அக்டோபர் மாதம் நடைபெறும் ஆயர் மாமன்ற அமர்வு விவரங்கள்
ஜெர்சிலின் டிக்ரோஸ்- வத்திக்கான்
ஆயர் மாமன்றக் கூட்டம் என்பது, இறைவார்த்தை மற்றும் தூய ஆவியானவருக்கு செவி கொடுக்கின்ற நேரம் என்றும், திருஅவையின் பாவங்களுக்காக இறைவனிடம் மன்றாட ஒரு வாய்ப்பு என்றும் அக்டோபர் 2 முதல் 27 வரை உரோமையில் நடைபெறும் ஆயர் மாமன்ற 16வது பொதுப்பேரவையின் 2வது அமர்வைக் குறித்து உலக ஆயர் மாமன்ற தலைமைச் செயலகத்தின் பொதுச் செயலர் கர்தினால் Mario Grech அவர்கள் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
செப்டம்பர் திங்கள் 16, திங்கள் கிழமையன்று பத்திரிகையாளர்களை சந்தித்த கர்தினால், ஆயர் மாமன்றத்தின் முக்கியமான கதாநாயகன் தூய ஆவியானவரே என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 9, 2021 அன்று ஆயர் மாமன்றத்தின் தொடக்கத்தில் வலியுறுத்தியதையும் நினைவு கூர்ந்தார்.
ஆயர் மாமன்றத்தின் முதல் அமர்வைப் போன்றே இரண்டாம் மற்றும் இறுதி அமர்வுக்கு முன்னதாக வத்திக்கானில் செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 2 நாள் தியானம் தொமினிக்கன் அருள்தந்தை Timothy Radcliffe அவர்களாலும், ஆசிர்வாதப்பர் அருட்சகோதரி Ignazia Angelini அவர்களாலும் வழிநடத்தப்படும் என்றும், ஆயர் மாமன்ற பொதுப்பேரவையின் போது ஜெபங்களை இவர்கள் வழிநடத்துவார்கள், இவர்களோடு இணைந்து வழிபாட்டு முறைகளுக்கு பொறுப்பாளரான கமல்தோலி அருள்தந்தை Matteo Ferrari, அவர்களும் துறவிகளும் இணைந்து செயலாற்றுவர் என்றும் விளக்கினார் கர்தினால் Grech.
அமைதி, படைப்பு, பழங்குடி மக்கள், புலம்பெயர்ந்தோர், பெண்கள், குடும்பம், இளைஞர்களுக்கு எதிரான பாவங்கள், வறுமை மற்றும் ஒருமித்த உணர்வுக்கு எதிரான பாவங்கள் அனைத்திற்கும் மனம் வருந்திய பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து விசுவாசிகளின் சார்பாக இறைவன் மற்றும் மனித குலம் முழுவதிடமும் மன்னிப்பு கேட்பதோடு நிறைவு செய்வார் என்று தெரிவித்தார்.
அக்டோபர் 11 அன்று மாலை வத்திக்கானில், புனித பேதுரு வளாகத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு இறைவேண்டல் வழிபாடு நடைபெறும் என்றும், இந்த நாள் இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் 62ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது என்றும் குறிப்பிட்டதுடன், இந்த ஆயர் மாமன்றமானது, நான்கு மன்றங்களாக பிரிக்கப்பட்டு, ஒன்று, அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களை உள்ளடக்கி, இயேசு சபையின் தலைமையகத்தில், கடவுளின் மக்கள், மறைப்பணியின் நோக்கம் ஆகிய மைய பொருளில் நடைபெறும் என்றும் கர்தினால் Grech கூறினார்.
இரண்டாவது மன்றம் கூட்டொருங்கியத் திருஅவையில் ஆயர்களின் பங்கு மற்றும் அதிகாரம் என்ற பொருளில் அகுஸ்தீனியன் மையத்தில் நடைபெறும் எனவும், மற்ற 2 மன்றங்கள் தல மற்றும் உலகளாவிய திரு அவையின் உறவுகள் என்ற தலைப்பில் இயேசு சபையின் தலைமையகத்தில் அக்டோபர் 16 அன்று நடைபெறும் என்றும் மேலும் கூறினார் கர்தினால்.
272 ஆயர்கள் மற்றும் 96 ஆயர் அல்லாதவர்கள் உட்பட 368 வாக்களிக்கும் உறுப்பினர்களைக் கொண்ட இந்த இரண்டாவது அமர்வில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை, முதல் அமர்வில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையைப் போன்றது என்று உலக ஆயர் மாமன்ற பொது தொடர்பாளர், கர்தினால் Jean-Claude Hollerich விளக்கினார்.
26 மாற்றங்கள் உள்ளன, முக்கியமாக பிற கிறிஸ்தவ பிரதிநிதிகளின் பங்கேற்பு எண்ணிக்கை 12இல் இருந்து 16 ஆக அதிகரித்துள்ளது என்பதையும், சீனாவைச் சேர்ந்த இரண்டு ஆயர்கள் பங்கு பெறுவதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்