தேடுதல்

வத்திக்கான் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகள் வத்திக்கான் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகள் 

அருள்பணியாளர் Marcelo Pérez வின் வாழ்வு கிறிஸ்தவ வாழ்விற்கு விதை

அருள்பணியாளர் Marcelo அவர்களின் தியாகம் நிறைந்த வாழ்வும், அமைதியும், நற்செய்தியின் மீது கொண்ட நம்பிக்கைக்காகக் கொல்லப்பட்ட பிற அருள்பணியாளர்களைப் போலவே கிறிஸ்தவ வாழ்க்கையின் விதையாக இருக்கட்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

உலக ஆயர்கள் மாமன்றத்தை நிறைவு செய்துள்ள நாம் இந்த மாதம் முழுவதும் மேற்கொண்ட செயல்கள் அனைத்தும் திருஅவையின் நன்மைக்காக நம்மை முன்னேறிச்செல்ல அருள்வேண்டுவோம் என்றும், படுகொலை செய்யப்பட்ட மெக்சிகோ அருள்பணியாளர் Marcelo Pérez அவர்களின் சான்றுள்ள வாழ்வானது கிறிஸ்தவ வாழ்விற்கு விதைபோன்று இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமை வழங்கிய மூவேளை செபஉரையைத் தொடர்ந்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 22 ஆம் நாள் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்கள் உருவாக்கிய யூத மதத்துடனான உறவுகளுக்கான ஆணையத்தின் 50வது ஆண்டு நிறைவு மற்றும் அக்டோபர் 28 அன்று இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின்போது வெளியிடப்பட்ட Nostra aetate அறிக்கையின் 60 ஆம் ஆண்டையும் நினைவுகூர்ந்தார்.

பெரும் துன்பம் மற்றும் பதற்றம் நிறைந்த இக்காலங்களில், உரையாடல் மற்றும் அமைதிக்கு உள்நாட்டில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களை ஊக்குவிப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 75 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெனீவா மாநாடுகளுக்குப் பின்னர் அக்டோபர் 28 அன்று ஜெனீவாவில் தொடங்கவுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் பன்னாட்டு மாநாடு குறித்தும் எடுத்துரைத்தார்.

இம்மாநாட்டின் வழியாக ஆயுத மோதல்களின் போது, பன்னாட்டு மனிதாபிமான சட்டத்திற்கு இணங்கி, மக்கள் மற்றும் அவர்களின் உயிர், மாண்பு மதிக்கப்படவும், தங்குமிடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் ஒருமைப்பாடு மதிக்கப்படவும் வாய்ப்பாக அமையும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், போரினால் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் அழிக்கப்படுவதைப் பார்க்கும்போது மிக வருத்தமாக இருக்கிறது என்றும் எடுத்துரைத்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை படுகொலை செய்யப்பட்ட மெக்சிகோ அருள்பணியாளர் Marcelo Pérez அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரது இழப்பின் துயரால் வருந்தும் சியாபாஸில் உள்ள தூய கிறிஸ்டோபல் டி லாஸ் காசாஸ் தலத்திருஅவை மக்களுடன் ஆன்மிக நெருக்கத்தை வெளிப்படுத்தினார்.

நற்செய்தியின் ஆர்வமுள்ள ஊழியராகவும், கடவுளின் உண்மையுள்ள மக்களின் ஊழியராகவும் வாழ்ந்த அருள்பணியாளர் Marcelo அவர்களின் தியாகம் நிறைந்த வாழ்வும், அமைதியும், நற்செய்தியின் மீது கொண்ட நம்பிக்கைக்காகக் கொல்லப்பட்ட பிற அருள்பணியாளர்களைப் போலவே கிறிஸ்தவ வாழ்க்கையின் விதையாக இருக்கட்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

மிகவும் வலுவான சூறாவளியால் பாதிக்கப்பட்ட பிலிப்பீன்ஸ் மக்களுக்கு தன் உடனிருப்பை தெரிவித்த திருத்தந்தை அவர்கள், நம்பிக்கை நிறைந்த அம்மக்களை இறைவன் தாங்குவாராக என்றும் எடுத்துரைத்து, உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார்.

அமைதிக்காக செபிக்க வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், குறிப்பாக உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், லெபனோன் ஆகிய நாடுகளில் நடைபெறும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், புனிதமான மனித உயிருக்கு முதலில் மரியாதை செலுத்தவும் தொடர்ந்து செபிப்போம் என்றும் கூறினார்.

போரினால் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் பொதுமக்கள் என்பதை நாம் ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், பல அப்பாவி மக்கள் ஒவ்வொரு நாளும் பலியாகின்றனர், பல குழந்தைகள் படுகொலை செய்யப்படுகின்றனர் என்பதை நாம் ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம் எனவே அமைதிக்காக செபிப்போம் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 October 2024, 16:04