தேடுதல்

திருத்தந்தையின் வியாழன் திருப்பலிக்கு சிங்கப்பூர் ஒத்திகை திருத்தந்தையின் வியாழன் திருப்பலிக்கு சிங்கப்பூர் ஒத்திகை  (AFP or licensors)

சிங்கப்பூரில் மத நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை

சிங்கப்பூரில் மொத்த மக்கள் தொகையில் புத்த மதத்தினர் 33 விழுக்காடு, கிறிஸ்தவர் 18 விழுக்காடு, இஸ்லாமியர் 15 விழுக்காடு, இந்துக்கள் 5 விழுக்காடு உள்ளனர்,

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

சிங்கப்பூர் என்பது தென்கிழக்காசியாவில் மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ள, பெரிதும் நகரமயமான மிகச்சிறிய நாடாகும். 1963இல் மலேசியாவோடு இணைந்த பகுதியாக பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது. 1965 ஆகஸ்ட் 9ல் மலேசியாவிலிருந்து பிரிந்து, விடுதலை பெற்று தனிக் குடியரசு நாடாக உருவானது.

சிங்கப்பூரின் மக்கள்தொகையில் பெரும்பாலானோர் சீனர். அடுத்து மலாய், மற்றும் சிங்கப்பூர் தமிழர்கள் உள்ளனர். சிங்கப்பூரின் அலுவல்முறை மொழிகளாக ஆங்கிலம், சீனம், மலாய் மொழி, தமிழ் ஆகியவை உள்ளன. ஏறக்குறைய 60 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட சிங்கப்பூரில் 3 இலட்சத்து 95 ஆயிரம் பேர் கத்தோலிக்கர். இங்கு ஒரு மறைமாவட்டமும் மூன்று ஆயர்களும், 156 அருள்பணியாளர்களும், 156 பெண்துறவிகளும், 1817 பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர்களும் உள்ளனர். தலத்திருஅவை 56 கல்வி நிலையங்களை நடத்திவருகிறது.

சிங்க நகரம் என்ற பெயர்கொண்ட சிங்கப்பூரில் மத அடிப்படையில் பார்த்தோமானால் புத்தமதத்தினரே அதிகமாக உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 33 விழுக்காட்டினர் புத்த மதத்தினர். இதற்கடுத்து கிறிஸ்தவர் 18 விழுக்காடாக உள்ளனர். இஸ்லாமியர் 15 விழுக்காட்டினர், தாவோயிசத்தைப் பின்பற்றுவோர் 11 விழுக்காட்டினர், இந்துக்கள் 5 விழுக்காட்டினர், மதச்சார்பற்றோர் 17 விழுக்காட்டினராக உள்ளனர். சிங்கப்பூரின் மக்கள்தொகையில் 74 விழுக்காட்டினர் சீனர்கள், 13.5 விழுக்காட்டினர் மலாய் மக்கள் மற்றும் 9 விழுக்காட்டினர் இந்தியர்கள். இந்த நாட்டின் மொத்த தொழிலாளர்களுள் 38 விழுக்காட்டினர் வெளிநாட்டவர்.

சிங்கப்பூர் நாட்டில் தன் திருப்பயணத்தைத் துவக்கியுள்ள திருத்தந்தை, 13ஆம் தேதி வெள்ளி காலையில் தன் திருப்பயணத்தை நிறைவுச் செய்து அன்று மாலையே  வத்திக்கான் வந்தடைவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 September 2024, 15:39