தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

தகவல் தொடர்பை வன்முறையற்றதாக மாற்ற வேண்டிய அவசியம்

“உங்கள் உள்ளத்தில் நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து பணிவோடும் மரியாதையோடும் பகிருங்கள்” என்பது ஜூபிலி ஆண்டு சமூகத் தொடர்பு நாள் கருப்பொருள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

2025ஆம் ஆண்டில் ஜூன் மாதம் முதல் தேதி, ஞாயிறன்று திருஅவையில் சிறப்பிக்கப்படும் 59வது உலக தகவல் தொடர்பு நாளுக்கான கருப்பொருளாக, “உங்கள் உள்ளத்தில் நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து பணிவோடும் மரியாதையோடும் பகிருங்கள்”(1பேதுரு 3:15-16) என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் பெந்தகோஸ்தே ஞாயிறுக்கு முந்தைய ஞாயிறன்று சிறப்பிக்கப்படும்  உலக சமூகத்தொடர்பு நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துள்ள கருப்பொருள், இன்றைய உலகில் தகவல் தொடர்பு என்பது வன்முறையாக மாறி, உரையாடலுக்கான நிபந்தனைகளையல்ல, மாறாக, தாக்குதலை நோக்கமாகக் கொண்டுள்ளதால் தகவல் தொடர்பை வன்முறையற்றதாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.   

இன்றைய தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது போட்டிகளும், எதிர்ப்புகளும், அடக்கியாளும் மனப்பான்மைகளும் மேலோங்கி, வார்த்தைப் போர்களாகவே இருப்பதைக் உணர்கிறோம் என தகவல் தொடர்பு நாள் கருத்துப் பற்றி எடுத்துரைக்கும் திருப்பீட அறிக்கை, கிறிஸ்தவ எதிர்நோக்கு என்பது சமூகத்தோடு பின்னிப் பிணைந்தது என்பதால் அச்சமூகத்திற்கு ஒவ்வொரு கிறிஸ்தவரும் தங்கள் சொல்லாலும் செயலாலும் கிறிஸ்துவின் நம்பிக்கையை வழங்குபவர்களாக இருக்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறது.  

ஒவ்வோர் ஆண்டும் திருஅவையில் சிறப்பிக்கப்படும் உலக தகவல் தொடர்பு நாள், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திற்குப் பின் 1967ஆம் ஆண்டு திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்களால் உருவாக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2024, 14:37