தேடுதல்

சிங்கப்பூர் நாட்டை வந்தடைந்த திருத்தந்தை

சிங்கப்பூர் நாட்டிற்கு முதல் முறையாக வரும் திருத்தந்தையை வரவேற்க, அந்நாட்டிற்கான திருப்பீடத் தூதுவர் விமானத்திற்குள் சென்று வாழ்த்தி அழைத்து வந்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

சிங்கப்பூர் நாட்டில் உள்ளூர் நேரம் பிற்பகல் 2 மணி 50 நிமிடங்களுக்கு சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்தார் திருத்தந்தை. உலகின் மிகச் சிறந்த விமான நிலையங்களில் இந்த சாங்கி விமான நிலையம் ஒன்றாகும். கடந்த ஆண்டு இது உலகின் மிகச் சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு இந்த ஆண்டு உலகின் இரண்டாவது மிகச் சிறந்த விமான நிலையம் என்று ஒரு படி கீழே இறங்கி வந்துள்ளது. தற்போது உலகின் சிறந்த விமான நிலையமாக கத்தார் நாட்டின் தோஹா ஹமாத் பன்னாட்டு விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தென் கொரியாவின் சியோல் இஞ்சியோன் விமான நிலையம் மூன்றாவது இடத்திலும், ஜப்பானின் டோக்கியோ ஹனேடா விமான நிலையம் நான்காவது இடத்திலும் உள்ளன.

டெல்லி விமான நிலையம், பட்டியலில் 36வது இடத்தையும், பெங்களூரு விமான நிலையம் 59வது இடத்தையும், ஹைதராபாத் விமான நிலையம் 61வது இடத்தையும்,

மும்பை விமான நிலையம் 95வது இடத்தையுமே பிடித்துள்ளன.

இன்று பல்வேறு மதங்களின் மக்களால், மதத்தையும் தாண்டி ஒரு அமைதித் தூதுவராகப் பார்க்கப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்க பல மாதங்களாக தன்னை தயாரித்து வந்துள்ளது சிங்கப்பூர் தலத்திருஅவை. சிங்கப்பூர் நாட்டிற்கு முதல் முறையாக வரும் திருத்தந்தையை வரவேற்க முதலில் சிங்கப்பூர் நாட்டிற்கான திருப்பீடத் தூதுவர் பேராயர் Marek Zalewski அவர்கள் விமானத்திற்குள் சென்று திருத்தந்தையை வாழ்த்தி வரவேற்றார். அதன்பின் விமானத்திலிருந்து இறங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில் சிங்கப்பூர் பண்பாட்டுத் துறை அமைச்சரால் வரவேற்கப்பட்டார். அரசு அதிகாரிகள் தவிர, சமூகத்தலைவர்களின் பிரதிநிதிகள், இளையோர் பிரதிநிதிகள் மற்றும் திருப்பீடத்திற்கான சிங்கப்பூர் தூதுவர் திருமதி Ang Janet Guat Har ஆகியோரும் விமான நிலைய வரவேற்பிற்கு வந்திருந்தனர். அங்கு திருத்தந்தையை நடனமாடி வரவேற்ற 4 குழந்தைகளுள் ஒருவர் தமிழர். இந்த நான்கு குழந்தைகளும் அவரவர் மொழியில் திருத்தந்தையை வரவேற்றனர். தமிழ் பெண் குழந்தை திருத்தந்தையை நோக்கி, ‘சிங்கப்பூருக்கு வருக என வரவேற்கிறோம்’ எனக்கூறி வரவேற்றது.

விமான நிலையத்தில் உரையுடன்கூடிய அதிகாரப்பூர்வ வரவேற்பு நிகழ்ச்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. வரவேற்பைப்பெற்ற திருத்தந்தை, விமான நிலையத்திலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள புனித பிரான்சிஸ் சேவியர் தியான இல்லம் நோக்கிப் பயணமானார். புனித பிரான்சிஸ் சேவியர் தியான இல்லம் என்பது 1997ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தியானங்களை நடத்துவதற்கென உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இந்த தியான இல்லத்தில்தான் சிங்கப்பூரில் பணிபுரியும் இயேசு சபையினரை சந்தித்தார் திருத்தந்தை.

இயேசு சபையினருடன் ஏறக்குறைய ஒரு மணி நேரத்தைச் செலவிட்ட திருத்தந்தை, அந்த தியான இல்லத்திலேயே இரவு உணவருந்தி நித்திரையிலாழ்ந்தார். இத்துடன் அவரின் புதன் தின பயணத்திட்டங்கள் நிறைவுக்கு வந்தன.

சிங்கப்பூரில் திருத்தந்தையை வரவேற்ற தமிழ் குழந்தை
சிங்கப்பூரில் திருத்தந்தையை வரவேற்ற தமிழ் குழந்தை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 September 2024, 15:31