தேடுதல்

கர்தினால்களுடன் திருத்தந்தை கர்தினால்களுடன் திருத்தந்தை 

சீர்திருத்தங்கள் குறித்து கர்தினால்களுக்கு திருத்தந்தை கடிதம்

திருஅவையின் மறைப்பணி சேவைக்கான பொருளாதார வளங்கள் மிகக் குறைவாக இருப்பதால், விழிப்புணர்வுடன் பொருளாதர சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருப்பீடத்தில் இடம்பெற்றுவரும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதையும், நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் ஒருமைப்பாட்டுணர்வை வலியுறுத்தியும் திருஅவையின் அனைத்து கர்தினால்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையின் உயர்மட்ட நிர்வாக அவையில் சீர்திருத்தங்கள் கொணரப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளதை அக்கடிதத்தில் சுட்டிக்காட்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சீர்திருத்தம் தொடர்புடைய கர்தினால்களின் பங்களிப்பு மற்றும் பொறுப்புடைமை குறித்தும் நினைவூட்டியுள்ளார்.

திருஅவை எப்போதும் புதுப்பிக்கப்பட்டு மறுமலர்ச்சியைக் காண்பதாக இருக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதுப்பித்தல் என்பது உயிர் துடிப்பு மற்றும் அருளின் சான்றாகும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திருஅவையின் மறைப்பணி சேவைக்கான பொருளாதார வளங்கள் மிகக் குறைவாக இருக்கும் நிலையில் அது குறித்த விழிப்புணர்வுடன் பொருளாதர சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, திருப்பீடத்தின் பல்வேறு துறைகளும் நிதிப் பற்றாக்குறையை நிவர்த்திச் செய்ய ஒத்துழைக்க வேண்டியது அவசியம் என்பதையும் எடுத்துரைத்துள்ளார்.

திருஅவைக்கானப் பணியில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுதல், திருப்பீடத் துறைகளிடயே ஒருமைப்பாட்டை வளர்த்தல், தேவையற்ற செலவீனங்களை குறைத்தல், பொறுப்புணர்வுடனும் மனவுறுதியுடனும் ஒத்துழைப்புடனும் செயல்படுதல் என்பவை குறித்தும் தன் கடிதத்தில் மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 September 2024, 17:03