தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (AFP or licensors)

விசுவாச வளங்கள் அனைத்தும் ஏனையோருடன் பகிரப்படவேண்டியவை

திருத்தந்தை பிரான்சிஸ் : விசுவாசத்தை பிறரோடு பகிரும்போது, வாழ்வின் அர்த்தம், நம்பிக்கை, மகிழ்வு ஆகியவை குறித்த நம்பத்தகுந்த சான்று மிக முக்கியத்துவம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தென் கிழக்கு ஜெர்மனியின் Dresden-Meissen மறைமாவட்டத்திலிருந்து வந்திருந்த எவாஞ்சலிக்கல் லூத்ரன் கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளை இப்புதனன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு திருப்பயணத்தில் கிட்டும் ஆன்மீகக் கொடைகளை மற்றவர்களுக்கு அறிவிக்கும் நோக்கத்தில் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளது குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.

நம் விசுவாச வளங்கள் அனைத்தும் இறைவன் நமக்கு வழங்கிய கொடைகள் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை, இந்த வளங்கள் அனைத்தும் நமக்கென மட்டுமே கொடுக்கப்படவில்லை, மாறாக, அனைவருடனும் பகிரப்படவேண்டும் என்ற நோக்கத்தில் வழங்கப்படுகின்றன என்றார்.

இன்றைய உலகில் நம்மை சுற்றியிருப்பவர்களிடம் வாழ்வின் அர்த்தம், நம்பிக்கை, மகிழ்வு ஆகியவை குறித்து நாம் மனவுறுதியுடனும் தாழ்ச்சியுடனும் பகிர்ந்துகொள்ளவேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்த திருத்தந்தை, விசுவாசத்தை பிறரோடு பகிரும்போது நம்பத்தகுந்த சான்று மிக முக்கியத்துவம் நிறைந்தது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

சுயவிருப்பப் பணியாளர்களை பெரும்பான்மையினராகக் கொண்டிருக்கும் இந்த திருப்பயணக்குழு, தங்கள் இலவச சேவைகளால் நம்பத்தகுந்த சான்று வாழ்வை மேற்கொள்கிறது என்பதையும் அவர்களிடம் கூறினார் திருத்தந்தை.

கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் இருக்கும் எதிர்நோக்கின் சான்றுகளாக செயல்படவேண்டிய அவசியத்தையும் அந்த லூத்ரன் திருப்பயணிகள் குழுவிடம் மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 October 2024, 13:40