தேடுதல்

உலக ஆயர்கள் மாமன்ற ஆரம்பத் திருப்பலி

அக்டோபர் 2 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் உலக ஆயர்கள் மாமன்றக்கூட்டத்தின் ஆரம்பத் திருப்பலியானது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான ஆயர்கள், ஆண், பெண் துறவறத்தார், பொது நிலையினர் ஆகியோர் இரண்டு நாள்களுக்கு முன்பாக உரோம் நகரை வந்தடைந்தனர். வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் அவர்களுக்கு மாமன்ற தயாரிப்பாக இரண்டு நாள் தியானமானது நடைபெற்றது. அக்டோபர் 2 காவல்தூதர்களின் திருவிழாவைத் திருஅவை சிறப்பிக்கும் வேளையில் உலக ஆயர்கள் மாமன்றக் கூடத்திற்கான ஆரம்பத் திருப்பலியானது உரோம் உள்ளூர் நேரம் காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. ஏறக்குறைய 20000 திருப்பயணிகள் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருக்க பொம்பே அன்னை மரியா திருத்தலத்தில் இருந்து வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்தி பீடத்தினை வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தின் வலப்புறத்திலிருந்து வருகைப்பவனியானது ஆரம்பமானது. மாமன்றத்தின் உறுப்பினர்கள், அருள்பணியாளர்கள், ஆயர்கள் கர்தினால்கள் என அனைவரும் பவனியாக பீடத்தினை வந்தடைந்தனர். சிலுவை அடையாளம் வரைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக ஆயர்கள் மாமன்ற கூட்டத் துவக்கத்திற்கான திருப்பலியினை இலத்தீன் மொழியில் ஆரம்பித்தார். அதனைத்தொடர்ந்து முதல் வாசகமானது இஸ்பானிய மொழியிலும், இரண்டாம் வாசகமானது ஆங்கிலத்திலும் வாசிக்கப்பட்டன. நற்செய்தி வாசகமானது வாசிக்கப்பட்டபின் திருத்தந்தை அவர்கள் உலக ஆயர்கள் மாமன்றக் கூட்டத்தின் ஆரம்பத் திருப்பலியின் மறையுரையினை வழங்கினார். திருத்தந்தையின் மறையுரைக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

இன்று நாம் காவல் தூதர்களின் திருவிழாவினைக் கொண்டாடி மகிழும் வேளையில், உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான துவக்கத்தினையும் கொண்டாடுகின்றோம். இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தைகளிலிருந்து, குரல், புகலிடம், குழந்தை என்னும் மூன்று சிந்தனைகளில் நமது கவனத்தை செலுத்துவோம்.

முதலில் குரல்.

வாக்களிக்கப்பட்ட நிலத்தை நோக்கிய பயணத்தின்போது இஸ்ரயேல் மக்களை வானதூதர்களின் குரலுக்கு செவிசாய்க்கச் சொல்கின்றார் இறைவன். இந்த அடையாளமானது இன்று நம்மையும் தொடுகின்றது. ஏனெனில் சினோடல் எனப்படும் ஒருங்கிணைந்தப் பேரவையாகிய இந்த உலக ஆயர்கள் மாமன்றமும் ஒரு பயணம் போன்றது. இப்பயணத்தில் கடவுள் நமது கரங்களில், சிறந்த மக்களின் வரலாறு, கனவுகள் மற்றும் நம்பிக்கையை வைக்கின்றார். உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் வாழ்கின்ற, ஒரே நம்பிக்கையால் தூண்டப்பட்ட, ஒரே தூய்மைத்துவத்தின் விருப்பம் கொண்ட, சகோதர சகோதரிகளுடன் இணைந்து, அவர் நம்மை அழைத்துச் செல்ல விரும்பும் இடத்தை அடைய, எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். கடவுளின் குரலுக்கு செவிசாய்ப்பதன் வழியாக இதனை நம்மால் செய்ய முடியும்.

கடந்த மூன்று ஆண்டுகள் தீவீர உழைப்பில் சேகரிக்கப்பட்ட பங்களிப்புக்கள், பகிர்தல்கள், ஒப்பீடுகள், மனதையும் இதயத்தையும் தூய்மைப்படுத்திய பொறுமையான முயற்சிகள் போன்றவை மரியாதை, கவனம், செபம், கடவுளது இறைவார்த்தையின் ஒளியினால் நாம் கண்டடைந்த உறுதியான பாதை போன்றது. தூய ஆவியின் ஆற்றலுடன், செவிசாய்த்தல், கருத்துக்கள், எதிர்பார்ப்புக்கள், முன்மொழிவுகள், போன்றவற்றின் வழியாக திருஅவையில் உரையாடும் கடவுளின் குரலைக் கேட்டுப் புரிந்து கொள்ளுதல் அவசியம். நாம் பலமுறை கூறியது போல நமது மாமன்றமானது ஒரு பாரளுமன்றக் கூட்டமல்ல மாறாக ஒன்றிப்பின் குரலைக் கேட்கும் இடம்.

கடவுளின் வார்த்தையைக் கேட்கும் உரிமை பெற்றவர்கள் நாங்கள் என்று இறுமாப்புடன் கருதுபவர்களால் தூயஆவியின் பிறரன்புப்பணியில் நமக்குள்ளும் நம்மைச் சுற்றிலும் பன்முகத்தன்மையில் நல்லிணக்கத்தை உருவாக்க முடியாது. மாறாகக் கடவுளின் ஒவ்வொரு வார்த்தையையும் நன்றியுணர்வுடனும் எளியமனத்துடனும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். கொடையாகப் பெற்றதை நம் உடன் வாழும் சகோதர சகோதரிகளுக்குக் கொடையாக வழங்கவேண்டும். நமது பங்களிப்புக்கள் முக்கியமானவைகளாகவோ, திணிக்கப்பட்டவைகளாகவோ இல்லாமல், பிறருடன்  பகிர்ந்து கொண்ட பரிசுகள் போன்று தியாக மனநிலையுடன் கடவுளின் திட்டத்தின்படி புதியவற்றை உருவாக்குவதற்கான பங்களிப்பாக அவற்றைக் கருத வேண்டும். இல்லையெனில், கடவுளின் வார்த்தைக்கும், உடன் வாழ்பவர்களின் வார்த்தைக்கும் செவிமடுக்காது, தங்களது ஆலைக்குள் மட்டும் தண்ணீர் இருந்தால் போதும் என்று இழுக்கும் மனிதர்கள் போலும், காதுகேளாதவர்கள் மத்தியில் நடக்கும் உரையாடல்கள் போலும், நம்மை நாம் நமக்குள் மூடிக்கொள்வோம்.

நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நம்மிடம் தீர்வுகள் இல்லை, ஆனால் இறைவன் தீர்வைத் தருகின்றார். பாலைவனத்தில் அறிவற்ற செயல்களுக்கு இடமில்லை என்பதை நினைவில் கொள்வோம். வழிகாட்டுதலுக்கு நாம் கவனம் செலுத்தாவிட்டால், நமது தேவைகள் தன்னிறைவு பெறாமல், பசி மற்றும் தாகத்தால் நாம் இறந்து போகலாம். ஆகவே, நமது எல்லைகள் மற்றும் இடர்ப்பாடுகளுக்கு அப்பால் நமது பயணத்தில்  நாம் பாதுகாப்பாக செல்ல விரும்பினால், கடவுளுக்கும் அவருடைய தூதரின் குரலுக்கும் செவிசாய்ப்போம்.

இரண்டாவது புகலிடம்.

அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்; என்ற திருப்பாடல் வரிகளுக்கு ஏற்ப சிறகுகளின் கீழ் புகலிடம். சிறகுகள் சக்திவாய்ந்த கருவிகள், தங்களது தீவிரமான அசைவுகளால் தரையில் இருந்து உடலைத் தூக்கும் திறன் கொண்டவை. இருப்பினும், மிகவும் வலிமையான அச்சிறகுகள் கீழே குனிந்து அரவணைப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் எளியவர்களுக்குத் தங்களைக் கேடயமாகவும் வரவேற்கும் கூடுகளாகவும் ஆக்கிக் கொள்ளும் திறன் படைத்தவை.

கடவுள் நமக்காக என்ன செய்கிறார் என்பதன் அடையாளமாகவும் இந்த ஆயர் மாமன்றக் கூட்டத்தின்போது நாம் பின்பற்ற வேண்டிய ஒரு முன்மாதிரிகையாகவும் இச்சிறகுகள் இருக்கின்றன. அன்பான சகோதர சகோதரிகளே, அறிவுக்கூர்மையான சிந்தனைகள் மற்றும் நுண்ணறிவுகளின் ஆற்றலுள்ள அசைவுகளால் தங்களை உயர்த்திக் கொள்ளக்கூடிய பலமான, ஆயத்தமான மனிதர்கள் பலர் நம்மிடையே உள்ளனர். ஒரு செழுமையாக விளங்கும் இவை அனைத்தும், நம்மைத் தூண்டுகின்றன, உந்தித்தள்ளுகின்றன. சில நேரங்களில் வெளிப்படையாக சிந்திக்கவும் தீர்க்கமாக முன்னேறவும் அழைப்புவிடுக்கின்றன. சவால்கள் மற்றும் சிரமங்களை எதிர்கொண்டாலும் நாம் நம்பிக்கையில் உறுதியாக இருக்க உதவுகின்றன. திறந்த இதயம், உரையாடலில் உள்ள இதயம் தேவை. தங்களது உறுதிப்பாடுகளினால் மூடியிருக்கும் இதயங்கள் கடவுளின் ஆவிக்குரியதோ இறைவனுக்குரியதோ அல்ல. திறந்த இதயங்களாக உரையாடலில் இருக்கும் இதயங்கள் ஒரு வெளிப்படையான கடவுளின் பரிசு. திருத்தந்தை ஆறாம் பவுல் கூறுவது போல, வரவேற்பு, அரவணைப்பு, செயல்பாட்டிற்கான இடம், தீவிர ஆன்மிகத்தின் மையக்கருத்து உள்ள சகோதரர்கள் ஒருமித்து வாழ்கின்ற இல்லம்.

இங்கே, ஒவ்வொரு நபரும், தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் தன்னை வெளிப்படுத்துகின்றார். அவரைச் சுற்றி அன்பு செய்கின்ற, மதிக்கின்ற, பாராட்டுகின்ற, தான் சொல்வதைக் கேட்க விரும்புகின்ற நண்பர்கள் இருப்பதை உணர்கிறார்.

ஆயர் மாமன்றத்தில் இடம்பெறும் உரையாடல்களை எளிமைப்படுத்துபவர்கள் இருக்கின்றனர். இவர்கள் நாம் முன்னேறிச் செல்ல உதவுபவர்கள். அரவணைத்தல், பாதுகாத்தல் மற்றும் கவனித்தல் என்பது திருஅவை தன்மையின் ஒரு பகுதியாகும். விருந்தோம்புகின்ற இடமாக, பெரும்பான்மையினர் சிறுபாண்மையினர் என்ற வேறுபாடின்றி இணக்கமுள்ளதாக அதன் வலிமை மற்றும் அழகினால் முன்மாதிரிகையாக திகழ்கின்றது திருஅவை. பெந்தேகோஸ்து பெருவிழாவின்போது பல்வேறு குழப்பங்கள் மற்றும் வேறுபாடுகளுக்கு மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்திய தூய ஆவியார் இந்த இணக்கமானது நம்மில் உருவாக உதவுகின்றார்.  எனவே திருஅவை அமைதியை வழங்கின்ற இடமாக எல்லோருக்கும் திறந்திருக்கின்ற இடமாக இருக்கவேண்டும். தாயின் கையில் இருக்கும் குழந்தை போல தந்தையின் இரக்கத்தைப் பெறும் பிள்ளைகள் போல ஒவ்வொருவரும் வரவேற்கப்பட வேண்டும்.   

மூன்றாவது, குழந்தை

நற்செய்தியில் இயேசு சிறு குழந்தை ஒன்றை சீடர்கள் நடுவில் நிறுத்தி அக்குழந்தையை போல உள்ளம் கொண்டவர்களாக மாற அழைப்புவிடுக்கின்றார். விண்ணகத்தில் யார் பெரியவர் என்று சீடர்கள் கேட்ட கேள்விக்கு என் பெயரால் இச்சிறுகுழந்தையை ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கின்றார். என்னை ஏற்றுக்கொள்கின்றவர் என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கின்றார் என்று பதிலளிக்கின்றார் இயேசு.

ஆயர் மாமன்றத்தில் பங்கேற்க இருக்கும் நாம் அனைவரும் நமது சிந்தனை, இதயம் மற்றும் கண்ணோட்டத்தின் அடிப்படையில் பெரியவர்களாக இருந்தாலும், தாழ்ச்சியுள்ளவர்களாக, சிறியவர்களாக, எளியவர்களாக, நம்மை மாற்றிக்கொள்ளும்போது நாம் விண்ணரசிலும் பெரியவர்களாகக் கருதப்படுகின்றோம். ஏனெனில் தன்னைத்தானேத் தாழ்த்திக் கொள்பவர் உயர்த்தப்படுகின்றார். சிறுகுழந்தைகள் வானதூதர்கள் போன்றவர்கள், கடவுளின் முகத்தைக் காண்பவர்கள், கடவுளது அன்பின் தொலைநோக்கிப் போன்றவர்கள்.  

சகோதர சகோதரிகளே, இந்த திருஅவையின் பயணத்தை உலகை நோக்கி மீண்டும் தொடங்குவோம், ஏனென்றால் கிறிஸ்தவ சமூகம் எப்போதும் மனிதகுலத்தின் பணியில் உள்ளது. அனைவருக்கும் நற்செய்தியின் மகிழ்ச்சியை அறிவிக்கிறது. போர்ச்சூழலும் வன்முறையின் நெருப்பும், நாடுகளையும் மக்களையும் தொடர்ந்து அழித்துக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் மனிதாபிமான தேவை அதிகமாக உள்ளது.

அன்னை மரியாவிடம் அமைதியின் பரிசை நாடுவோம். அக்டோபர் 6 ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில் உரோம் தூய மேரி மேஜர் ஆலயத்தில் செபமாலை செபித்து இதற்காக வேண்ட இருக்கின்றேன். இந்நிகழ்வில் உலக ஆயர்கள் மாமன்றத்தின் உறுப்பினர்களும் இணைந்து கொள்ள அழைப்புவிடுக்கின்றேன்.

அக்டோபர் 7 திங்கள்கிழமையை தவம் மற்றும் செபத்திற்காக அர்ப்பணித்து அமைதிக்காக செபிக்க அழைப்புவிடுக்கின்றேன். ஒன்றிணைந்து பயணிப்போம். கடவுளின் குரலைக் கேட்போம். தூய ஆவியின் ஆற்றலினால் வழிநடத்தப்பட நம்மைக் கையளிப்போம்.

திருத்தந்தையின் மறையுரையைத் தொடர்ந்து ஆங்கிலம், அரபு, பிரெஞ்சு, சீனம், ஜெர்மானியம் ஆகிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன. ஆயர் துபினா அவர்கள் திருப்பலியின் நற்கருணை வழிபாட்டுப் பகுதியைத் தொடர திருநற்கருணைக் கொண்டாட்டத்துடன் திருப்பலி இனிதே நிறைவுற்றது.

திருப்பலியின் நிறைவில் கூடியிருந்த மக்களுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அதன்பின் வளாகத்தில் கூடியிருந்த மக்களிடையே திறந்த காரில் வலம்வந்து திருப்பயணிகளை வாழ்த்தினார் திருத்தந்தை. உலக ஆயர்கள் மாமன்றக் கூட்டமானது  அக்டோபர் 2 முதல் 27 வரை வத்திக்கானில் நடைபெற உள்ளது.

இந்த மாமன்றமானது நல்ல முறையில் நடைபெறவும் தூய ஆவியின்  வழிகாட்டுதல்களை திருஅவை பெற்று சிறப்புறவும் தொடர்ந்து செபிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 October 2024, 10:28