கலாச்சாரத்தை உருவாக்குகின்ற ஆரோக்கியமான விளையாட்டுகள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
விளையாட்டு பொறுமை, செவிசாய்த்தல், மரியாதை, கடமைகளைச் செய்தல், உடன் விளையாட்டு வீரர்களுடன் ஒத்துழைத்தல் போன்றவற்றை நம்மில் உருவாக்குகின்றது என்றும், கலாச்சாரத்தை உருவாக்குகின்ற மற்றும் வளர்க்கின்ற ஆரோக்கியமான விளையாட்டுகள் மனித குலத்தின் அழகு மற்றும் உண்மையான மதிப்புகளை நம்மில் வளர்க்கின்றன என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.
அக்டோபர் 20 ஞாயிற்றுக்கிழமை Corriere dello Sport-Stadio என்னும் இத்தாலிய இதழின் 100ஆவது ஆண்டை முன்னிட்டு அவர்களுக்கு அனுப்பிய வாழ்த்துச்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், விளையாட்டுப் போட்டிகள் ஆரோக்கியமானவை என்றும் வலியுறுத்தினார்.
விளையாட்டு என்பது நம்மை ஒரே மக்களாக உணர வைக்கும் காரணிகளில் ஒன்று என்றும், ஒலிம்பிக் அல்லது உலகளவில், கண்டங்களளவில் நடைபெறும் போட்டிகளின்போது ஒன்றிணைந்து நடப்பது என்பது ஒரு குடும்பத்தின் அங்கமாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துரைக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எதிரியை அழித்து, அனைத்தையும் தங்களுக்குச் சொந்தமாக்குவதை நோக்கமாகவும், கட்சிகளுக்கு இடையிலான மோதலை அதிகப்படுத்துவதை விருப்பமாகவும் கொண்ட மனிதர்கள் வாழும் இவ்வுலகில், விளையாட்டு மனிதமாண்பையும் மனித குலத்தின் அழகையும் வளர்க்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
அழிப்பதை விட அழகை வளர்ப்பதற்கான கல்வியைக் கற்பது அவசியம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஒரு செய்தித்தாள் கட்டுரை, ஒரு விளையாட்டு கட்டுரை கூட மக்களுக்கு நிறைய நன்மைகளைச் செய்ய முடியும் என்றும், ஆனால் அது ஒருபோதும் தீங்கையோ அல்லது அவநம்பிக்கையின் சூழலையோ தூண்டாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இணைந்து விளையாடுவதால் உடன் பிறந்த உணர்வு நம்மில் வளர்கின்றது என்றும், எதிரிகளை அல்ல மாறாக நண்பர்களை விளையாட்டு மைதானத்தில் உருவாக்குகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், வெற்றியிலிருந்து மகிழ்வையும் தோல்வியிலிருந்து அனுபவத்தையும், வியர்வையின் அருமையையும் நாம் கண்டறிகின்றோம் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
தோல்வியிலிருந்து உழைப்பின் விலையைக் கற்றுக்கொள்ளும் விளையாட்டு வீரர், தனது தவறுகளிலிருந்து மீண்டும் எழுந்து நடக்கும் ஆற்றலையும், அதிலிருந்து அனுபவப் பாடங்களைக் கற்று முன்னேறிச் செல்லும் அனுபவத்தையும் பெறுகின்றார் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்