பகிரப்பட்ட மறைப்பணிக்காக திருத்தந்தையின் அக்டோபர் செபக்கருத்து
ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்
‘பகிரப்பட்ட மறைப்பணிகளுக்காக’ என்ற தலைப்பில் அக்டோபர் மாத ஜெபக்கருத்தினை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் கூட்டு பொறுப்புணர்விற்கு அனைத்து நிலையினரும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஒன்றிணைந்து திருஅவையின் பாதையில் செல்லுங்கள் என்று வலியுறுத்தியதுடன், திருஅவையின் பணிகளில் நாம் அனைவரும் இணைப் பொறுப்பானவர்கள் என்றும், திருஅவையின் ஒன்றிப்பில் நாம் அனைவரும் வாழ்கிறோம் என்றும் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வாழ்வில் ஒருவர் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும், தங்களின் பணியில் தங்களுக்குத் தெரிந்த சிறந்த பங்களிப்பை வழங்குவதும் தனது வாழ்வின் வழியாக சான்று பகர்வதுமே நம்முடைய ஒரே பணி என்றும், இதன் அடிப்படையில் நாம் அனைவரும் திருஅவையின் கூட்டுப் பொறுப்பில் இணைந்து செயல்படுகிறோம் என்றும் செபக்கருத்திற்கான செய்தியில் அறிவுறுத்தினார் திருத்தந்தை.
மேலும், அருள்பணியாளர்கள், பொதுநிலையினரின் உயரதிகாரிகள் அல்ல, மாறாக, அவர்களின் மேய்ப்பர்கள் என்று தெளிவுபடுத்தியதுடன், ஆண்டவர் இயேசு கிறிஸ்து நாம் அனைவரும், ஒருவருக்கொருவர் உதவி முழுமையைக் காண உதவ வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
இந்த உணர்வோடு, திருமுழுக்குப் பெற்ற அனைவரும், திருஅவையின் அனைத்து நிலைகளிலும், திருஅவை, தங்கள் இல்லம் என்பதை நினைவில் கொள்ளுமாறும், அதனால், திருஅவையைப் பராமரிக்க வேண்டிய தங்கள் பொறுப்பை நினைவில் கொள்ளுமாறும் திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்.
திருஅவையினுடைய கூட்டுப் பொறுப்பின் அடையாளமாக, அருள்பணியாளர்கள், துறவிகள், பொதுநிலையினர் ஆகியோர் பகிர்ந்து கொள்ளும் ஒன்றிப்பு மற்றும் பணியை ஊக்குவிக்கும் வகையில், திருஅவை, அனைத்து வகையிலும் ஒன்றித்த வாழ்க்கை முறையைத் தொடர்ந்து கடைப்பிடிக்க ஜெபிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்