கர்தினால் ரெனாத்தோ மர்த்தினோ அவர்கள் இறைபதம் சேர்ந்தார்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
நீதி மற்றும் அமைதிக்கான திருப்பீடத்துறை, புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கான திருப்பீடத்துறை ஆகியவற்றின் முன்னாள் தலைவரான கர்தினால் ரெனாத்தோ ரஃபேலே மர்த்தினோ அவர்களின் மரணத்தையொட்டி ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 28, திங்கள்கிழமையன்று கர்தினால் மர்த்தினோ அவர்கள் இறைபதம் சேர்ந்ததையொட்டி தன் அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தியை கர்தினாலின் சகோதரர் மர்ச்செல்லோ மர்த்தினோவுக்கு அனுப்பியுள்ள திருத்தந்தை, கர்தினால் மர்த்தினோ அவர்கள் திருஅவையின் பல்வேறு துறைகளில் சிறப்புப் பணியாற்றி திருஅவைக்கும் மனித குலத்திற்கும் சேவையாற்றியுள்ளதை பாராட்டியுள்ளதுடன், அவர் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் வெளியிட்டுள்ளார்.
இத்தாலியின் சலெர்னோ என்னுமிடத்தில் 1932ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதி பிறந்த கர்தினால் மர்த்தினோ அவர்கள், 1957ல் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டு, நிக்கரகுவா, பிலிப்பீன்ஸ், லெபனோன், கானடா, பிரசில் ஆகிய நாடுகளுக்கான திருப்பீடத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார்.
மேலும், ஐ.நா.விற்கான திருப்பீடத்தூதுவராகவும், நீதி மற்றும் அமைதிக்கான திருப்பீடத்துறையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
கர்தினால் மர்த்தினோ அவர்களின் அடக்கத் திருப்பலி அக்டோபர் 30ஆம் தேதி புதன்கிழமையன்று இத்தாலி நேரம் பிற்பகல் 3 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் இடம்பெறும்.
கர்தினால்கள் அவைத்தலைவர் கர்தினால் Giovanni Battista Re அவர்களால் நிறைவேற்றப்படும் அடக்கத் திருப்பலியின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கலந்துகொண்டு கர்தினாலின் அடக்கப்பெட்டியை ஆசீர்வதிப்பார்.
91வயது நிரம்பிய கர்தினால் மர்த்தினோ அவர்களின் இறப்புடன் திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 233ஆகக் குறைந்துள்ளது, இதில் 112 பேர் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள். 121 பேரே திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் 80 வயதிற்கு உட்பட்டவர்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்