தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (AFP or licensors)

மத்திய தரைக்கடல் கத்தோலிக்க மக்களுக்கு திருத்தந்தையின் கடிதம்

விதையானது மண்ணுக்குள் புதைந்து தனது மூச்சினை அடக்கி ஒளியினை நோக்கி மேலெழும்பி வருகின்றது. அவ்விதையைப் போல துயரங்கள் என்னும் இருளால் சூழப்பட்டுள்ள மக்கள், நம்பிக்கையின் தளிர்களாக துளிர்விடுவார்கள்

மெரினா ராஜ் - வத்திக்கான்

போர் என்பது எப்போதும் தோல்விதான் என்பதை மீண்டும் மீண்டும் எடுத்துரைக்க தான் ஒருபோதும் சோர்வடைவதில்லை என்றும், ஆயுதங்கள் எதிர்காலத்தை உருவாக்காது மாறாக அதனை அழித்துவிடும் என்றும் போரினால் துன்புறும் மத்திய கிழக்கு கத்தோலிக்கர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மத்திய தரைக்கடல் பகுதியில் போர் ஆரம்பித்து ஓராண்டானது அக்டோபர் 7 திங்கள்கிழமையுடன் நிறைவுறுவதை முன்னிட்டு அங்கு துன்புறும் கத்தோலிக்க மக்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வன்முறை ஒருபோதும் அமைதியைத் தராது என்று தொடர்ந்து வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், ஆண்டுகள் பல தொடர்ந்த வரலாற்றுப் போர்கள் நமக்கு எதையும் கற்பிக்கவில்லை என்றும், அமைதியை நாடும் சிறுமந்தையாக அம்மக்கள் இருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வளவு இடர்ப்பாடுகள் மற்றும் துன்பங்கள் வந்தாலும், இடம்பெயராது சொந்த நிலத்திலேயே இருக்கும் மக்கள் எப்படி செபிப்பது? எப்படி அன்பு செய்வது? என்பதை அறிந்தவர்கள் என்றும், கடவுளின் அன்பின் விதையாக அவர்கள் இருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

விதையானது மண்ணுக்குள் புதைந்து தனது மூச்சினை அடக்கி ஒளியினை நோக்கி மேலெழும்பி வருகின்றது என்றும், ஒளியை நோக்கி வெளிவந்து கனிகளையும் வாழ்வையும் கொடுக்கின்றது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

அவ்விதையைப் போல துயரங்கள் என்னும் இருளால் சூழப்பட்டுள்ள மக்கள், நம்பிக்கையின் தளிர்களாக துளிர்விடுவார்கள் என்றும், வெறுப்புக்கு பதிலாக அன்பையும், மோதலுக்கு பதிலாக சந்திப்பையும் எல்லாமே எதிர்ப்பாக மாறும்போது, ஒற்றுமைக்கும் சாட்சியாக நம்பிக்கையின் ஒளியினால் வழிநடத்தப்படுவார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.        

துன்புறும் அனைத்துப் பகுதி மக்களுடனும் தனது ஆன்மிக உடனிருப்பை வெளிப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மக்களுக்காகத் தொடர்ந்து செபிப்பதாக எடுத்துரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 October 2024, 14:23