தேடுதல்

மத்தியதரைக்கடலில் அடைக்கலம் தேடிவரும் புலம்பெயர்ந்தோர் மத்தியதரைக்கடலில் அடைக்கலம் தேடிவரும் புலம்பெயர்ந்தோர் 

வருங்காலத்தை வடிவமைப்பதில் இளையோரின் பங்கு

மத்தியதரைக் கடல் பகுதி நாடுகளின் இளையோர் “Med24” என்ற தலைப்பில் அல்பேனிய தலைநகர் திரானாவில் கூட்டம் ஒன்றை நடத்தி வருவதற்கு திருத்தந்தையின் காணொளி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மத்தியதரைக் கடல் பகுதி நாடுகளின் இளையோர் “Med24” என்ற தலைப்பில் அல்பேனிய தலைநகர் திரானாவில் கூட்டம் ஒன்றை நடத்தி வருவதற்கு, காணொளி வழி வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இளையோர் ஒவ்வொருவரும் அமைதி, ஒன்றிப்பு மற்றும் உடன்பிறந்த உணர்வின் பொறுப்பாளர்களாகச் செயல்பட வேண்டும் என அச்செய்தியில் அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, அல்பேனியா மற்றும் மத்தியதரைக்கடல் பகுதி இளையோர் அனைவரும் சமூகங்களின் வருங்காலத்தை வடிவமைத்து முன்னேற்றுவதில் தங்கள் பங்கையும் பொறுப்பையும் உணர்ந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 2014ல், தான் அல்பேனியா நாட்டில் திருப்பயணம் மேற்கொண்டபோது அந்நாட்டு இளையோரை அல்பேனியாவின் புதிய தலைமுறை என குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போது அதனுடன் இணைந்து, இளையோரே மத்தியதரைக்கடல் பகுதியின் வருங்காலம் என குறிப்பிட விரும்புவதாகவும் எடுத்துரைத்துள்ளார்.

“எதிர்நோக்கு மற்றும் அமைதி” குறித்து இந்த இளையோர் கூட்டம் தலைப்பை எடுத்துள்ளதை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,

நாமே நம்பிக்கையின் திருப்பயணிகள் என்றும், நாம் விசுவாசத்தில் வாழ்ந்து, அமைதியைக் கட்டியெழுப்பி, உண்மையை நோக்கி நடைபோடுகின்றோம் எனவும் எடுத்துரைத்துள்ளார்.

உடன்பிறந்த உணர்வை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை, மத்தியதரைக்கடல் நாடுகளின் பிரச்சனைகளுக்கு, குறிப்பாக பாராமுகம் என்னும் பிரச்சனைக்கு உடன்பிறந்த உணர்வு வழியாக தீர்வுகாண முடியும் என்பதையும் தன் செய்தியில் முன்வைத்துள்ளார்.

மத்தியதரைக் கடல் என்பது அடைக்கலம் தேடிவரும் மக்களின் கல்லறைகளாக மாறுவதை தவிர்த்து, ஒன்றிப்பு மற்றும் எதிர்நோக்கின் இடமாக மாறுவதற்கு இளையோரின் முயற்சி தேவைப்படுகிறது என மேலும் தன் செய்தியில் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 September 2024, 16:05