தேடுதல்

சிங்கப்பூர் இயேசு சபையினருடன் திருத்தந்தை சிங்கப்பூர் இயேசு சபையினருடன் திருத்தந்தை  (Vatican Media)

சிங்கப்பூர் இயேசு சபையினருடன் திருத்தந்தையின் சந்திப்பு

இயேசு சபையினருடன் ஆன உரையாடல் முழுவதும் அருள்தந்தை பெத்ரோ அருப்பே, மற்றும் சீனாவின் திருத்தூதர் எனப்படும் அருள்தந்தை மத்தேயோ ரிச்சி பற்றியதாக இருந்தது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்பு நேயர்களே, செப்டம்பர் 11ஆம் தேதி புதன்கிழமையன்று தன் இத்திருப்பயணத்தின் கடைசி நாடான சிங்கப்பூர் வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாளில் இயேசு சபை பணியாளர்களைச் சந்தித்து ஒரு மணி நேரம் உரையாடினார்.

தென்கிழக்கு ஆசியா மற்றும் ஒசியானியாவுக்கான அவரது பயணத்தின், நான்காவது நாட்டின் முதல் நாளில், இயேசு சபையினரை சந்திப்பதைத் தவிர, அந்த நாள் திருத்தந்தையின் ஓய்விற்காக ஒதுக்கப்பட்ட நாளாகும். சிங்கப்பூர் நகரத்திலிருந்து அரை மணி நேர பயண தொலைவிலுள்ள, புனித பிரான்சிஸ் சேவியர் தியான மையத்தில் உள்ள ஒரு மண்டபத்தில், புதன்கிழமையன்று 25 இயேசு சபையினர் அங்கு கூடியிருந்தனர். அவர்களுள் சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிற பகுதிகளைச் சார்ந்தவர்களும் இருந்தனர்.

இவர்களில் புதிதாக திருநிலைப்படுத்தப்பட்ட  ஒரு புதிய குருவும், இளவயது மற்றும்  முதிர்ந்த வயதுடையோரும், சில நோய்வாய்ப்பட்ட குருக்களும் இருந்தனர். இச்சந்திப்பானது  வழக்கம் போல்  ஒரு மணி நேரம் நீடித்ததுடன் மென்மையான உடன்பிறந்த உணர்வுடன் அமைந்திருந்தது. இந்த நெருக்கமான, குடும்பம் போன்ற சூழலை விட்டு திருத்தந்தை வெளியே வர விரும்பவில்லை என்று தோன்றியது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கேள்விக்கான தளத்தைத் திறக்க, அக்கேள்விகளானது, இக்காலத்தில் திருஅவை எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி பல்வேறுபட்ட தலைப்புகளில்  அமைந்திருந்தது.

இக்காலத்தில் சவாலாக இருக்கும் ஜெபத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, சமூகம் முன்வைக்கும் சவால்களை, அருள்தந்தை பெத்ரோ அருப்பே அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி, செப உணர்வோடு எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை. அருள்தந்தை அருப்பே அவர்கள் ஸ்பானிய வம்சாவழியைச் சார்ந்தவர். இறை ஊழியராக அறிவிக்கப்பட்டு, அருளாளர் நிலைக்காக ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்  இவர், 1965  முதல் 1983வரை இயேசு சபையினரின் தலைவராக பணியாற்றியவர் என்றும் கூறினார்.

மேலும் திருத்தந்தை அவர்களின் உரையாடலில் அழைத்தல் வாழ்வு உண்மையில் எப்படி  இருக்கிறது என்றும், அழைத்தல் வாழ்வில் நுழைய விரும்பும் இளையோர் அதற்கான பயிற்சிகளைக் கண்டு அஞ்சுவது பற்றியும் விவாதித்ததோடு, இதனால் தங்களின் எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ள வேண்டாம் எனவும், இக்காலத்தின் சவால்களை எதிர்கொள்ள பொருத்தமான உயர்ந்த உருவாக்கத்தினைப் பற்றியும் வலியுறுத்தினார். இந்த உரையாடல் முழுவதும் அருள்தந்தை பெத்ரோ அருப்பே அவர்களையும், சீனாவின் திருத்தூதர் எனப்படும் அருள்தந்தை மத்தேயோ ரிச்சி அவர்களையும் குறித்து எடுத்துரைத்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2024, 14:59