ஒன்றிப்பின் பயணத்தில் இறையியல் உரையாடல் மிக முக்கியமானது
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஒற்றுமையை நோக்கிய நமது பயணத்தில் இறையியல் உரையாடல் மிக இன்றியமையாதது என்றும், நம்பிக்கையில் ஒருமைப்பாடு என்கின்ற ஒற்றுமைக்காக ஏங்குகின்ற நாம், உண்மை, அறம், வாழ்க்கைக்கான உரையாடல் ஆகியவற்றிலிருந்து அந்த ஒற்றுமையானது பிரிக்கப்படக்கூடாது என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 9 சனிக்கிழமை வத்திக்கானில் கத்தோலிக்க கிழக்கத்திய அசிரிய தலத்திருஅவை முதுபெரும்தந்தை மூன்றாம் அவா, கத்தோலிக்க திருஅவை மற்றும் கிழக்கு அசீரிய தலத்திருஅவைக்கு இடையிலான இறையியல் உரையாடல் ஒருங்கிணைந்த ஆணையத்தின் உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நமது விசுவாசத்தினால் நம்பிக்கையில் ஒருமைப்பாடு என்கின்ற ஒற்றுமை ஏற்கனவே திருஅவையின் புனிதர்களால் அடையப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், முழு ஒற்றுமைக்கான பாதையில் அவர்கள் சிறந்த வழிகாட்டிகளாக முன்னோடிகளாகத் திகழ்கின்றனர் என்றும் கூறினார்.
இறையியல் உரையாடலுக்கான ஒருங்கிணைந்த ஆணையத்தின் உறுப்பினர்கள் இல்லையெனில், மறைக்கோட்பாடு மற்றும் மேய்ப்புப்பணிக்கான உறுதிகள் என்பது சாத்தியமில்லை என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும் என்ற விவிலிய வரிகளையும் மேற்கோள்காட்டினார்.
சீரோ கிழக்கத்திய பாரம்பரியம் போற்றிப்புகழும் நினிவேயின் புனித பெரிய ஐசக் அவர்கள் உரோம் தலத்திருஅவை மறைசாட்சியர்களின் பட்டியலில் இடம் பெறுவார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறந்த ஆசிரியராகவும் புனிதராகவும் எல்லா பாரம்பரிய கிறிஸ்தவர்களாலும் அவர் நன்கு அறியப்பட்டவர் என்றும் கூறினார்.
நினிவேயின் புனித பெரிய ஐசக்கின் பரிந்துரையின் வழியாக நமது கடவுளும் மீட்பருமான கிறிஸ்துவின் தாய் ஆசீர்வதிக்கப்பட்ட தூய கன்னி மரியா, போரினால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய கிழக்கின் கிறிஸ்தவர்கள் அனைவரும் உயிர்த்த கிறிஸ்துவிற்கு சான்று பகர்பவர்களாக இருக்க உதவட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்