"Dilexit nos" - அவர் நம்மை அன்புகூர்ந்தார் - சுற்றுமடல்
மெரினா ராஜ் – வத்திக்கான்
நமக்குள் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் காயங்களை ஆற்றுவதற்கும், அன்பு மற்றும் பணியாற்றும் திறனை வலுப்படுத்துவதற்கும், இயேசுவினுடைய திருஇதயத்திலிருந்து வாழ்வளிக்கும் நீரின் ஆறுகள் நம் அனைவருக்குள்ளும் பாயவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 24 வியாழனன்று வெளியிடப்பட்ட நான்காவது சுற்றுமடலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மொத்தம் 220 எண்களில் மனித மற்றும் இறைஅன்பில் இயேசுகிறிஸ்துவின் திருஇருதயஅன்பு குறித்து எடுத்துரைத்துள்ளார்.
2013ஆம் ஆண்டு Lumen fidei, 2015ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் அக்கறை குறித்த Laudato si’, 2020ல் மனித உடன்பிறந்த நிலை குறித்த Fratelli tutti என்ற மூன்று சுற்றுமடல்களை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று இயேசுவின் திருஇருதயம் குறித்த Dilexit nos என்ற நான்காவது சுற்றுமடலை வெளியிட்டுள்ளார்.
அவர் நம்மை அன்பு கூர்ந்தார் என்னும் திருமடலானது இயேசு கிறிஸ்துவின் திரு இருதயமானது மனித மற்றும் இறைஅன்பின் பாரம்பரியத்தையும் தற்கால சிந்தனைகளையும் மீட்டெடுக்க அழைப்புவிடுக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கையில் மென்மை மற்றும் மகிழ்ச்சியை மறந்துவிடாதபடி திருஇருதயத்தின் மீதான உண்மையான பக்தியை புதுப்பிக்க அழைப்பு விடுக்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இயேசுவின் திருஇருதய அன்பானது நம்மை அன்பு செய்ய உந்தித்தள்ளுகின்றது, நமது சகோதரர்களை நோக்கிச் செல்ல நம்மை அனுப்புகின்றது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், நம்மேல் அன்பு கூர்ந்த கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்னும் திருத்தூதர் பவுலின் வரிகளை மேற்கோள்காட்டி ஆரம்பமாகின்றது.
அவரது திறந்த இதயம் நமக்கு முன் சென்று நிபந்தனையின்றி நமக்காகக் காத்திருக்கின்றது என்றும், நம்மை அன்பு செய்வதற்கும், அவருடைய அன்பைப் பெறுவதற்கும் அவரே நம்மை முதலில் அன்பு செய்தார் என்றும் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், நியாயமான, ஆதரவான மற்றும் உடன்பிறந்த உணர்வுடன் கூடிய உலகத்தை நோக்கி ஒன்றிணைந்து நடக்கவும், கற்றுக்கொள்ளவும் இயேசுவின் திரு இருதய அன்பு நம்மைத் தூண்டுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்துவின் அன்பு அவருடைய திருஇருதயத்தில் பிரதிபலிக்கிறது, உலகம் தன் இதயத்தை இழந்துவிட்டதாகத் தெரிகிறது, இதயத்திற்குத் திரும்புவதன் முக்கியத்துவம், இயேசுவின் செயல்கள் மற்றும் அன்பின் வார்த்தைகள், வார்த்தை மனுஉருவான நற்செய்தியின் உள்ளடக்கத்திற்குத் திரும்புதல், தாகம் தீர்க்கும் அன்பால் நிரப்பப்பட்ட புனிதர்கள் மற்றும் புனிதைகள், புனித மார்கரெட் மேரி அலகோக் பெற்ற திருஇருதய காட்சிகள், நம் சகோதர சகோதரிகளிடம் நம்மை அனுப்பும் கிறிஸ்துவின் திருஇதயத்தின் மீதான பக்தி, உலகை அன்பு செய்ய வைக்கும் பணி என்னும் பக்கத்தலைப்புகளுடன் இடம்பெற்றுள்ள இச்சுற்றுமடலானது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செபத்துடன் நிறைவுபெறுகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்