திருத்தந்தையுடன் உக்ரைன் அரசுத்தலைவர் சந்திப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இரஷ்யாவுடனான போரால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டின் அரசுத்தலைவர் Volodymyr Zelenskyy அவர்கள் அக்டோபர் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தையையும் திருப்பீட அதிகாரிகளையும் சந்தித்து உரையாடினார்.
ஏற்கனவே இரு முறை திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடியுள்ள அரசுத் தலைவர் செலன்ஸ்கி அவர்கள், வெள்ளிக்கிழமை காலை திருத்தந்தையை சந்தித்தபின் திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட வெளியுறவுத்துறைச் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு கல்லகர் ஆகியோரையும் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்தாலோசனை நடத்தினார்.
திருப்பீடச் செயலருடன் ஆன சந்திப்பின்போது, உக்ரைனின் போர் நிலைகள் குறித்தும், மனிதாபிமான நெருக்கடிகள் குறித்தும், நாட்டில் நீடித்த அமைதியைக் கொணரும் நோக்கத்தில் போரை முடிவுக்குக் கொணரும் முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. மேலும், உக்ரைன் நாட்டில் திருஅவையின் வாழ்வு குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக திருப்பீட்ட தகவல் தொடர்பகம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
திருத்தந்தையுடனான சந்திப்பின்போது, ‘அமைதி என்பது வலுவற்ற ஒரு மலர்’ என்ற எழுத்துக்களும், மலரின் உருவமும் பொறிக்கப்பட்ட வெண்கல தகட்டையும், இவ்வாண்டிற்கான அமைதி செய்தியையும், திருத்தந்தை எழுதிய சில ஏடுகளையும், உக்ரைன் கிரேக்க கத்தோலிக்கர்கள் குறித்த நூல் ஒன்றையும் திருத்தந்தை அரசுத்தலைவருக்கு பரிசாக வழங்க, அரசுத்தலைவரோ, 2022 மார்ச் மாதம் இடம்பெற்ற Bucha படுகொலைகளை விவரிக்கும் எண்ணெய் கலந்த வண்ண ஓவியத்தை திருத்தந்தைக்கு பரிசளித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்