தேடுதல்

அஓஸ்தா மறைமாவட்ட பிரதிநிதிகள் மற்றும் தூய பெர்னார்டு பகுதி துறவறத்தார் உடன் திருத்தந்தை அஓஸ்தா மறைமாவட்ட பிரதிநிதிகள் மற்றும் தூய பெர்னார்டு பகுதி துறவறத்தார் உடன் திருத்தந்தை   (Vatican Media)

மலையேற்றம் செய்பவர்களின் பாதுகாவலரான தூய பெர்னார்டு

அஓஸ்தா மறைமாவட்டத்தின் தூய பெர்னார்டு ஒரு சிறந்த போதகர், தூய்மையற்ற இதயங்களையும் தொடும் அளவிற்கு திறமையாக நற்செய்தியை அறிவிப்பவர் .

மெரினா ராஜ் – வத்திக்கான்

தூய பெர்னார்டு மலையேறுபவர்கள் மற்றும் பயணிகளுக்கான பாதுகாவலராக அறிவிக்கப்பட்டதன் நூற்றாண்டு யூபிலி விழாவில் இறைத்திருஉளம் கொண்டு அவர் செய்த நற்செய்தி அறிவித்தல், அனைவரையும் வரவேற்றல், அமைதியை மேம்படுத்துவதற்கான செயல் ஆகியவை குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 11 திங்கள்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் அஓஸ்தா மறைமாவட்ட பிரதிநிதிகள் மற்றும் தூய பெர்னார்டு பகுதி துறவறத்தார் என ஏறக்குறைய 120 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நற்செய்தி அறிவிப்பு

அஓஸ்தா மறைமாவட்டத்தின் முதன்மையான திருத்தொண்டராக இருந்த பெர்னார்டு ஒரு சிறந்த போதகர், தூய்மையற்ற இதயங்களையும் தொடும் அளவிற்கு திறமையாக நற்செய்தியை அறிவிப்பவர் என்றும், நம்பிக்கை மற்றும் ஒப்புரவின் சிறந்த பரிசாக அடையாளமாக அவர் இருந்தார் என்றும் கூறினார் திருத்தந்தை.

தூய ஆவியின் சிறந்த மகிழ்வின் அனுபவத்தையும் சாராம்சத்தையும் பெற்றவர் போல நற்செய்தியை அவர் அறிவித்தார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், 1081ஆம் ஆண்டு நோவாராவில் இறக்கும் வரை துணிவுடன் நற்செய்தியை அறிவிப்பதற்காகத் தன்னை அர்ப்பணித்தவர் அவர் என்றும் கூறினார்.

அனைவரையும் வரவேற்றல்

ஆல்பன் மலை மற்றும் வெள்ளை மலையைக் கடக்கும் திருப்பயணிகளை வரவேற்று பராமரிக்கும் பணி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது என்றும், இத்தாலி மட்டுமல்லாது சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் என பன்னாட்டு பயணங்களை மேற்கொள்ளும் மக்களை வரவேற்றவர் அவர் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

பயணத்தின் போது காணாமல் போகின்றவர்கள், இறந்து போகின்றவர்கள், குளிரினால் தாக்கப்படுபவர்களைப் பாதுகாக்க இரண்டு இடங்களை நியமித்து அவர்களுக்கு உதவினார் என்றும், அது இன்று வரை கிறிஸ்து இங்கு போற்றப்படுகின்றார் பாதுகாக்கப்படுகின்றார் என்ற நோக்கத்தோடு இயங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

உடலாலும் உள்ளத்தாலும், வேறுபாடு காட்டாது அனைவருக்கும் திறந்த உள்ளத்துடன் உதவி கேட்கும் எவரையும் வரவேற்று கவனித்துக் கொள்கின்றது என்றும், நற்கருணை ஆண்டவரின் செபத்துடன் இந்த செயலானது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

அமைதியை மேம்படுத்த உழைத்தல்

அமைதியை மேம்படுத்துவதற்காக உழைத்த தூய பெர்னார்டு திருத்தந்தை ஏழாம் கிரகோரிக்கு எதிராகப் போர் செய்த பேரரசர் நான்காம் எரிக்கோவை அமைதிப்படுத்துவதற்காக பவியாவிற்கு பயணம் மேற்கொண்டவர் என்றும், ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்த அவருக்கு அப்பயணம் உயிரைப் பறிக்கும் பயணமாக அமைந்தது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மலையேற்றத்திற்குப் பயன்படும் இரண்டு சின்னங்களான பனிக் கோடாரி மற்றும் கயிறு, தூய பெர்னார்டின் பண்புகளை நமக்கு எடுத்துரைக்கின்றது என்றும், பனியைக் கீர உடைக்க உதவும் கோடாரி போன்று கடினமான இதயங்களைக் கொண்ட ஆன்மாக்களை மனமாற்றம் செய்யவும், மேலே ஏறிச்செல்ல பயன்படும் கயிறு போன்று வாழ்வின் இலக்கை அடைய முன்னோக்கிச் செல்லவும் நாம் பிறருக்கு உதவவேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 November 2024, 13:55