கர்தினால் Eugenio Dal Corsoவின் மறைவுக்கு திருத்தந்தை அனுதாபம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இத்தாலியில் பிறந்து அங்கோலா நாட்டில் ஆயராக பல ஆண்டுகள் பணியாற்றிய கர்தினால் Eugenio Dal Corso அவர்களின் மரணத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தியை இத்தாலியின் வெரோனா மறைமாவட்ட ஆயருக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அர்ஜெண்டினாவிலும் அங்கோலாவிலும் மறைப்பணியாளராகச் செயலாற்றியதுடன், ஏழைகள் மற்றும் பலவீன மக்களுடன் சிறப்பு அக்கறையுடன் செயல்பட்ட கர்தினாலின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபிப்பதாகவும், அவர் சார்ந்திருந்த இறைபராமரிப்பின் எளிய பணியாளர் சபைக்கும், வெரோனா மறைமாவட்டத்திற்கும், கர்தினாலின் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடுவதாகவும் வெரோனா ஆயர் Domenico Pompili அவர்களுக்கு அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
1939ஆம் ஆண்டு பிறந்த கர்தினால் Eugenio Dal Corso அவர்கள், புனிதர் ஜான் கலாபிரியா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இறைபராமரிப்பின் எளிய பணியாளர்கள் சபையில் இணைந்து அருள்பணியாளராக அர்ஜெண்டினாவிலும் அங்கோலா நாட்டிலும் மறைப்பணியாற்றினார். 1995 முதல் 2018 வரை அங்கோலா நாட்டில் இரு மறைமாவட்டங்களில் ஆயராகப் பணியாற்றியபின் 2019ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
கர்தினால் Eugenio Dal Corso அவர்கள் தன் 85ஆம் வயதில் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி ஞாயிறன்று இத்தாலியின் வெரோனா மாவட்டத்திலுள்ள Negrar di Valpolicella என்னுமிடத்தில் இறைபதம் சேர்ந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்