தேடுதல்

பெல்ஜியம் மெல்ஸ்ப்ரோக் விமான நிலையத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் பெல்ஜியம் மெல்ஸ்ப்ரோக் விமான நிலையத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

46ஆவது திருத்தூதுப்பயணத்தை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ்

பெல்ஜியம் உள்ளூர் நேரம் ஏறக்குறைய 1.21 மணிக்கு மெல்ஸ்ப்ரோக் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட A321 Neo என்னும் புரூக்செல்ஸ் விமானமானது உரோம் உள்ளூர் நேரம் 3. 00 மணியளவில் தரையிறங்கியது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இலக்சம்பர்க் மற்றும் பெல்ஜியம் பயணத்தை நல்ல விதமாக முடித்துக்கொண்டு செப்டம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் உரோம் சாந்தா மார்த்தா இல்லம் திரும்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 26 வியாழன் முதல் 29 ஞாயிற்றுக்கிழமை வரை இலக்ஸம்பர்க் மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கு 46ஆவது திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் பிற்பகல் 3.00 மணியளவில் உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தார்.

பெல்ஜியம் நாட்டு மக்களுக்கு ஞாயிறு திருப்பலியினை இலக்ஸம்பர்க்கில் உள்ள அரசர் பௌதோவின் விளையாட்டரங்கத்தில் நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலி முடிவில் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்து திருப்பீடத்தூதரகம் சென்றார்.

பிற்பகல் 1.00 மணியளாவில் மெல்ஸ்ப்ரோக் விமான நிலையத்தினை வந்தடைந்த திருத்தந்தை அவர்கள், விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர்கள் அறையில் பெல்ஜியம் அரசர், அரசி, பிரதமர், அரசு அதிகாரிகள், தலைவர்கள் போன்றோரைச் சந்தித்து விடை பெற்றார்.

சிறப்பு விருந்தினர்கள் அறையில், பெல்ஜியம் நாட்டு அரசர் பிலிப்போ மற்றும் அரசி மத்தில்தே ஆகியோரை சந்தித்த திருத்தந்தை, “பெல்ஜியம், ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் எப்போதும் அமைதியின் பணியில் இருக்கட்டும்” என்ற வரிகளை விமான நிலையத்தில் இராணுவ அரசுப்புத்தகத்தில் எழுதி கையெழுத்திட்டார்.

அதன்பின், அரச மரியாதை அணிவகுப்புக்கள் மற்றும் இன்னிசையுடன் அனைவரும் திருத்தந்தையை விமான நிலையத்தில் வாழ்த்தி நன்றி கூறி பிரியாவிடை கொடுத்தனர். அனைவருக்கும் நன்றி கூறி விமானத்தில் ஏறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விமானத்திலேயே தனது மதிய உணவினை எடுத்துக்கொண்டு இளைப்பாறினார். பெல்ஜியம் உள்ளூர் நேரம் ஏறக்குறைய 1.21 மணிக்கு மெல்ஸ்ப்ரோக் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட A321 Neo என்னும் புரூக்செல்ஸ் விமானமானது உரோம் உள்ளூர் நேரம் 3. 00 மணியளவில் தரையிறங்கியது.

இலக்ஸம்பர்க் மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கான 46ஆவது திருத்தூதுப்பயணத்தில், உலக அமைதி, புலம்பெயர்ந்தோர், ஏழைகள், சிறார் முறைகேடுகள் பற்றி அதிகம் வலியுறுத்திய 87 வயதுடைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப்பயணம் இத்துடன் இனிதே நிறைவிற்கு வந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 September 2024, 14:41