இவ்வுலக பொருளாதாரத்தை அன்பு, சான்று, நம்பிக்கையால் மாற்ற
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
புனித பிரான்சிஸ்கோவின் பொருளாதாரம் என்ற இயக்கத்தைச் சேர்ந்த இளம் பொருளாதார வல்லுனர்கர்கள், இவ்வுலக பொருளாதாரத்தை, அதிகாரம் மற்றும் செல்வத்தின் வழி அல்ல, மாறாக அன்பு, சான்று மற்றும் நம்பிக்கையின் வழி மாற்றியமைக்க வேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரான்சிஸ்கோவின் பொருளாதாரம் என்ற இயக்கத்தின் இளம் பொருளாதார வல்லுனர்களை செப்டம்பர் 25, புதன் காலையில், தன் புதன் பொது மறைபோதகத்திற்கு முன்னர் வத்திக்கானில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியில் தன் மூலத்தைக் கொண்டதாக, அன்பால் வழிநடத்திச் செல்லப்படுவதாக, இவ்வுலகின் காயங்களைக் குறித்து உணர்ந்ததாக புதிய பொருளாதார அமைப்பு முறையை உருவாக்க முயலவேண்டும் என அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
அமைச்சர்களாகவோ, நொபேல் விருது வாங்குபவர்களாகவோ, மிகப்பெரும் பொருளாதார வல்லுனர்களாகவோ இருப்பதால் பொருளாதார மாற்றங்களைக் கொணரமுடியாது, மாறாக, இறை ஒளியில் பொருளாதாரத்தை அன்புகூர்வதன் வழி அதை மாற்ற முடியும் என்றார் திருத்தந்தை.
ஒரு வியாபாரியின் மகனாக இருந்த அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்கள் தொழில் உலகின் பலவீனத்தையும் பலத்தையும் அறிந்தவராக இருந்தபோதிலும், ஏழைகள் மீதும் படைப்புகள் மீதும் அவர் கொண்டிருந்த அன்பே, பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு தூண்டுதலாக இருந்தது எனக் கூறிய திருத்தந்தை, இந்த பாணியை இளையோர் பின்பற்றவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இன்றைய இளையோர் எதிர்நோக்கும் சவால்களாக, நவீன போர்கள், ஆயுத தொழில், மக்களாட்சிக்கான அச்சுறுத்தல்கள் போன்றவைகளையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய வேளைகளில் மனம் தளரவேண்டாம், ஏனெனில் இறைவன் உதவுவார் மற்றும் திருஅவை எவரையும் கைவிடாது எனவும் கூறினார்.
இறுதியாக, சான்றுகளாக வாழுங்கள், அஞ்சாதீர்கள், நம்பிக்கையில் தளராதீர்கள் என்ற மூன்று வாழ்க்கை கூறுகளையும் அந்த இளையோரிடம் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்