தேடுதல்

யனோமாமி இன மக்களின் மாண்பும் அடிப்படை உரிமைகளும், பாதுகாக்கப்பட.

“எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்” என்றஇறைவார்த்தைகள் நம்மை அன்பு செய்கின்ற, அவரது திருமண விருந்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகின்ற கடவுளின் அழைப்பை எல்லாருக்கும் எடுத்துச் செல்லவேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றன.

மெரினா ராஜ் - வத்திக்கான்

புதிய புனிதர் Giuseppe Allamano அவர்களின் சான்றுள்ள வாழ்வானது மிகவும் பலவீனமானவர்கள் மற்றும் பாதிக்கப்படுபவர்கள் மீது கவனம் செலுத்துவதன் தேவையை நமக்கு நினைவூட்டுவதாகவும், பிரேசிலின் அமேசான் காடுகளில் வாழும் யனோமாமி இன மக்களின் மாண்பும் அடிப்படை உரிமைகளும், பாதுகாக்கப்பட வேண்டுகோள் விடுப்பதாகவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 20 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற 14 புதிய புனிதளுக்கான புனிதர் பட்ட கூட்டுத் திருப்பலியின் இறுதியில் வழங்கிய மூவேளை செபஉரையின்போது இவ்வாறு எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலியில் பங்கேற்ற கர்தினால்கள் ஆயர்கள், அருள்பணியாளர்கள், புதிய புனிதர்களின் சபையைச் சார்ந்தவர்களான, ஃபிராத்தி மினோரி, மாரனைட் வழிபாடு, கொன்சோலாத்தா மறைப்பணியாளர்கள், திருக்குடும்ப சிறிய சகோதரிகள் சபையினர், ஒப்லாத்தே தூய ஆவியார் சபையைச் சார்ந்தவர்கள் என அனைவரையும் வாழ்த்தி நன்றி தெரிவித்தார்.

இத்தாலிய குடியரசுத்தலைவர் மற்றும் அரசுத்தலைவர்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், உகாண்டா மறைசாட்சியாளர்கள் புனிதர்களாக அறிவிக்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டை முன்னிட்டு உரோம் நகருக்கு திருப்பயணம் வந்திருக்கும் அந்நாட்டின் துணை அரசுத்தலைவரையும் வாழ்த்தினார்.

அக்டோபர் 20 அன்று சிறப்பிக்கப்பட்ட உலக மறைப்பணி தினக் கருப்பொருளான “எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்” என்பதை நினைவுறுத்திய திருத்தந்தை அவர்கள், இந்த இறைவார்த்தைகள் நம்மை அன்பு செய்கின்ற, அவரது திருமண விருந்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகின்ற கடவுளின் அழைப்பை எல்லாருக்கும் எடுத்துச் செல்லவேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றது என்றும் கூறினார்.

ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஒவ்வொரு சூழலிலும் நற்செய்தி அறிவிப்பிற்கான தங்களது சொந்த சான்று வாழ்வுடன் உலகளாவிய பணியில் பங்கேற்க அழைக்கப்படுகிறார் என்பதை இப்புதிய புனிதர்களின் வாழ்வு எடுத்துரைக்கின்றது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், பல தியாகங்களை மேற்கொண்டு நற்செய்தியின் ஒளியை அனைவருக்கும் எடுத்துரைகொண்டிருக்கும் அனைத்து மறைப்பணியாளர்களை நமது செபம் மற்றும் உதவியுடன் ஆதரிப்போம் என்றும் கூறினார்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகத் தொடர்ந்து செபிப்போம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், பாலஸ்தீனம், இஸ்ரயேல், லெபனோன், உக்ரைன், சூடான், மியான்மார் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட எல்லா மக்களுக்காகவும் செபிப்போம் என்றும், அமைதி என்னும் கொடையை அவர்கள் விரைவில் பெற வேண்டுவோம் என்றும் கூறினார்.

கன்னி மரியாவைப் போலவும், புனிதர்களைப் போலவும், நற்செய்தியின் துணிவான மற்றும் மகிழ்ச்சியான சாட்சிகளாக இருக்க அன்னை மரியா நமக்கு உதவுவாராக என்று கூறிய திருத்தந்தை அவர்கள் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 October 2024, 13:09