வத்திக்கானில் முதல்படியாக பெண்களுக்கு உயரிய பதவிகள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் மேற்கொண்ட பெல்ஜியம் மற்றும் இலக்ஸம்பர்க் திருத்தூதுப்பயணத்தின்போது, Brussels நகரில் இயேசுசபை அங்கத்தினர்களை சந்தித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட முழு விவரங்களை வெளியிட்டுள்ளது உரோம் நகரின் இயேசு சபை பத்திரிகை.
பெல்ஜியம், இலக்ஸம்பர்க் மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த ஏறக்குறைய 150 இயேசுசபையினரை Brussels நகரில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையில் பெண்களின் இடம் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு வரவேற்பு ஆகியவை குறித்து எடுத்துரைத்துள்ளதை வெளியிட்டுள்ளது இயேசு சபையினரின் La Civiltà Cattolica தினத்தாள்.
ஏனைய திருப்பயணங்களைப்போல், செப்டம்பர் மாதம் 26 முதல் 29 வரை மேற்கொண்ட திருப்பயணத்தின்போது இயேசு சபையினரை சந்தித்து அவர்களோடு உரையாடிய திருத்தந்தை, மதச்சார்பின்மை, பண்பாட்டுமயமாக்கல், ஆயர் மாமன்றம், புலம்பெயர்ந்தோர் என பல தலைப்புக்களில் இயேசுசபையினர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து உரையாடினார்.
திருஅவையில் பெண்களின் இடம் குறித்தக் கேள்விக்கு பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெண்களின் பங்கை அல்லது இடத்தை அருள்பணித்துவம் என்ற தலைப்புக்குள் முடக்கவேண்டாம் எனவும், வத்திக்கானுக்குள் பெண்களை உயரிய இடத்தில் அமரவைப்பதை தற்போது குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டுவருவதாகவும், பல துறைகளில் பெண்கள் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் உதாரணங்களை அடுக்கினார்.
இயேசு சபையினருடன் ஆன உரையாடலின்போது புலம்பெயர்வோரை வரவேற்று, அவர்களுடன் நடந்து, அவர்களை முன்னேற்றி சமூகத்தில் ஒன்றிணைய வைக்கவேண்டிய கடமைகளையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புலம்பெயர்வோருடன் ஆன பணிக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டிய துறவு சபைகளின் சேவைகளின் முக்கியத்துவத்தையும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
ஐரோப்பாவில் குழந்தை பிறப்பு குறைவு, முதியோரின் எண்ணிக்கை அதிகரிப்பு, தேவ அழைத்தல்கள் குறைந்து வருவது, குருக்கள் பற்றாக்குறையுள்ள நாடுகளில் அருள்கன்னியர்களின் மறைப்பணிகள், இயேசுசபையினர் எதற்கும் அஞ்சாமல் செயல்படவேண்டிய தேவை, இயேசு சபை முன்னாள் தலைவர் அருள்பணி Pedro Arupe அவர்களை புனிதராக அறிவிப்பதற்கான முயற்சிகள் போன்ற பல தலைப்புக்களில் தன் கருத்துக்களை இயேசுசபையினருடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்