உலக அமைதிக்காக அன்னை மரியாவை நோக்கி செபம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இறைமகன் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ள அழைப்புவிடுக்கும் அன்னைமரியின் அன்பு நிறைந்த பார்வை நமக்குத் தேவை என்றும், அமைதியின் மகிழ்ச்சியை, உடன் பிறந்த உணர்வினை இழந்த மனித குடும்பத்தின் மீது அன்னை மரியின் பார்வை திரும்ப அருள்வேண்டுவோம் என்றும் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 6 ஞாயிற்றுக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் மாலை 5 மணியளவில், இந்திய இலங்கை நேரம் இரவு 8.30 மணியளவில் உரோம் மேரி மேஜர் பெருங்கோவில் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக அமைதிக்காக அன்னை மரியிடம் செபித்தார்.
அன்னை மரியாவை நோக்கித் திருத்தந்தையின் செபம்
ஓ மரியே எங்கள் அன்னையே, இதோ மீண்டும் நாங்கள் உம் முன் இருக்கின்றோம். இந்த நேரத்தில் எங்கள் இதயங்களை கனமாக்கும் துயரங்கள் மற்றும் கடினமான சூழல் என்ன என்பதை நீர் அறிவீர். உம்மே ஏறெடுத்துப் பார்த்து உமது கண்களோடு எங்கள் கண்களை இணைத்து இதயப்பூர்வமாக உம்மை நம்பி வேண்டுகின்றோம்.
வாழ்க்கையின் கடினமான சோதனைகள் மற்றும் பயம் நிறைந்த சூழல்களில் துணிவுடனும் தைரியத்துடனும் நீர் இருந்தீர். எல்லாவற்றையும் கடவுளிடம் ஒப்படைத்து அன்பினால் அவருக்கு பதிலளித்தீர். துணிவு நிறைந்த பெண்ணாக எலிசபெத் அம்மாவிற்கு உதவ விரைந்து சென்றீர். கானாவூர் திருமணத்தில் திருமண வீட்டாரின் தேவைகளை அறிந்து உதவினீர். தூய ஆவியின் ஆற்றலுடன், கல்வாரி மலையில் உயிர்ப்பின் நம்பிக்கையை ஒளிரச்செய்தீர், பயத்துடன் மேலறையில் பதுங்கி இருந்த சீடர்களுக்கு துணிவை அளித்து, தூய ஆவியைக் கொடையாகப் பெற உதவினீர்.
எங்களது கூக்குரலுக்கு செவிசாயும். உமது மகன் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ள அழைப்புவிடுக்கும் உமது அன்பு நிறைந்த பார்வை எங்களுக்குத் தேவை, அநீதியால் ஒடுக்கப்பட்டு, போர்களினால் அழிந்துபோகும் இக்கால மக்களாகிய எங்களின் துயரங்களை ஏற்க நீர் தயாராக உள்ளீர். தங்களது அன்புக்குரியவர்கள் மற்றும் குழந்தைகளின் மரணத்தால் துன்புறுவோரின் முகங்களில் உள்ள கண்ணீரைத் துடைத்து, எங்களை வேதனையிலிருந்து எழுப்பும், அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள். என்ற எசாயா இறைவாக்கினரின் வார்த்தைகள் நிறைவேறச் செய்யும்.
அமைதியின் மகிழ்ச்சியை, உடன் பிறந்த உணர்வினை இழந்த மனித குடும்பத்தின் மீது உமது பார்வையைத் திருப்பும். வாழ்வைக் காத்து போரைப் புறக்கணிக்கவும், துன்புறுபவர்கள், ஏழைகள், பாதுகாப்பற்றவர்கள், நோயாளிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கவும், நாங்கள் வாழ்கின்ற பொதுவான இல்லமாகிய இந்தப் பூமியைக் காக்கவும் உதவிபுரியும். அழிந்துபோகின்ற எம் உலகிற்காகப் பரிந்து பேசும்.
இறை இரக்கத்தின் அன்னையே, அமைதியின் அரசியே, வெறுப்பை உருவாக்குபவர்களின் மனதை மாற்றவும், இறப்பை உருவாக்கும் ஆயுதங்களின் சத்தத்தை அடக்கவும், மனிதனின் இதயத்தில் உருவாகும் வன்முறையை அணைக்கவும், நாடுகளை ஆள்பவர்களின் செயல்களில் அமைதிக்கான திட்டங்களை ஊக்குவிக்கவும் உதவும். இதனால் பாலைநிலம் செழுமையான தோட்டமாகும்; செழுமையான தோட்டம் அடர்ந்த காடாகத் தோன்றும். நீதி பாலைநிலத்தில் குடிகொண்டிருக்கும்; ஓ தூய உரோம் பாதுகாவலியான மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்