தேடுதல்

நற்செய்தியின் நறுமணத்தைப் பரவச் செய்வோம்!

நீண்ட கிறித்தவ வரலாற்றில் வேரூன்றிய உங்கள் நாட்டிற்கு, நற்செய்தி அறிவிப்பை நோக்கிய புதுப்பிக்கப்பட்ட உத்வேகம் தேவைப்படுகிறது, இதன் வழியாக நற்செய்தியின் நறுமணம் அனைவரையும் சென்றைய செய்ய முடியும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

செப்டம்பர் 10, செவ்வாய்கிழமை இன்று, கிழக்கு திமோரின் தலைநகர் டிலியில் (Dili) உள்ள தூய அமல உற்பவ அன்னைப் பேராலயத்தில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், இருபால் துறவியர், அருள்பணித்துவ மாணவர்கள் மற்றும் பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர்களுக்குத்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய அருளுரை.

அன்பான சகோதரர் சகோதரிகளே, இந்நாளில் நான் உங்களுடன் பெரிதும் மகிழ்கின்றேன், ஏனென்றால் நீங்கள் இந்த நாட்டில் இயேசுவினுடைய சீடர்களாகத் திகழ்கிறீர்கள். நற்செய்திப் பணியில் உங்களின் உழைப்பையும், நீங்கள் எதிர்கொள்ள அழைக்கப்பட்ட சவால்கள் குறித்தும் நான் நினைக்கும்போது யோவான் நற்செய்தியில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள மரியா இயேசுவின் காலடிகளில் நறுமணத் தைலம் பூசுதல் நிகழ்வு குறித்து (யோவா 12:1-11) உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.  

‘மரியா நறுமணத் தைலம் பூசுதல்’ என்னும் இந்நிகழ்வில், நறுமணத்தைப் பாதுகாத்தல், நறுமணத்தைப் பரப்புதல் ஆகிய இரண்டு தலைப்புகளின் கீழ் நாம் இணைந்து சிந்திப்போம்.

நறுமணத்தைப் பாதுகாத்தல்

கிறிஸ்தவர்களாக, அருள்பணியாளர்களாக, துறவியராக, பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர்களாக நாம் நமது தோற்றத்திற்கு (origin) திரும்ப வேண்டும். நமக்காக இறந்து, தூய ஆவியாரை வழங்கிய அவருடைய திருமகனாகிய இயேசுவின் வழியாக நாம் கடவுளின் உயிரைப் பெற்றோம். "மீட்புப் பெறுவோரிடையேயும் அழிவுறுவோரிடையேயும் நாங்கள் கடவுள்பால் எழும் கிறிஸ்துவின் நறுமணமாயிருக்கிறோம்" (2 கொரி 2:15) என்று புனித பவுலடியார் கூறுவதுபோன்று, நாம் மகிழ்ச்சியின் எண்ணெயால் திருப்பொழிவு செய்யப்பட்டிருக்கிறோம்

அன்பான நண்பர்களே, நீங்கள் கிறிஸ்துவின் நறுமணமாகத் திகழ்கிறீர்கள். இந்த உருவகம் நீங்கள் அறியாத ஒன்றல்ல. ஏனென்றால், இங்குக் கிழக்கு திமோரில் சந்தன மரங்கள் மிகுதியாக வளர்கின்றன, அவற்றின் நறுமணம் மிகவும் மதிப்புமிக்கது மற்றும் பிற மக்களாலும் நாடுகளாலும் விரும்பப்படுகிறது. நீங்கள் இந்நாட்டில் நற்செய்தியின் நறுமணமாக விளங்குகிறீர்கள்.

பசுமையும், வலிமையும் நிறைந்து, வளர்ந்து பழங்களைத் தரும் சந்தன மரங்களைப் போல, உங்கள் மக்களின் வாழ்க்கையை மதிப்பிற்கு உட்படுத்த தூய ஆவியாரின் நறுமணத்தைத் தாங்கும் மறைபரப்புச் சீடர்களாக காட்சியளிக்கிறீர்கள். இருப்பினும் கூட, பெத்தானியாவின் மரியா, இயேசுவுக்காக இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத்தைலத்தைப் பாதுகாத்து வைத்திருந்ததைப் போல, இயேசுவிடமிருந்து பெறப்பட்ட நற்செய்தி என்னும் இந்த நறுமணத் தைலம் கவனமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இறைவன் நமக்கு அருளிய நறுமணம் என்னும் அன்பை நாமும் போற்றிப் பாதுகாக்க வேண்டும், அது ஒருபோதும் மங்காது மற்றும் அதன் நறுமணத்தையும் இழக்காது.

இதன் பொருள் என்ன?  நமக்குக் கிடைத்த இறைவனின் கொடையைக் பற்றி அறிந்துகொள்வது, இந்த நறுமணத் தைலம் என்பது நமக்காக அல்ல, மாறாக கிறிஸ்துவின் பாதங்களில் பூசி அதனைத் துடைப்பதற்கும் நற்செய்தியை அறிவிப்பதற்கும், ஏழைகளுக்குச் சேவை செய்வதற்கும் என்பதை நினைவூட்டுவதாகும். அதாவது, இது நம்மைப் பற்றி நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அர்ததப்படுகிறது, ஏனென்றால் நமக்குள்ளேயே ஓர் உற்சாகமில்லாத மிதமான ஆன்மிகத் தன்மை எப்போதும் பதுங்கியிருக்கும்.

நறுமணத்தைப் பரவச் செய்வோம்

இப்போது நாம் நறுமணத்தைப் பரவச் செய்வோம் என்ற இரண்டாவது புள்ளிக்கு வருகிறோம். திருஅவை என்பது நற்செய்தி அறிவிப்புக்காகவே உயிர் வாழ்கிறது. மேலும் இதனால் நற்செய்தியின் புதிய வாழ்க்கையின் இனிமையான நறுமணத்தை மற்றவர்களுக்கு கொண்டு வர நாம் அழைக்கப்படுகிறோம்.

பெத்தானியாவின் மரியா தன்னை அழகுபடுத்திக்கொள்வதற்காக இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத்தைலத்தைப் பயன்படுத்தவில்லை, ஆனால் இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைப்பதற்காகப் பயன்படுத்துகிறார், இந்த வழியில் அவர் வீடு முழுவதும் நறுமணத்தை பரவச் செய்கிறார்.

நீண்ட கிறித்தவ வரலாற்றில் வேரூன்றிய உங்கள் நாட்டிற்கு, நற்செய்தி அறிவிப்பை நோக்கிய புதுப்பிக்கப்பட்ட உத்வேகம் தேவைப்படுகிறது, இதன் வழியாக நற்செய்தியின் நறுமணம் அனைவரையும் சென்றடையச் செய்ய முடியும். பல்லாண்டுப் போருக்கு பிறகு பரவும் ஒப்புரவு மற்றும் அமைதியின் நறுமணம் இது! இரக்கத்தின் நறுமணம் இது!

இந்த நறுமணம் ஏழைகள் மீண்டும் நிலைபெற உதவுகிறது, நாட்டின் பொருளாதார மற்றும் சமூக நல்வாழ்வை புதுப்பிக்க ஒரு புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பை ஊக்குவிக்கிறது, ஊழலுக்கு எதிரான நீதியின் நறுமணத்தைப் பரவச் செய்கிறது.

குறிப்பாக, மனித வாழ்க்கையை தாழ்வுக்குள்ளாக்கும், சிதைக்கும் அல்லது அழிக்கும் எதையும் எதிர்கொள்வதற்கும், குடிப்பழக்கம், வன்முறை மற்றும் பெண்களின் மாண்பிற்கு அவமரியாதை போன்ற உள்வெறுமையையும் துன்பத்தையும் ஏற்படுத்தும் அந்த வாதைகளை எதிர்கொள்ளவும் நற்செய்தியின் நறுமணத்தைப் பரவச் செய்ய வேண்டும். இயேசுவின் நற்செய்தி இந்த இருண்ட உண்மைகளை மாற்றி புதிய சமுதாயத்தை உருவாக்கும் வல்லமை கொண்டது.

அன்பான நண்பர்களே, மாற்றத்தை ஏற்படுத்தும் நற்செய்தியின் இந்தத் ‘தீப்பொறி’ தேவைப்படுவதால், திருநிலையினர், அர்ப்பண வாழ்வுக்கு அழைக்கப்பட்ட இருபால் துறவியர், மற்றும் ஆர்வமும், தயார்நிலையும், படைப்பாற்றலும் கொண்ட பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர்களின் தேவையும் உள்ளது.

அன்பு நண்பர்களே, "கடவுள் சந்தனத்திற்காகவே திமோரை உருவாக்கினார் என்று மலேசிய வணிகர்கள் கூறுகிறார்கள்" என்று 1500-களின் போர்த்துகீசிய தூதரக அதிகாரியான Tomé Pires என்பவர் எழுதினார் (The Suma Oriental, London 1944, 204). எவ்வாறாயினும், கிறிஸ்து என்னும் நற்செய்தியின் மற்றொரு நறுமணம் இருப்பதை நாம் அறிவோம், இந்த நறுமணம் நம் வாழ்க்கையை வளமாக்கி மகிழ்ச்சியில் நம்மை நிரப்புகிறது.

மனம் தளராதீர்கள்! இங்கே அருள்பணியாளர் Sancho அவர்கள் அளித்த சாட்சியத்தில் கூறியதுபோன்று, கடவுள் தான் அழைத்தவர்களையும் தனது பணிக்காக அனுப்பியவர்களையும் எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பதை அறிவார்.

இறைவன் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 September 2024, 14:54