திருப்பயணிகள் அனைவரும் அமைதியின் கருவிகளாக இருக்க வேண்டும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
பொம்பே மற்றும் லொரேட்டோ திருத்தலம் நோக்கி குடும்பமாக செல்லும் திருப்பயணிகள் அனைவரும் அமைதியின் கருவிகளாக இருக்க வேண்டும் என்றும், பெற்றோர்கள், குழந்தைகள் மற்றும் தாத்தா பாட்டிகளை நம்பிக்கையின் வலிமையில் இத்திருப்பயணங்கள் ஆதரிக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்ற தலைப்பில் இத்தாலியின் பொம்பே மற்றும் லொரேத்தோ திருத்தலங்களில் சிறப்பிக்கப்பட இருக்கும் 17ஆவது தேசிய திருயாத்திரையை முன்னிட்டு அதன் ஒருங்கிணைப்பாளரும், RNS எனப்படும் தூய ஆவியாரால் புதுப்பிக்கப்பட்ட அமைப்பின் தலைவருமான Giuseppe Contaldo என்பவருக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்த்துச்செய்தியானது திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிடப்பட்டு 17ஆவது தேசிய திருப்பயணத்தின் ஒருங்கிணைப்பாளர் Giuseppe Contaldo அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இத்தாலிய கிறிஸ்தவ குடும்பங்களுக்காக குடும்பமாக இத்திருயாத்திரையில் பங்கேற்கும் அனைவரையும் வரவேற்று, அவர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் ஆன்மிக நெருக்கத்தையும் வழங்குவதாக எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், துன்புறும் பல குடும்பங்களில் உள்ள மக்கள், போர் மற்றும் வன்முறையினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள், வறுமையினால் துன்புறும் குடும்பங்கள் ஆகிய அனைவர்மீதும் கன்னி மரியாவின் அன்பும் கருணையும் நிறைந்த பார்வை இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இத்திருயாத்திரையில் பங்கேற்பதன் வழியாக குடும்பங்களும் மக்களும் பொது வாழ்வின் அழகைக் கண்டுணரக்கூடியவர்களாக மாறுகின்றனர் என்றும், உலகின் அமைதிக்கான கருவிகளாக மாறுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்