புதிய கர்தினால்களுக்குத் திருத்தந்தையின் கடிதம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
புதிய கர்தினால்களாக அறிவிக்கப்பட உள்ளவர்கள் அனைவரும் உயர்ந்த பார்வை, இணைந்த கரங்கள், வெறுமையான கால்கள் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும், திருஅவையின் ஒற்றுமை மற்றும் உரோமுடன் இணைந்திருக்கும் அனைத்து தலத்திருஅவைகளுடனும் நல்லுறவை ஏற்படுத்துபவர்களாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 8 அன்று திருஅவையில் புதிய கர்தினால்களாக அறிவிக்கப்பட உள்ளதை முன்னிட்டு அப்புதிய 21 கர்தினால்களை உரோமிற்கும் அழைக்கும் விதமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அர்ஜெண்டினாவின் கவிஞரான தூய சிலுவை அருளப்பர் கூறிய கருத்துக்களான உயர்ந்த பார்வை, இணைந்த கரங்கள், வெறுமையான கால்கள் கொண்டவர்களாக புதிய கர்தினால்கள் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
திருஅவையில் பணியாற்றும் கர்தினால்கள் தங்களது பார்வையை உயர்த்துதல், நீட்டித்தல், இதயத்தை விரிவுபடுத்துதல் மிக அவசியம் என்றும், இதன் வழியாக பார்வையை விரிவுபடுத்தி உலகளாவிய வகையில் அனைவரையும் தீவிரமாக அன்பு செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கிறிஸ்துவின் திறந்த இதயத்திற்குள் நுழையுங்கள் என்றும் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இணைந்து செபிக்கும் கரங்கள் திருஅவைக்கு தேவை என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், திருஅவையின் மந்தையை நன்முறையில் மேய்ப்பதற்கு கர்தினால்களின் இணைந்த கரங்கள் வலியுறுத்தும் செபங்கள் மிகவும் தேவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் செபம் என்பது நமது இறைமக்களின் வாழ்வில் கடவுளின் விருப்பத்தைத் தேடவும், கண்டறியவும், பின்பற்றவும் நமக்கு உதவும் தேர்ந்துதெளிதலுக்கான பகுதி என்றும் எடுத்துரைத்துள்ளார்.
போர், பாகுபாடு, துன்புறுத்தல், பசி போன்ற உலகின் துயரம் தரும் பல்வேறு வடிவங்களில் வாழும் மக்களுக்கு இரக்கத்தையும் கருணையையும் கொண்டுசெல்கின்ற கால்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்