக்கப்படுகிறார்கள் என்றும் கூறினார்.

நம்பிக்கையுடனும் மனத்தாழ்மையுடனும் கிறிஸ்துவைப் பின்பற்றுவதன் வழியாக மட்டுமே உங்கள் சபையின் கட்டமைப்புகளும், ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பரவலும், மனித வரலாற்றின் தற்போதைய தருணத்தில் உங்கள் தனிவரத்தை ஒளிரச்செய்யும் ஒரு புதுப்பிக்கப்பட்ட வசந்த காலத்தை அனுபவிக்க முடியும் என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

உங்கள் சகோதரர் சகோதரிகளுக்குச் சான்றுபகர்வதற்கும், திருஅவையில் மேற்கொள்ளப்படும் கடவுளின் பணிக்கு ஒத்துழைப்பதற்கும், எப்போதும் புதிய வழிகளைக் கண்டறிய இயேசு மற்றும் மரியாளின் தூய்மைமிகு இதயங்கள் உங்களைத் தூண்டட்டும் என்றும் வாழ்த்தினார் திருத்தந்தை.

நற்செய்தியின் விழுமியங்களால் ஈர்க்கப்பட்ட மற்றும் நிலைநிறுத்தப்பட்ட தெளிந்து தேர்தலின் வழியாக, நீங்கள் உங்களைப் புதுப்பித்துக்கொள்ளவும், இயேசுவோடு ஒன்றித்து வாழவும், உங்கள் சபைகளின் அடித்தளமாக விளங்கும் தனிவரத்திற்கு நீங்கள் உண்மை உள்ளவர்களாக இருக்கவும் விரும்பும் உங்கள் விருப்பம் உங்கள் இதயங்களில் தீவிரமடையட்டும் என்று கூறி தனது நெருக்கத்தையும் இறைவேண்டலையும் உறுதிப்படுத்தி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 September 2024, 15:55