தேடுதல்

பனிச்சறுக்கு விளையாட்டு அமைப்பின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் பனிச்சறுக்கு விளையாட்டு அமைப்பின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்   (VATICAN MEDIA Divisione Foto)

உடன்பிறந்த உணர்வை நம்மில் உருவாக்கும் விளையாட்டு

விளையாட்டின் உள்ளார்ந்த மதிப்புகள், நிலைத்தத்தன்மை, நேர்மை, நட்பு, ஒற்றுமை ஆகியவற்றை விளையாட்டு முயற்சிகளில் எப்போதும் வளர்த்துக் கொள்ள வேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

விளையாட்டு உடன்பிறந்த உணர்வை நம்மில் உருவாக்குகின்றது என்றும், கம்பீரமான உயர்ந்த மலைகள் நிறைந்த ஆஸ்திரியா நாடு, பனிச்சறுக்கு விளையாட்டுக்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை  பிரான்சிஸ்.

அக்டோபர் 10 வியாழனன்று வத்திகானின் கொன்சிஸ்தோரோ அறையில் உலக பனிச்சறுக்கு விளையாட்டு 2025 இல் பங்கேற்க இருக்கும் ​​ஆஸ்திரியாவின் பனிச்சறுக்கு விளையாட்டு அமைப்பின் உறுப்பினர்கள் ஏறக்குறைய 103 பேரை சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1905 இல் நிறுவப்பட்ட பனிச்சறுக்கு விளையாட்டிற்கான ஆஸ்திரியா சங்கம், தேசிய அளவில் பல்வேறு பனிச்சறுக்கு நடவடிக்கைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், குறிப்பாக விளையாட்டு வீரர்களின் சிறந்த செயல்திறனை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

விளையாட்டின் உள்ளார்ந்த மதிப்புகள், நிலைத்தத்தன்மை, நேர்மை, நட்பு, ஒற்றுமை ஆகியவற்றை விளையாட்டு முயற்சிகளில் எப்போதும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இதன் வழியாக உடன்பிறந்த உணர்வை விளையாட்டு வீரர்கள் உலகிற்கு அளித்து பங்களிக்கின்றார்கள் என்றும்  கூறினார்.

அழகான இயற்கையின் அதிசயங்களுக்கு மத்தியில், படைத்த இறைவனை, ஆஸ்திரியா இயற்கைச்சூழல் புகழ்ந்து பாடுகிறது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், விளையாட்டு வீரர்களை கடவுளின் தூதர்கள் எல்லா ஆபத்துக்களிலிருந்தும் பாதுகாத்து உடன் வரட்டும் என்றும், எளிதான காரியமல்லாத இப்போட்டிகளில் அவர்கள் சிறப்புடன் விளையாட அவர்களுக்காக செபிப்பதாகவும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 October 2024, 13:20