தேடுதல்

இந்தோனேசியாவில் இளையோருடன் திருத்தந்தை இந்தோனேசியாவில் இளையோருடன் திருத்தந்தை 

இளையோர் அமைப்பினருக்கு திருத்தந்தையின் 4 கொள்கைகள்

திருத்தந்தை பிரான்சிஸ் : எண்ணங்களை விட எதார்த்தங்கள் சிறந்தவை, முரண்பாடுகளை விட ஒன்றிப்பு சிறந்தவை, ஒன்றின் பகுதியை விட அதன் முழுமை சிறந்தது

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, செப்டம்பர் 4ஆம் தேதி புதன்கிழமையன்று மாலையில் Scholas Occurrentes என்ற மாணவர் இயக்கத்தின் இந்தோனேசிய அங்கத்தினர்களை சந்தித்ததுடன் திருத்தந்தையின் அந்நாள் பயண நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன. அந்த நாளில் இளையோருடன் திருத்தந்தை சந்தித்தபோது இடம்பெற்றவைகள் குறித்து நாம் புதனன்று நம் ஒலிபரப்பில் நேரமில்லை என்ற காரணமாக விரிவாக வழங்கவில்லை என்பதால், தற்போது அந்நாளின் இந்த இறுதி நிகழ்ச்சி குறித்த சில விவரங்களை வழங்கி, செப்டம்பர் 5ஆம் தேதி வியாழக்கிழமையன்று திருத்தந்தை கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் குறித்து காண்போம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் தனது முதல் நாள் சந்திப்பின் ஒரு பகுதியாக Scholas occurrents அமைப்பின் இளம் உறுப்பினர்களை சந்தித்து, அமைதியான சுகவாழ்விற்கு தேவையான நான்கு வழிகாட்டுதல்களை அவர்களுக்கு வழங்கினார்.

திருத்தந்தை தனது திருப்பயணத்தின் போது Scholas occurrents உறுப்பினர்களை சந்திப்பது வழக்கமான மற்றும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு நிகழ்வாகும். திருத்தந்தை அவர்களால் நிறுவப்பட்ட Scholas occurrents என்னும் உலகளாவிய கல்வித் திட்டமானது, கல்வி, கலை மற்றும் விளையாட்டுகளில் இளையோரை ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இத்திட்டத்தின் வழியாக இந்தோனேசியாவின் பல்வேறு தீவுகள், மதங்கள் மற்றும்  பள்ளிகளைச் சார்ந்த 200 இளைஞர்கள் ஜகர்த்தாவின் “Grha Pemuda”  இளைஞர் இல்லத்தில் திருத்தந்தை அவர்களை சந்தித்து, வாழ்த்து தெரிவித்து, தங்களின் வேறுபட்ட நிலையிலும் ஒன்றிப்பை வெளிப்படுத்தினர். மேலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எண்ணங்களை விட  எதார்த்தங்கள் சிறந்தவை என்றும், முரண்பாடுகளை விட ஒன்றிப்பு சிறந்தவை என்றும், ஒன்றின் பகுதியை விட அதன் முழுமை சிறந்தது என்றும், கருத்துக்களை விட செயல்பாட்டின் முழுமை சிறந்தது என்றும் அமைதி மற்றும் சுக வாழ்விற்கான நான்கு கொள்கைகளை எடுத்துரைத்தார். மேலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் அனைவரும் ஒரே மாதிரியாக இருந்தால் அது சலிப்பை ஏற்படுத்தும் என்றும், இறைவன் நமது கண்முன் எப்போதும் நன்மை தீமை ஆகிய இரண்டையும் வைப்பது போல, வேற்றுமையானது போர் மற்றும் உரையாடலை நம் கண்முன் நிறுத்தும், நாம்தான் தேர்வு செய்ய வேண்டும். போர் எப்போதுமே நம்மை அழிவுக்கே இட்டுச் செல்லும், ஆனால் நாம் நம் நண்பர்களுடன் கலந்துரையாடுவது நம்மை வளர்த்தெடுக்கும் ஓர் அழகான செயலாகும் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 September 2024, 14:53