தேடுதல்

மனித வாழ்வின் எதார்த்தத்தைப் பார்க்கும் இறையியலாளர்களாக மாற...

இறைவனின் கரங்கள் இரக்கமுள்ள கரங்கள் மென்மையான கரங்கள். அக்கரங்கள் விழுந்தவர்களைத் தூக்கி விடுகின்ற, நம்பிக்கையை நோக்கி வழிநடத்துகின்ற கரங்கள் – திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மீட்பின் அடையாளமாக இறையியலாளர்கள் மாறுவதன் வழியாக கடவுளது இரக்கம் அன்பு மற்றும் பணியாக மாறுகின்றார்கள் என்றும், சிலுவையின் உயரத்திலிருந்து இறையியலாளர்கள் மனித வாழ்வின் எதார்த்தத்தைப் பார்க்கத் தூண்டப்படுகின்றார்கள் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 16 வெள்ளிக்கிழமை சிசிலியாவில் உள்ள திருப்பீட இறையியல் கல்லூரியின்  கல்வியாண்டுச் செயல்பாடுகள் தொடங்கப்பட்ட 43ஆவது ஆண்டை முன்னிட்டு அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் சிந்தனை மற்றும் அன்பின் வழிக்கு நம்பிக்கையான நற்செய்தி வலைகளை, இரக்கத்தின் இழைகளால், கடவுளின் அருளால் பிணைத்து மீட்பின் வலைகளாக நெசவு செய்ய வேண்டும் என்றும், இதனால் மத்திய தரைக்கடலில் தலத்திருஅவை நின்று நிலைத்து மனித இனத்திற்கான மீட்பின் அடையாளமாகவும் கருவியாகவும் திகழ முடியும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வலைகள் எப்போதும் கீழே தரையில் உட்கார்ந்து குனிந்து பழுதுபார்க்கப்படுகின்றன என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இதுவே கடவுளை அன்பு செய்வதற்கான மிகச்சிறந்த அடையாளம் என்றும், சீடர்களின் பாதங்களைக் கழுவியவர் மற்றும் கள்வர்களின் கையில் அகப்பட்ட வழிப்போக்கனின் காயங்களில் கட்டுப்போட உதவியவரின் கைகள், இரக்கமுள்ள இறைவனின் கரங்களை அடையாளப்படுத்துகின்றன என்றும் கூறினார்.

வாழ்வின் நற்செய்தி எப்போதும் ஒளிவிட வேண்டும் என்றும், தீமையின் அனைத்து வடிவங்களும் நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், இறைவனின் கரங்கள் இரக்கமுள்ள கரங்கள் மென்மையான கரங்கள் என்றும், அக்கரங்கள் விழுந்தவர்களைத் தூக்கி விடுகின்ற, நம்பிக்கையை நோக்கி வழிநடத்துகின்ற கரங்கள் என்றும் கூறியுள்ளார்

கீழ்நிலையிலிருக்கும் ஒரு நபரை பார்ப்பது என்பது அவர்களை வாழ்வில் உயர்த்துவதற்கான ஒரு பார்வையாக மட்டுமே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், மத்திய தரைக்கடலில் இறையியல் பணி என்பது, நீதியை மேம்படுத்துதல், ஏற்றத்தாழ்வுகளைக் களைதல், பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் வழியாக நற்செய்தி அறிவிப்பு கடந்து செல்கிறது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

மத்திய தரைக்கடலின் சூழல் பரிமாணத்தை முழுமையாக வளர்ப்பதற்கான வலியுறுத்தலை அனைவருக்கும் எடுத்துரைக்கும் ஒரு வாழும் இறையியல் தேவை என்றும், இறைமகன் இயேசு வழியாக நம் கண்ணீர் மற்றும் நம்பிக்கையுடன் இணக்கம் செய்துகொண்ட கடவுள் போல, வரலாற்றோடு உறுதியளிக்கப்பட்ட இறையியலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2024, 15:48