தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ்.  (ANSA)

ஒரே நம்பிக்கையால் உயிரூட்டப்பட்ட மக்களின் பயணமே ஆயர் மாமன்றம்

இறைவனின் குரலைக் கேட்க தங்களுக்கு முழு உரிமை இருக்கின்றது என்று ஆணவத்துடன் எண்ணுபவர்களால் கடவுளின் குரலைக் கேட்க முடியாது. திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஆயர் மாமன்றம் என்பது ஒரே நம்பிக்கையால் உயிரூட்டப்பட்ட மக்களின் பயணம் என்றும், அம்மக்களின் வரலாறு, வாழ்க்கை, கனவுகள், மற்றும் நம்பிக்கைகளை இறைவன் இப்பயணத்தில் நமது கைகளில் ஒப்படைத்துள்ளார் என்றும் குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 5 சனிக்கிழமை ஹேஸ்டாக் ஆயர் மாமன்றம் என்ற தலைப்பில் இரண்டு குறுஞ்செய்திகளைப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நன்றியுணர்வுடனும் தாழ்ச்சியுடனும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஆயர் மாமன்றம் என்பது ஒரே நம்பிக்கையால் உயிரூட்டப்பட்ட சகோதர சகோதரிகளின், மகத்தான மக்களின் வரலாறு, கனவுகள் மற்றும் நம்பிக்கைகளை இறைவன் நம் கைகளில் வைக்கும் ஒரு பயணம் என்றும், இறைத்தந்தை நம்மை எங்கு அழைத்துச்செல்ல விரும்புகின்றார் என்பதை உடன் சகோதரிகளுடன் இணைந்து நாம் கண்டறியலாம் என்றும் முதல் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவனின் குரலைக் கேட்க தங்களுக்கு முழு உரிமை இருக்கின்றது என்று ஆணவத்துடன் எண்ணுபவர்களால் கடவுளின் குரலை ஒருபோதும் கேட்க முடியாது என்றும், மாறாக கடவுளின் வார்த்தையை நன்றியுணர்வு மற்றும் தாழ்ச்சியுடன் ஏற்று, கடவுள் நமக்காகவும் நமது உடன் சகோதர சகோதரிகளின் நலனுக்காகவும் கொடையாகக் கொடுத்துள்ளார் எனக் கருத வேண்டும் என்பதே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரண்டாவது குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 October 2024, 13:42