நற்செய்தியின் துணிவுள்ள சான்றுகளாக வாழவேண்டும்
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஏழைகளின் நற்செய்தியை, ஏழைகளுக்கான நற்செய்தியை அவர்களுக்குக் கொண்டு வருபவர்களாகவும், பிளவுகளை சரிசெய்து, நம்பிக்கையின் விதைகளை விதைக்கக்கூடிய நற்செய்தியின் துணிவுள்ள சான்றுகளாக வாழ்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 25 வெள்ளிக்கிழமை மாலை உரோம் தூய இலாத்தரன் பெருங்கோவிலில் உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழைகளுக்கு நற்செய்தியை கொண்டு செல்லுதல், சிதைந்ததை சீர்படுத்துதல், எதிர்நோக்கை விதைத்தல் என்னும் மூன்று தலைப்புகளில் கீழ் தனது கருத்துக்களை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவித்தல்
முதலில், ஏழைகளுக்கு நற்செய்தியைக் கொண்டு செல்ல வேண்டும். ஏழைகள் எப்போதும் நம்முடன் இருக்கின்றார்கள், ஏழைகள் கிறிஸ்துவின் உடலாகவும் திருவருளடையாளமாகவும் அவரை நம் கண்களுக்குப் புலப்படுகிறார்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், தெருவோர எளியோர்க்கு பணம் கொடுத்து உதவும்போது அவர்களின் கண்களைப் பார்த்து உதவ வேண்டும், மாறாக பணத்தை தூக்கி எறிந்து நடப்பது என்பது அவர்களில் வாழும் கடவுளை உதாசீனப்படுத்துவது என்றும் கூறினார்.
ஏழ்மையைத் தீர்க்கின்ற ஒரு மாயமந்திரத்தை இயேசு நமக்கு வழங்கவில்லை மாறாக அவர்களிடத்திலும் “நற்செய்தியை” கொண்டு செல்லும்படிக் கேட்கிறார் என்றும், இறைவனால் அன்பு செய்யப்படுவர்கள், கடவுளின் பார்வையில் விலைமதிப்பற்றவர்களாக கருதப்படும் ஏழை எளியோரின் மாண்பு உலகத்தாரால் நசுக்கப்படுகின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
ஏழைகள் எண்களாக, பிரச்சனைகளாகவோ, நிராகரிக்கப்படுபவர்களாகவோ கருதப்படக்கூடாது என்றும், நமது உடலாக இருக்கும் உடன் சகோதரர்கள் போன்று கருதப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள் உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்கள் பலர் ஏழை எளியோர்க்கு பணியாற்றுவதற்காக தங்கள் நேரத்தை பயன்படுத்துவது குறித்து வாழ்த்து தெரிவித்தார்.
வறுமையின் பிரச்சனையை அவசரமாக திருஅவை உணர வேண்டும், அனைவருக்கும் பணியாற்றுவதை அர்ப்பணிப்புடன் கூடிய பொறுப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும், உணவும் நம்பிக்கையும் இல்லாத ஏழைகள், நீதிக்கான பசியுடையவர்கள், எதிர்காலத்திற்கான தாகம், வாழ்க்கையை எதிர்கொள்ள உண்மையான பிணைப்புகள் தேவைப்படுபவர்கள் என வெவ்வேறு வறுமைகளால் குறிக்கப்பட்டவர்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுளது மென்மையின் அடையாளமாக மாறுவோம்! உடனிருப்பு, இரக்கம் மற்றும் மென்மை என்னும் கடவுளின் பண்புநலனில் சிறப்புறுவோம் என்று நினைவூட்டிய திருத்தந்தை அவர்கள், பிறருடன் உடனிருக்காத இரக்கம் இல்லாத, மென்மை இல்லாத ஒரு கிறிஸ்தவன், கிறிஸ்தவன் அல்ல என்றும் எடுத்துரைத்தார்.
சிதைந்ததை சரிசெய்தல்
பெரும் சமூகக் கட்டமைப்பு, சமத்துவமின்மை காரணமாக, அன்றாடம் உணவுப்பொருள்கள் வீணாகின்றன பல ஆடம்பர உணாவு விடுதிகளில் எண்ணற்ற உணவுப்பொருள்கள் கொட்டப்படுகின்றன என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், உண்ண உணவின்றி ஆயிரக்கணக்கான ஏழைகள் நடைபாதைகளில் உறங்குவதை நாம் காண்கின்றோம் என்றும் எடுத்துரைத்தார்.
பணக்காரர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களது தேவைகள் அனைத்தும் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் இவ்வுலகில், ஏழைகள் நோய்வாய்ப்பட்டால் அவர்கள் மாண்புடன் நடத்தப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய முரண்பாடுகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளால் நாம் வாழ்கின்ற இந்த உலகம் சிதைந்துள்ளது என்றும் எடுத்துரைத்தார்.
மேய்ப்புப் பணிகள், தலத்திரு அவையின் சமூக சிந்தனைகள் போன்றவற்றில் மேம்படுத்தலையும், நீதி, அமைதி, உடன்பிறந்த உணர்வின் சான்றுகளாக நம்மை மாற்றி புதிய சமூக மற்றும் ஒற்றுமை வலையமைப்பின் நெசவாளர்களாக சிதைவடைந்த உலகை சரிசெய்பவர்களாக நாம் மாறுவோம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
எதிர்நோக்கை விதைத்தல்
சமூகப் பிரச்சினைகளின் பன்முகத்தன்மையானது நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லும் அளவிற்கு நம்மை கொண்டு செல்லலாம். ஆனால் கிறிஸ்தவ நம்பிக்கை என்பது எப்போதும் செயல்பாட்டில் இருப்பது. ஏனென்றால் வரலாற்றை வழிநடத்துவது இறைவன் தான் என்ற உறுதியால் அது உயிரூட்டப்படுகிறது, மனிதனால் சாத்தியமற்றது என்று தோன்றுவதை அவரில் உருவாக்குகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது! எதிர்நோக்கின் பாதையில் செல்வோம் என்றும், ஒரு நல்ல விதையை விதைக்க வேண்டியதன் அவசியத்திற்கு பதிலளிக்கும் பணியில் ஈடுபடும் பல மக்கள், அந்த சிறிய விதையானது பெரிய மரமாக மாறும் வரை வேறு யாராவது பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் செயல்முறைகளை செயல்படுத்துவதைப் பின்பற்றுகின்றார்கள் என்றும் கூறினார்.
நம்பிக்கையின் புதிய செயல்முறைகளைத் தொடங்க வேண்டும், நம்பிக்கையைக் கனவு காணுதல், நமது அர்ப்பணிப்பின் வழியாக நம்பிக்கையை வளர்த்தல், போன்றவற்றிற்கு ஒரு பொறுப்பான மற்றும் ஆதரவான அர்ப்பணிப்பு மற்றும் துணிவு தேவை என்றும், பிறரன்புப் பணிகளை துணிவுடன் செய்யுங்கள் பெரிய முயற்சிகள் சிறிய கடமைகளுடன் தொடங்கினாலும் கனவு காண பயப்பட வேண்டாம் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்