தேடுதல்

சிங்கப்பூர் நாட்டில் திருத்தந்தையின் திருப்பலி

திருத்தந்தையின் சிங்கப்பூர் நாட்டிற்கான வருகை மக்களில் அமைதியையும், நீதியையும் அடிப்படையாகக் கொண்ட வாழ்வை அமைக்க உதவுவதாக என தமிழில் விசுவாசிகள் மன்றாட்டு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

புனித பிரான்சிஸ் சேவியர் மையத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரமுள்ள அந்நாட்டின் தேசிய விளையாட்டரங்கு நோக்கி பயணமானார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த விளையாட்டரங்கில் திருத்தந்தையின் திருப்பலியில் பங்குகொள்ள சிங்கப்பூர் விசுவாசிகள் காத்திருக்க, முதலில் திறந்த காரில் அவர்கள் நடுவே வலம் வந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தையின் திருப்பலி உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்குமேல் துவங்கியது. அப்போது இந்திய நேரம் ஏறக்குறைய பிற்பகல் 3 மணி. ஆங்கிலத்திலேயே இடம்பெற்ற திருப்பலியில் திருத்தந்தை மறையுரை ஒன்றும் வழங்கினார். மறையுரைக்குப் பின் விசுவாசிகள் மன்றாட்டு ஆங்கிலம், சீனம், தமிழ், மலாய் ஆகிய மொழிகளில் இடம்பெற்றது. தமிழ் மொழியில் விசுவாசிகள் மன்றாட்டை வழங்கிய பெண்மணி, திருத்தந்தையின் சிங்கப்பூர் நாட்டிற்கான இந்த வருகை மக்களில் அமைதியையும், நீதியையும் அடிப்படையாகக் கொண்ட வாழ்வை அமைக்க உதவுவதாக என வேண்டினார். திருப்பலியின் இறுதியில் சிங்கப்பூர் கர்தினால் William Goh Seng Chye அவர்கள் திருத்தந்தைக்கு நன்றியுடன் வாழ்த்துக்களையும் தெரிவிக்க, திருப்பலியை நிறைவுச் செய்து புனித பிரான்சிஸ் சேவியர் தியான இல்லம் நோக்கி காரில் பயணம் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அவ்வில்லத்தை அடைந்து அங்கேயே இரவு உணவருந்தி நித்திரையிலாழ்ந்தார் திருத்தந்தை. இத்துடன் திருத்தந்தையின் வியாழன் தின பயணத்திட்டங்கள் நிறைவுக்கு வந்தன.

திருத்தந்தை வெள்ளிக்கிழமையன்று, அதாவது அவரின் திருப்பயணத்தின் இறுதி நாளன்று, காலையில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் ஆகியோரைச் சந்திக்க உள்ளார். அதன்பின் புனித தெரேசா இல்லத்தில் முதியோர் மற்றும் நோயாளிகளைச் சந்தித்த பின் சிங்கப்பூரின் கத்தோலிக்க இளம்மாணவர் கல்லூரியில் பல்மதத்தலைவர்களையும் இளையோரையும் சந்திப்பார். இதில் கத்தோலிக்க, இந்து மற்றும் சீக்கிய இளைஞர்களின் சான்றுகள் இடம்பெறும். இதுவே திருத்தந்தையின் சிங்கப்பூர் நாட்டிற்கான இறுதி நிகழ்வாகும். இங்கு ஓர் உரையும் வழங்கி அங்கிருந்து விடைபெறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏறக்குறைய உள்ளூர் நேரம் நண்பகல் 12 மணியளவில், அதாவது இந்திய நேரம் காலை 9.30 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து விடைபெற்று வத்திக்கான் நோக்கி விமானத்தில் புறப்படுவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2024, 15:41