தேடுதல்

இளைஞர்களே, அன்பின் மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்!

இளைஞர்களே, ஒவ்வொரு மொழியும் வேற்றுமைகளின் நல்லிணக்கத்தின் மத்தியில் மற்ற மொழிகளைச் சந்திக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் வழியாக, பாப்புவா நியூ கினிக்கும் சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்க முடியும். நீங்கள் அனைவரும் இயேசுவின் மொழியைப் பேசக் கற்றுக்கொண்டால் இது சாத்தியமாகும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் -வத்திக்கான்

செப்டம்பர் 9, திங்கள்கிழமை இன்று, பாப்புவா நியூ கினியின் தலைநகர்  போர்ட் மோர்ஸ்பிவிலுள்ள சர் ஜான் கைஸ் திறந்தவெளி விளையாட்டு அரங்கில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோருடன் உரையாடல் வழியாகத் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

அன்பான இளைஞர்களே, உங்களைச் சந்திக்காமல் நான் இங்கிருந்து செல்ல விரும்பவில்லை, ஏனென்றால் நீங்கள்தான் எதிர்காலத்தின் நம்பிக்கை. நாம் எதிர்காலத்தை எப்படிக் கட்டியெழுப்புவது? என்னமாதிரியான அர்த்தத்தை நமது வாழ்க்கைக்கு நாம் தர விரும்புகின்றோம்? திருவிவிலியத்தின் தொடக்க நூலில் வரும் பாபேல் கோபுரம் குறித்த நிகழ்விலிருந்து இந்தக் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க விருப்புகின்றேன்.

இரண்டு எதிரெதிர் வழிகள்

இரண்டு மாதிரிகள்  (models) ஒன்றுக்கொன்று மோதுவதைப் பார்க்கின்றோம். இவை இரண்டும் வாழ்க்கை மற்றும் ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதில் இரண்டு எதிரெதிர் வழிகளில் செயல்படுகின்றன. ஒன்று, குழப்பம் மற்றும் சிதறலுக்கு (மோதல்) வழிவகுக்கிறது, மற்றொன்று, கடவுளுடனும் நமது சகோதரர் சகோதரிகளுடனும் சந்திப்பதில் இணக்கத்தை ஏற்படுத்துகிறது.

வெள்ளபெருகிற்குப் பிறகு, நோவாவின் சந்ததியினர் வெவ்வேறு தீவுகளுக்குச் சென்றனர் என்றும், ஒவ்வொருவரும் தங்களது சொந்த மொழியுடனும், தங்கள் குடும்பத்தினருடனும் சென்றனர் (தொநூ 10:5) என்றும் திருவிவிலியம் கூறுகிறது. அவர்களிடம் காணப்பட்ட வேறுபாடுகளை நீக்காமல், ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதற்கும் ஒன்றிப்பைக் காண்பதற்கும் கடவுள் அவர்களுக்கு ஒரு வழியைக் கொடுத்தார். உண்மையில், உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன (தொநூ. 11:1).

தம்முடைய சாயலில் நம்மைப் படைத்த கடவுள் நம்மைப் பிறரோடு உறவாடச் செய்தார். நம் இதயங்களை மகிழ்ச்சியடையச் செய்வது பொருள் விடயங்களோ அல்லது உலக வெற்றியோ அல்ல, ஆனால் வாழ்க்கைப் பயணத்தில் நாம் தனியாக இல்லை, நாம் யாரோ ஒருவரால் அங்கீகரிக்கப்படுகிறோம், வழிநடத்தப்படுகிறோம், அன்புகூரப்படுகிறோம் என்பதைக் கண்டுபிடிப்பது அவருக்குத் தெரியும்.

எனவே, பிறருடன் இணைவதற்கு உதவும், கலந்துரையாடலுக்கு இடமளிக்கும், நட்பை வளர்க்கும், பிரிவினையின் சுவர்களைத் தகர்த்து, அன்பின் அரவணைப்பிற்குள் நாம் அனைவரும் நுழைவதற்கான வழியைத் திறக்கும் மொழி நமக்குத் தேவைப்படுகிறது.

மக்கள் “வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாதபடி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி, நமது பெயரை நிலை நாட்டுவோம்” (தொநூல் 11:4) என்று கூறி கோபுரம் ஒன்றை கட்டத்தொடங்கியதாக பாபேல் கோபுரத்தின் கதை கூறுகிறது.

கடவுள் இல்லாத சமுதாயம் பயனற்றது

கடவுள் இல்லாமல் தாங்களாகவே செய்ய முடியும், என்றும், அவர் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றும், அவர்கள் நினைக்கின்றனர். பின்னர் அவர்களின் மொழிகள் குழப்பமடைகின்றன, சீர்குலைவு உருவாகிறது, மேலும் அவர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் அந்தத்  திட்டத்தை கைவிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.

கடவுள் இல்லாமல், அவருடன் நம்மை இணைத்து வைத்திருக்கும் ஒரு ‘மொழியை’ அவரிடம் காணாமல், நாம் சிதறி, நம்மைப் பற்றியும் நம் சொந்த தேவைகளைப் பற்றியும் மட்டுமே சிந்திக்கிறோம். இதன் விளைவாக, நம்மிடையே தனிமை, சீர்குலைவு, குழப்பம் மற்றும் மோதல்கள் நிலவுகின்றன.

அன்பின் மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்

இந்த மண்ணில் பிறந்த அன்பான இளைஞர்களே, இந்தக் கதையால் நீங்கள் ஈர்க்கப்படலாம்.  நோவாவின் மகன்களின் வெவ்வேறு குடும்பங்களைப் போலவே, பாப்புவா நியூ கினியிலும் பல்வேறு பூர்வகுடியினர் உள்ளனர். மேலும் உங்கள் நாடு அதன் மொழியியல் பன்முகத்தன்மையால் தனித்துவமிக்கதாக இருக்கின்றது.

உங்கள் நாட்டில் எண்ணூறுக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைச் சேர்ந்த அடையாளமாக அமைந்துள்ளது. பேசும் மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகள் தவிர, இந்த நாட்டில் இளைஞர்கள் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப மொழியையும் பயன்படுத்துகின்றனர்.

இந்த வகையான மொழிகள் ஒரு நல்ல விடயமாக இருந்தாலும் கூட, அது ஒன்றிப்புக்கான கருவியாக இருப்பதற்குப் பதிலாக குழப்பத்தை ஏற்படுத்தும் ஆபத்தும் உள்ளது. மேலும் தகவல்தொடர்பு மற்றும் சந்திப்பை வளர்ப்பதற்குப் பதிலாக பிளவு மற்றும் மோதலுக்கு வழிவகுக்கும்; உங்கள் மனித மாண்பையும்  சுதந்திரத்தையும் குறைத்து, உங்களை பலவீனமானவராகவும், எளிதில் பாதிக்கப்படக் கூடியவராகவும் ஆக்கும்; உங்களை அழகு மற்றும் நன்மையில் வளர அனுமதிப்பதற்குப் பதிலாக, உங்களை அடிமைப்படுத்தும்.

இதன் காரணமாக, நாம் ஒரு பொதுவான மொழியை, அன்பின் மொழியைக் கற்றுக்கொள்வது முக்கியம், இது நம்மை ஒரே குடும்பமாக மாற்றுகிறது. குடும்பங்கள் உடையும்போது, அல்லது தங்களையே அழித்துக்கொள்ளும்ம்போது அங்கே துயரங்கள் எழுகின்றன. நமது திருஅவைக்கும், குடும்பங்களுக்கும், சமுதாயத்திற்கும் இது நன்கு பொருந்தும். அன்பு இல்லாமல், நாம் பயன்படுத்தும் பல்வேறு மொழிகள் தொடர்பு கொள்ள உதவாது, உண்மையில் அவைகள் அழிவுகரமானதாக மாறலாம்.

ஒரு நபரின் மொழி, பூர்வகுடி, குலம் அல்லது இனக்குழுவைக் குறிக்க நீங்கள் வாண்டோக் (wantok) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். கடவுளுக்கும் நம் சகோதரர் சகோதரிகளுக்கும் நாம் திறந்த மனம் கொண்டிராது இருந்தால், நம் குறிப்பிட்ட மொழி இனி தொடர்புகொள்வதற்குப் பயன்படாது, நட்பை உருவாக்காது என்று இறைவார்த்தை நமக்குக் கற்பிக்கிறது.

ஒவ்வொரு மொழியும் வேற்றுமைகளின் நல்லிணக்கத்தின் மத்தியில் மற்ற மொழிகளைச் சந்திக்க வேண்டும்.  அவ்வாறு செய்வதன் வழியாக, பாப்புவா நியூ கினிக்கும் சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்க முடியும். அன்பான இளைஞர்களே, நீங்கள் அன்பை (wantoks) விரும்புபவர்களாக மாறினால், அதாவது பேசும் மொழியில் வேறுபாடு கொண்டவர்களாக இருந்தாலும், நீங்கள் அனைவரும் இயேசுவின் மொழியைப் பேசக் கற்றுக்கொண்டால் இது சாத்தியமாகும்.

பிளவுகளை உடைத்தெறியுங்கள், உங்கள் சொந்த குழுவிற்குள் உங்களையே மூடிக்கொள்ளாதீர்கள், மற்றவர்களைச் சந்திக்கவும், நட்பை உருவாக்கவும் வெளியே செல்லுங்கள், பின்னர் ஒன்றிணைந்து கனவு காணுங்கள், ஒன்றாக நடங்கள், ஒன்றாக உருவாக்குங்கள்.  புதிய நட்பு மற்றும் புதிய சந்திப்புகளை விரும்பும் இளைஞர்களே, உங்களால் இது முடியும். அன்பை (wantoks) விரும்புபவர்களாக இருங்கள்!

இயேசுவுடனான நட்பின் வழியாக நீங்கள் காணக்கூடிய அன்பில் உள்ள இந்த ஒன்றிப்பு தனிமையைக் கடப்பதற்கும், சிறந்த மனிதர்களாக இருப்பதற்கான வழிகளை ஒன்றாகத் தேடுவதற்கும் உதவும். மேலும் உங்கள் வாழ்க்கைக்கான பொறுப்பை ஏற்பதற்கும், துணிவான முடிவுகளை எடுப்பதற்கும் இது உங்களுக்கு உதவும்.

விழிப்புடன் இருங்கள்

போதைப்பொருள்களைப் பயன்படுத்துவது, மது அருந்துவது, ஆபாச படம் பார்ப்பது ஆகியவற்றை  முற்றிலும் தவிர்த்திடுங்கள், காரணம், இது மக்களை மகிழ்ச்சியற்ற நிலைக்கும் வெறுமைக்கும் ஆளாக்குகிறது. அனைத்து வகையான வன்முறைகளையும் ஆதரிக்காதீர்கள். கடவுளின் பெயரில் வாழ்க்கை மிகவும் புனிதமானது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். வாழ்க்கை மீறப்படக் கூடாது. அது எந்த வகையிலும் முறைகேட்டிற்கு உட்படுத்தப்படக்கூடாது.

விசுவாசத்தின் அழகையும் எளிமையையும் அச்சுறுத்தும் எதையும் சந்திக்கும் போது விழிப்புடனும் எதிர்ப்புடனும் இருங்கள், ஏனென்றால் அது இறைவன் உங்களுக்குக் கொடுத்த மாபெரும் கொடை. அதை உற்சாகத்துடனும் விடாமுயற்சியுடனும் விழிப்பாயிருந்து காத்திடுங்கள். அருளாளர் Peter To Rot அவர்களிடம் விளங்கிய அன்பின் துணிவையும் நம்பிக்கையின் துணிவையும் கடவுள் உங்களுக்கு வழங்குவாராக!

ஒன்றிணைந்த பயணமே வெற்றி தரும்

அன்பான இளைஞர்களே, நீங்கள் அன்பின் மொழியைக் கற்று உங்கள் நாட்டை மாற்றுவீர்கள் என்பது எனது நம்பிக்கை. ஏனென்றால் அன்பு மாற்றத்தைக் கொண்டுவருகிறது, உங்களை வளரச் செய்கிறது மற்றும் எதிர்காலத்திற்கான பாதைகளைத் திறக்கிறது. இந்தக் கனவை நனவாக்க ஒன்றிணைந்து நடக்கும் இளைஞர்களாக இருங்கள்!

நாம் சற்றுமுன் இளையோர் நிகழ்த்திய கலைநிகழ்ச்சியில் கண்டதுபோல, ஒன்றிணைந்த நிலையில் மட்டுமே, புதிய எல்லைகளை நோக்கி, எதிர்காலத்தை நோக்கி, அன்பின் நாகரீகக் கனவை நோக்கி நாம் நடக்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்!

உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன். எனது இறைவேண்டல்களில் உங்களுடன் இணைந்து பயணிக்கிறேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 September 2024, 16:05