தேடுதல்

திருத்தந்தையுடன் லைபீரிய அரசுத்தலைவர் திருத்தந்தையுடன் லைபீரிய அரசுத்தலைவர்  (VATICAN MEDIA Divisione Foto)

திருத்தந்தையுடன் லைபீரிய அரசுத்தலைவர், eSwatini மன்னர் சந்திப்பு

லைபீரியாவிற்கும் திருப்பீடத்திற்கும் இடையே நிலவிவரும் நல்லுறவுகள் குறித்தும், கல்வி மற்றும் நலத்துறையில் தலத்திருஅவையின் பணிகள் குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

லைபீரியக் குடியரசின் அரசுத் தலைவர் Joseph Nyuma Boakai அவர்களும், eSwatini என தற்போது அழைக்கப்படும் சுவாசிலாந்தின் மன்னர் மூன்றாம் Mswati அவர்களும் அக்டோபர் 18, வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தையை திருப்பீடத்தில் தனித்தனியாகச் சந்தித்து உரையாடினர்.

லைபீரிய அரசுத்தலைவர் Nyuma Boakai அவர்கள் திருத்தந்தையை சந்தித்தபின் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், வெளிநாடுகளுடன் ஆன உறவுகளுக்கான துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்து உரையாடலில் கலந்துகொண்டார்.    

லைபீரியாவிற்கும் திருப்பீடத்திற்கும் இடையே நிலவிவரும் நல்லுறவுகள் குறித்தும், கல்வி மற்றும் நலத்துறையில் தலத்திருஅவையின் பணிகளுக்கு லைபீரிய அரசு வழங்கிவரும் உதவிகள் குறித்தும், நாட்டின் சமூக பொருளாதார நிலைகள் குறித்தும் இரு தரப்பினருக்கும் இடையேயான கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது.

இதனோடு, இன்றைய பன்னாட்டு விவகாரங்கள், லைபீரிய பகுதியில் இடம்பெறும் பிரச்சனைகள், புலம்பெயர்வோர் பிரச்சனை ஆகியவை குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக திருப்பீட தகவல் தொடர்புத்துறை வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.  

திருத்தந்தையுடன் eSwatini மன்னர் மூன்றாம் Mswati
திருத்தந்தையுடன் eSwatini மன்னர் மூன்றாம் Mswati

மேலும், eSwatini மன்னர் மூன்றாம் Mswati அவர்கள் திருத்தந்தையுடனான சந்திப்பின்போது, சிங்க உலோகச்சிலை, கண்ணாடியிலும் வெள்ளியிலும் செய்யப்பட்ட இரு திராட்சை இரச கிண்ணங்கள் உட்பட சில பொருட்களை பரிசாக வழங்க, திருத்தந்தை தன் சார்பாக புனித பேதுரு திருவுருவத்தையும் புனித பேதுரு பேராலயத்தையும் வர்ணிக்கும் படம் ஒன்றையும், இவ்வாண்டிற்கான அமைதி செய்தி நகலையும், சில திருப்பீட ஏடுகளின் நகல்களையும் மன்னருக்கு பரிசாக வழங்கினார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 October 2024, 16:47