தேடுதல்

பல்மதத் தலைவர்கள் மற்றும் இளம் மாணவர்களுடன் திருத்தந்தை

சிங்கப்பூர் கூட்டத்தில் இந்து மதத்தின் சார்பில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட ராஜ் என்பவர், மதங்களிடையேயான உரையாடலில் சந்திக்கப்படும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

சிங்கப்பூர் இளம் மாணவர் கல்லூரியானது, பள்ளிக்கும் கல்லூரிக்கும் இடையேயான கல்வியை வழங்கும், அதாவது கல்லூரிக்கென மாணவர்களை தயாரிக்கும் கல்வி நிறுவனமாகும். ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்னால் இத்தகைய, P.U.C. என்ற ஓராண்டு படிப்பு, கல்லூரிகளிலேயே கல்லூரி படிப்புக்கான தயாரிப்பு வகுப்புகளாக தமிழகத்தில் இடம்பெற்றிருந்தன.

இந்த சிங்கப்பூரின் கத்தோலிக்க இளம் மாணவர் கல்லூரி 1975ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஆயர் பேரவையால் கட்டப்பட்டதாகும். இதற்கு ஜெர்மன் ஆயர் பேரவையும் சிங்கப்பூர் அரசும், பல நன்கொடையாளர்களும் நிதியுதவி அளித்துள்ளனர். வருங்காலத்தை நன்முறையில் அமைக்கவும், மனித வாழ்வுக்கான மதிப்பீடுகளை மாணவர்களில் உறுதிச் செய்யவும், கத்தோலிக்க மனச்சான்றை உருவாக்கவும், சமூகத்திற்கு சிறந்தமுறையில் பங்களிக்கவும் மாணவர்களுக்கு உதவுவதாக இக்கல்லூரியின் நோக்கம் உள்ளது.

கத்தோலிக்க இளம் மாணவர் கல்லூரியில் உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு, அதாவது இந்திய நேரம் காலை 7.30 மணிக்கு மதத்தலைவர்கள் மற்றும் மாணவர்களிடையேயான சந்திப்பைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். சிங்கப்பூர் கர்தினால் William Goh Seng Chye அவர்கள், முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேச, மாற்றுத்திறனாளி மாணவர்கள் சிலர் ஒன்றிப்பு மற்றும் எதிர்நோக்கு என்ற தலைப்பில் நடனம் ஒன்றை ஆடினர். அதன் பின் சிங்கப்பூர் பண்பாட்டுத்துறை அமைச்சரின் உரை ஒன்றும் இடம்பெற்றது. அடுத்து, இந்து, சீக்கிய மற்றும் கத்தோலிக்க இளையோரின் சான்றுகள் பகிரப்பட்டன. இந்து மதத்தின் சார்பில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட ராஜ் என்பவர், மதங்களிடையேயான உரையாடலில் சந்திக்கப்படும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தார்.  அதனைத் தொடரந்து சீக்கிய மதத்தின் சார்பில் ஒரு பெண்மணியும், கத்தோலிக்க மதத்தின் சார்பில் ஓர் இளம்பெண்ணும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். திருத்தந்தையும், மதங்களிடையேயான உரையாடலில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தே தானும் தயாரித்துள்ளதாகக் கூறி, உரையை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 September 2024, 14:40