மீட்பின் வரலாறு புலம்பெயர்ந்தோர் பயண மக்களின் வரலாறு
மெரினா ராஜ் – வத்திக்கான்
புலம்பெயர்ந்தோர் வாழ்வை உயிர்ப்பிக்கும் எதிர்காலத்திற்கான தேடலானது, இனம் மற்றும் நிபந்தனைகளுக்கு அப்பால் அனைவரையும் ஒன்றிணைக்கும் மீட்பின் தேவையை வெளிப்படுத்துகிறது என்றும், மீட்பின் வரலாறு என்பது புலம்பெயர்ந்தவர்களின் பயணத்தில் இருக்கும் மக்களின் வரலாறு என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 28 திங்கள்கிழமை வத்திக்கானில் ஸ்கலபிரினி என அழைக்கப்படும் தூய சார்லஸ் மறைப்பணியாளர்கள் சபையின் 16 பொதுப்பேரவையை முன்னிட்டு அதன் உறுப்பினர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற கருப்பொருளில் சிறப்பிக்கப்பட இருக்கும் அவர்களின் பொதுப்பேரவைக்குத் தனது வாழ்த்துக்களையும் கூறி மகிழ்ந்தார்.
புலம்பெயர்ந்தோர்
புலம்பெயர்ந்தோர், மேய்ப்புப்பணி, இரக்கச்செயல்கள் என்னும் மூன்று தலைப்பில் தனது கருத்துக்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புலம்பெயர்ந்தோர் எதிர்நோக்கின் ஆசிரியர்கள் என்றும், அன்றாட வாழ்விற்கான உணவினை வேறு எங்காவது தேடிக் கண்டடைவோம் என்ற நம்பிக்கையில் வாழ்பவர்கள் என்றும் கூறினார்.
மூடப்பட்ட, நிராகரிக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் நம்பிக்கையை அவர்கள் ஒருபோதும் கைவிடமாட்டார்கள் என்றும், தாய்நாட்டில் விடப்பட்ட தங்களது குடும்பத்தார் மேல் கொண்ட அளவற்ற அன்பால், அத்தகைய உறுதியுடன் இருக்கும் அவர்களின் செயல் பல வாழ்க்கைப் பாடங்களை நமக்குக் கற்பிக்கின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சந்திப்பு, உரையாடல், அயலானாக இருக்கும் கிறிஸ்துவை வரவேற்கும் இயக்கவியல் போன்றவற்றின் வழியாக புலம்பெயர்ந்தோர் அனைவருடனும் சேர்ந்து, ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக வாழ வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், பழைய ஏற்பாடு எடுத்துரைப்பது போல விதவைகள், அனாதைகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடவுளது முன்னுரிமை பெற்றவர்கள் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம் என்றும் எடுத்துரைத்தார்.
எதிர்நோக்கின் மேய்ப்புப்பணி
இடம்பெயர்தல் என்பது தகுந்த ஆதரவுடன், அனைவரின் வளர்ச்சியின் காலமாக மாறும்போது, தனிமை, கைவிடப்பட்ட அனுபவம், நெருக்கடிகள் போன்றவை சிதைந்துவிடும் என்றும், நம்பிக்கை இழப்பு மற்றும் விரக்திக்கு வழிவகுப்பவைகள் புலம்பெயர்ந்தோரின் இல்லங்களில் இருந்து அகற்றப்படும் என்றும் கூறினார்.
புலம்பெயர்ந்தவர் வரவேற்கப்பட வேண்டும், அவர்களுடன் நாம் செல்ல வேண்டும், அவர்கள் வாழ்வு ஊக்குவிக்கப்பட வேண்டும், ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், அவர்களின் காயங்களின் மீது சாய்ந்து, அவர்களின் உடல், ஆன்மிக மற்றும் உளவியல் பாதிப்புகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
பிறரன்புப் பணிகள்
உலகம் பெரும் துன்பங்களின் பாரத்தினால் புலம்புகிறது என்ற தூய ஜான் பாப்டிஸ் ஸ்கலபிரினி அவர்களின் வரிகளை சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், இக்காலத்திற்கு இவ்வரிகள் மிகவும் பொருத்தமானவை என்றும் புலம்பெயர்ந்தோர் பலர் அடைக்கலம் தேடி செல்லும் இடங்களில் இரக்கமின்றி நடத்தப்படுகின்றார்கள் என்றும் கூறினார்.
திருவிவிலியத்தில் யூபிலி சட்டங்களில் ஒன்றான, நிலத்தை இழந்தவர்களுக்குத் திருப்பித் தருவது என்பது ஒரு நீதியான செயல், பிறரன்புப் பணிகளை அடையாளப்படுத்தும் செயல் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், புலம்பெயர்ந்தோரின் மாண்பும் உரிமைகளும் மதித்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், புலம்பெயர்ந்தோர் யாராக இருந்தாலும், அவர் எங்கிருந்தாலும், அடையாளம் காணும் வகையில், தனித்துவமான, புனிதமான, அனைவரின் நன்மைக்காக விலைமதிப்பற்றதாகக் கருதப்படும் கடவுளின் கொடையாக அவர்கள் நடத்தப்படவேண்டும் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்