தேடுதல்

இயேசுவின் தூய இதயம் இயேசுவின் தூய இதயம் 

அக்டோபர் 24ல் இயேசுவின் திரு இருதயம் குறித்த புதிய சுற்றுமடல்

மிக ஆழமான சவால்களை எதிர்கொள்ளும் இன்றைய உலகு, இதயமற்றதுபோல் செயல்படும் சூழலில் வெளியிடப்படும் திருத்தந்தையின் சுற்றுமடலுக்கு "Dilexit nos" என பெயரிடப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அக்டோபர் 24, வியாழனன்று, இயேசுவின் திரு இதயம் குறித்த புதிய சுற்றுமடல் ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக ஆழமான சவால்களை எதிர்கொள்ளும் இன்றைய உலகு, இதயமற்றதுபோல் செயல்படும் சூழலில் வெளியிடப்படும் இந்த சுற்றுமடலுக்கு "Dilexit nos", அதாவது, அவர் நம்மை அன்புகூர்ந்தார் என்பது தலைப்பாக இடப்பட்டுள்ளது.  

போராலும், சரிநிகரற்ற சமூக-பொருளாதார நிலைகளாலும், கட்டுப்பாடற்ற நுகர்வுக் கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பங்களாலும் மனிதனின் இயல்புநிலை அச்சுறுத்தப்பட்டுவரும் இன்றைய காலக்கட்டத்தில் இந்த சுற்றுமடல் வழியாக, மக்கள் தங்கள் கண்ணோட்டத்தை மாற்றவும், முக்கிய அடிப்படைத் தேவையாக இருக்கும் இதயத்தை மீண்டும் கண்டுகொள்ளவும் திருத்தந்தை அழைப்பு விடுக்க உள்ளார்.    

அக்டோபர் 24ஆம் தேதி இவ்வாரத்தில் வெளியிடப்பட உள்ள இந்த சுற்றுமடல் குறித்து ஏற்கனவே திருஇதயத்திற்கு என அர்ப்பணிக்கப்பட்ட ஜூன் மாதத்தில் 5ஆம் தேதி புதன் பொதுமறைக்கல்வி உரையின்போது அறிவித்திருந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவை புதுப்பித்தலின் பாதையை ஒளிர்விப்பதற்கு தேவையான சிந்தனைக் கூறுகளை இந்த சுற்றுமடல் வழங்கும் என்ற நம்பிக்கையை அப்போதே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டிருந்தார்.

1673ஆம் ஆண்டு 26 வயது பிரான்ஸ் நாட்டு அருள்சகோதரி புனித Margaret Mary Alacoqueக்கு இயேசுவின் திருஇதயம் காட்சியளித்து 17 ஆண்டுகள் அக்காட்சி தொடர்ந்ததன் 350ஆம் ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டுவரும் இவ்வேளையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இயேசுவின் தூயஇதயம் குறித்த சுற்றுமடலை வெளியிடுகிறார்.

ஏற்கனவே 2013ஆம் ஆண்டு திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களுடன் இணைந்து Lumen fidei என்ற சுற்றுமடலையும், 2015ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் அக்கறை குறித்த Laudato si’  சுற்றுமடலையும், 2020ல் மனித உடன்பிறந்த நிலை குறித்த Fratelli tutti சுற்றுமடலையும் வெளியிட்டுள்ள திருத்தந்தை, தற்போது இவ்வாரத்தில் இயேசுவின் தூயஇதயம் குறித்த Dilexit nos என்ற சுற்றுமடலை வெளியிட உள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 October 2024, 16:38