தேடுதல்

திருப்பலிக்காக காத்திருக்கும் மக்கள் திருப்பலிக்காக காத்திருக்கும் மக்கள்  (REUTERS)

உலக அமைதிக்காக செபிக்க திருத்தந்தையின் அழைப்பு

பிரான்சின் லூர்து நகரில் அண்மையில் இடம்பெற்ற சூறாவளிக் காற்று மற்றும் பெருமழையால் மரியன்னை திருத்தலத்தைச் சுற்றியுள்ள இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 8ஆம் தேதி, தமிழகத்தின் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருவிழாவன்று, தன் பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக காலையில் பிரதமரை திருப்பீடத் தூதரகத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்து Sir John Guise திறந்த வெளி விளையாட்டரங்கம் நோக்கிப் பயணமானார். பாப்புவா நியூ கினி நாட்டின் முதல் ஆளுநர் Sir John Guise அவர்களின் பெயரை இந்த விளையாட்டரங்கு கொண்டுள்ளது. 1991ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்ட இந்த விளையாட்டரங்கு, பசிபிக் நாடுகளின் 2015ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளுக்கென  புதுப்பிக்கப்பட்டது.

இந்த திறந்தவெளி விளையாட்டரங்கில் திருப்பலி நிறைவேற்ற உள்ளூர் நேரம் காலை 8 மணியளவில், இந்திய நேரம் அதிகாலை மூன்றரை மணியளவில் வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில் விசுவாசிகள் கூட்டத்தை சிறு திறந்த காரில் ஒரு வலம் வந்தார். ஏறக்குறைய 35,000 பேர் இத்திருப்பலியில் பங்குபெற்றனர். பாப்புவா நியூ கினியின் பிரதமர் ஜேம்ஸ் மாரப் அவர்களும் திருப்பலியில் பங்கு பெற்றார்.

இத்திருப்பலியின் இறுதியில் நண்பகல் மூவேளை செபத்தை செபிக்கு முன் உலகில் அமைதிக்கான அழைப்பையும் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். உலகின் அமைதிக்காகவும், இறைவனின் படைப்பான இயற்கையை பாதுகாப்பதற்காகவும் செபிப்போம் என்ற அழைப்பை விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரான்சின் லூர்து நகரில் அண்மையில் இடம்பெற்ற சூறாவளிக் காற்று மற்றும் பெருமழையால் மரியன்னை திருத்தலத்தைச் சுற்றியுள்ள இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்த கவலையையும் வெளியிட்டார். குடும்பங்களின் ஒற்றுமை பலப்படுத்தப்படவும், இளையோரின் கனவுகள் இனிமையாக மாறவும், முதியோர் ஆதரவு வழங்கப்படவும், துன்புறுவோர் மற்றும் நோயாளிகள் ஆறுதல் பெறவும் அன்னை மரியா உதவுவாராக என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் அமைதிக்காக பரிந்துரைக்குமாறும் அன்னைமரியாவிடம் வேண்டினார். குறிப்பாக, ஆசியா, ஒசியானியா மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதியின் அமைதிக்காக திருத்தந்தை வேண்டினார்.

ஞாயிறு திருப்பலியை Sir John Guise விளையாட்டரங்கில் நிறைவுச் செய்து 7.4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருப்பீடத் தூதரகம் வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கேயே மதிய உணவருந்தினார். எவ்வித ஓய்வும் எடுக்க நேரமில்லாமல் போர்ட் மோர்ஸ்பியின் பன்னாட்டு விமான நிலையம் நோக்கிப் பயணமானார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு உள்ளூர் நேரம் 1 மணியளவில், இந்திய நேரம் காலை  எட்டரை மணியளவில் இராணுவ விமானத்தில் 991 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வனிமோ நகர் நோக்கி பயணம் செய்தார். 2 மணி 15 நிமிடங்கள் பறந்து வனிமோ விமான நிலையத்தை வந்தடைந்த திருத்தந்தையை வனிமோ மறைமாவட்ட ஆயரும் தல அரசு அதிகாரிகளும் விமான நிலையம் வந்திருந்து வரவேற்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2024, 15:39