கிறிஸ்தவ ஒன்றிப்பிலிருந்து ஒருங்கிணைந்த பயணத்தை பிரிக்கமுடியாது
மெரினா ராஜ் - வத்திக்கான்
உரையாடலின் பாதையில் ஒருங்கிணைந்த பயணம் மற்றும் பணி என்னும் இரண்டு செயல்கள் மிக முக்கியமானவை என்றும், கிறிஸ்தவ ஒன்றிப்பிலிருந்து ஒருங்கிணைந்தப் பயணத்தை பிரிக்கமுடியாது, ஏனெனில் இரண்டும் நாம் பெற்ற திருமுழுக்கு அருளடையாளத்தினால் இணைக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 11 திங்கள்கிழமை வத்திக்கானில் சீரோ-மலங்கரா தலத்திருஅவையின் ஆயர் தோமா அவர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கைக் குறித்த கோட்பாடுகள் அனைத்தும் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள நமது கிறிஸ்தவ ஒன்றிப்பின் உறுப்பினர்கள் அனைவரும், ஒருங்கிணைந்த பயணத்தில் கவனம் செலுத்த அழைப்புவிடுப்பதாகவும் தெரிவித்தார்.
பணி என்பது கிறிஸ்தவ ஒன்றிப்புப் பயணத்தின் முடிவு மட்டுமல்ல, அதன் வழிமுறை என்றும், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்குச் சாட்சி கொடுப்பதற்கு ஒன்றாகச் செயல்படுவதே நம்மை நெருக்கமாகக் கொண்டு வருவதற்கான சிறந்த வழி என்றும் கூறினார் திருத்தந்தை.
ஆலோசனை வடிவங்கள் மற்றும் வரைவுக்குட்பட்ட கிறிஸ்தவ ஒன்றிப்பு சினோடல் நடைமுறைகளை கற்பனை செய்ய வேண்டும் என்றும், பகிரப்பட்ட மற்றும் மிகவும் அவசரமுள்ள விடயங்களில் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Zizioulas என்னும் பெரிய அறிஞரின் கிறிஸ்தவ ஒன்றிப்பு பற்றியக் கருத்துக்களை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இறைமனிதரான அவர், தலத்திருஅவைகளுக்கு இடையேயான மொத்த கூட்டத்தின் நாள் எனக்கு நன்றாக தெரியும். அது இறுதித்தீர்ப்புக்கு அடுத்த நாள் என்று கூறுவார் என எடுத்துரைத்தார் திருத்தந்தை.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து நடக்கவேண்டும், ஒன்றிணைந்து பணியாற்றவேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள் ஒன்றிணைந்த பயணத்தில் சீரோ மலங்கரா தலத்திருஅவை உதவும் என்று தான் நம்புவதாகவும் எடுத்துரைத்தார்.
கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர் என்ற நற்செய்தி வரிகளை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், நமது 16ஆவது உலக ஆயர்கள் மாமன்றம் முன்மொழிந்தபடி, ஒரு நாள் நாம் அனைவரும் இணைந்து நற்செய்தி பற்றிய ஒரு கிறிஸ்தவ ஆயர் கூட்டத்தைக் கொண்டாடலாம் என்றும் கூறினார்.
எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்” என்பதற்கேற்ப (யோவான். 17:21) உறுதியளிக்கவும், ஜெபிக்கவும், பிரதிபலிக்கவும், ஒரு சிறந்த கிறிஸ்தவ சாட்சிக்கு ஒன்றாக உறுதியளிக்கவும் இக்கூட்டம் இருக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்