தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ்.  (Vatican Media)

அனைத்தையும் ஒரே குடும்பமாகப் பார்க்கும் திருஅவை

குடும்ப வணிகத்தைச் சார்ந்தவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் வசித்து, பணி புரிந்தாலும் குடும்பம் என்ற மதிப்பினால் அடையாளப்படுத்தப்படுகின்றார்கள்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

கடவுளின் குடும்பமாகிய திருஅவை அனைத்தையும் இரக்கத்துடன் ஒரே குடும்பமாகப் பார்க்கின்றது என்றும், துணிவும் பொறுப்புணர்வும் ஒன்றிணைந்து செல்வது என்பது மிக அழகானது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 5 சனிக்கிழமை வத்திக்கானில் இத்தாலிய குடும்ப வணிகச் சங்கத்தின் மண்டல உறுப்பினர்கள் ஏறக்குறைய 30 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்ப வணிகத்தில் துணிவும், தொழில்முனைவோர் பொறுப்புணர்வும் ஒன்றிணைந்து செல்லும்போது ஆக்கப்பூர்வமானதாக மாறுகின்றது என்றும் கூறினார்.

இதயத்திலிருந்து வரும் செயல் துணிவுள்ளது, தனக்குத்தானே அது பின்வாங்குவதில்லை என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், பொறுப்புணர்வு மற்றும் பொருளாதார இரகசியம் என்பதற்கு இல்ல மேலாண்மை என்று பொருள் எனவும் சுட்டிக்காட்டினார்.

உங்களது வணிகம், குடும்பம், பொதுவான இல்லமாகிய இப்பூமி, எதிர்கால சந்ததியினரைக் கவனித்துக்கொள்ளுங்கள் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், திருஅவைப் பணியைப்போலவே குடும்ப வணிகமும் ஒரு பொதுவான பகுதியில் குடும்ப உறவு மற்றும் தொழில்முறை அர்ப்பணிப்பில் வேரூன்றி இருக்கின்றது என்றும் எடுத்துரைத்தார்.

குடும்ப வணிகத்தைச் சார்ந்தவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் வசித்து பணி புரிந்தாலும் குடும்பம் என்ற மதிப்பில் அடையாளப்படுத்தப்படுகின்றார்கள் என்றும், செய்யும் பணியில் இதயம் மற்றும் கண்களை விரிவுபடுத்தவும், இல்லம் மற்றும் வணிகத்தில் குழந்தைகள், இளையோர் மற்றும் முதியோருக்குச் செவிசாய்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தாலந்து உவமையில் குறிப்பிடப்படுவது போல நமது தகுதிகள் ஒருபோதும் மண்ணுக்குள் மூடி மறைக்கப்படக்கூடாது என்றும், பயமின்றி நம்பிக்கையுடன் துணிந்து பொதுவான இவ்வுலகத்திற்கான பணியில் முன்னேறிச்செல்ல வேண்டும் என்றும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 October 2024, 12:48